Post No. 13.117
Date uploaded in London – — 23 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒலியால் உயரத் தூக்கப்படும் பாறை! – திபெத்திய மர்மம்!!
ச.நாகராஜன்
டாக்டர் ப்ரூஸ் கேதி, எட்வர்ட் டேவிட் ஹெ. சைல்ட்ரஸ் 1-9-2011 (Bruce Cathie, Ed. David H. Childress, September 1, 2011) அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.
திபெத்தில் லாமாக்கள் உயரமான இடங்களுக்கு பாறைகளை ஒலி அலைகள் மூலமாகக் கொண்டு செல்வர் என்பதைப் பலமுறை படித்திருக்கிறேன்.
அது பற்றி எழுதியுமிருக்கிறேன்.
அதை நேரில் பார்த்து படமும் பிடித்த ஒருவரின் நிஜமான அனுபவம் இது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஜெர்மானிய மொழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதை ஹென்றி கியல்ஸன் (Henry Kielson) என்பவர் ‘தி லாஸ்ட் டெக்னிக்ஸ்’ (The Lost Techniques) என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஸ்வீடனைச் சேர்ந்த டாக்டர் ஜாரி (Dr Jari) என்பவர் கியல்ஸனின் நண்பர். அவர் ஆக்ஸ்போர்டில் படித்தவர். ஒரு சமயம் திபத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1939-ம் ஆண்டில் டாக்டர் ஜாரி எகிப்துக்கு இங்லீஷ் ஸயிண்டிபிக் சொஸைடியில் கலந்து கொள்ள செல்ல வேண்டியதாயிருந்தது. அங்கு திபெத்திய நண்பர் அனுப்பிய ஒருவரை அவர் சந்தித்தார். உடனடியாக அவரை திபத்திற்கு ஒரு லாமாவிற்கு சிகிச்சை அளிக்க வரவேண்டும் என்ற வேண்டுகொள் விடப்பட்டிருந்தது.
நீண்ட நெடும் பயணம் மேற்கொண்ட டாக்டர் விமானம் மூலமாகவும் யாக் வண்டிகள் மூலமாகவும் திபெத்திய மடாலயத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு தான் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் வயதான லாமா இருந்தார். அவருக்குத் தான் சிகிச்சை தேவை.
டாக்டர் ஜாரி அங்கு சில காலம் தங்கி இருந்தார். திபெத்தியர்களுடன் நட்பு பாராட்டியதால் பல அரிய விஷயங்களை அவர் அறிந்து கொண்டார்.
ஒரு நாள் அவரது நண்பர் மடாலயத்திற்கு அருகிலிருந்த ஒரு இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். அவர் அங்கு பார்த்தது சரிவான ஒரு புல்தரை. அதைச் சுற்றி வடமேற்கே உயரமான சிகரங்கள் இருந்தன. 250 மீட்டர் உயரத்தில் பாறையிலான சுவரின் மேல் குகை வாயில் போல ஒரு பெரிய துளை இருந்தது.
இந்த துளைக்கு முன்னால் ஒரு பெரிய மேடை இருந்தது. அதன் மேல் துறவிகள் ஒரு பாறைச் சுவரைக் கட்டிக் கொண்டிருந்தனர். இதை அணுகுவதற்கான ஒரே வழி சிகரத்தின் உச்சியிலிருந்து கயிறைக் கட்டிக் கொண்டு மெதுவாக கீழே இறங்குவது தான்.
புல்தரையில் நடுவில் சிகரத்திலிருந்து 250 மிட்டர் தூரத்தில் ஒரு பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்ட பாறை இருந்தது. அதன் நடுவே கிண்ணம் போல நடுவில் சுரண்டப்பட்டு இருந்தது. அந்த கல்லால் ஆன கிண்ணத்தின் குறுக்களவு ஒரு மீட்டர். அதன் ஆழம் 15 செண்டிமீட்டர். இந்த உட்குழியில் எருதுகளால் கொண்டு வரப்பட்டு ஒரு பாறை உள்ளே வைக்கப்பட்டது. இந்தப் பாறை ஒரு மீட்டர் அகலம் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. இந்த கல் பாறையிலிருந்து 90 டிகிரி அரை வட்ட வடிவில் 63 மீட்டர் தூரத்தில் 18 இசைக் கருவிகள் அமைக்கப்பட்டன.
63 மீட்டர் ஆரம் என்பது துல்லியமாக அளக்கப்பட்டது. இசைக் கருவிகளில் 13 டிரம்களும் 6 டிரம்பட்டுகளும் இருந்தன. எட்டு டிரம்கள் ஒரு மீட்டர் குறுக்களவைக் கொண்டிருந்தன. நீளம் ஒன்றரை மீட்டர். நான்கு டிரம்கள் 0.7 மீட்டர் குறுக்களவுடனும் ஒரு மீட்டர் நீளத்துடனும் மத்திம அளவைக் கொண்டிருந்தன. ஒரே ஒரு சின்ன டிரம் மட்டும் 0.2 மீட்டர் குறுக்களவும் 0.3 மீட்டர் நீளமும் கொண்டிருந்தது. டிரம்பட்டுகள் அனைத்தும் ஒரே அளவையே கொண்டிருந்தன.
டிரம்பட்டுகள் 3.12 மீட்டர் நீளமும் 0.3 மீட்டர் திறப்பையும் கொண்டிருந்தன. பெரிய டிரம்களும் டிரம்பட்டுகளும் கற்பாறையை நோக்கி சரியாக இருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. பெரிய டிரம்கள் அனைத்தும் ஒரு மில்லிமீட்டர் இரும்புத் தகடால் செய்யப்பட்டிருந்தன. அதன் எடை 150 கிலோ. அவை ஐந்து பிரிவுகளாக இருந்தன. டிரம்கள் ஒரு பக்கம் திறக்கப்பட்டு இருந்தன. அடுத்த பக்கமோ உலோகத் தகடு இருந்தது. அதன் மீது துறவிகள் தோலால் ஆன ஒரு தடியினால் அடித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு இசைக்கருவிக்கும் பின்னாலும் துறவிகள் வரிசையாக இருந்தனர்.
கற்பாறை அதன் இடத்திலிருந்த போது சின்ன டிரம்முக்குப் பின்னால் இருந்த ஒரு துறவி இசை நிகழ்ச்சி தொடங்கலாம் என்பதை சமிக்ஞையால் அறிவித்தார். சின்ன டிரம் ஒரு கூரிய ஒலியை எழுப்பியது. மற்ற இசைக்கருவிகள் பேரொலியைக் கிளப்பிய போதும் இந்த சின்ன டிரம்மின் ஒலி தனியாகக் கேட்டது. எல்லாத் துறவிகளும் ஒரு பிரார்த்தனையைப் பாடினர். நம்பமுடியாத அளவுக்கு ஓசையைக் கூட்டிக் கொண்டே சென்றனர். முதல் சில நிமிடங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. டிரம் ஓசை அதிகரிக்க அதிகரிக்க பெரிய பாறை அசைய ஆரம்பித்தது. இங்கும் அங்குமாக ஆடியது. திடீரென்று அது வானில் எழும்பியது. 250 மீட்டர் உயரத்தில் உள்ள குகையின் வாயிலின் எதிரே இருந்த மேடையை நோக்கி வெகு வேகமாகச் சென்றது. மூன்று நிமிடங்கள் கழித்து அது மேடையில் கீழே இறங்கியது..
துறவிகள் தொடர்ந்து புதிய பாறைகளை புல்தரையில் கொண்டு வந்தனர். இதே போல மணிக்கு 5 அல்லது 6 ப்ளாக் எனப்படும் பாறைகளை மேலே தூக்கினர். கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை ஒரு பாறை உடைந்தது. அந்த உடைந்த பாறைகளை துறவிகள் அகற்றினர்.
டாக்டர் ஜாரி கற்களைத் தூக்கி வீசி எறிவதைப் பற்றி அறிவார். லினவெர், ஸ்பால்டிங் ஹக் (Linaver, Spalding and Huc) ஆகிய திபெத்திய நிபுணர்கள் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் யாரும் இதை நேரில் பார்த்ததில்லை. டாக்டர் ஜாரி தான் இதைப் பார்த்த முதல் அயல்நாட்டுப் பயணி.
அனைவரையும் வசியப்படுத்தும் ஹிப்னாடிஸத்திற்கு தான் ஆட்பட்டிருக்கிறோமோ என்று சந்தேகப்பட்ட அவர் இரண்டு படங்களைப் பிடித்தார். அவர் தான் எதைப் பார்த்தாரோ அதை அந்தப் படங்களில் கண்டார். திருப்தி கொண்டார்.
டாக்டர் ஜாரி வேலை பார்த்து வந்த இங்க்லீஷ் சொஸைடி அவரிடமிருந்த இரு படங்களையும் கைப்பற்றி அவற்றை இரகசியமானவை என்று குறித்து வைத்து விட்டது. 1990 முடிய அதை யாரும் பார்க்க முடியாது.
**
ஒலியால் ஒரு பாறையை உயரத் தூக்க முடியும் என்பதை பல திபெத்திய நூல்கள் கூறுகின்றன. லாமாக்கள் கூறியுள்ளனர்.
டாக்டர் ஜாரி தான் இதைத் தன் கண்ணால் நேரில் பார்த்து படம் பிடித்து வெளி உலகிற்கு அறிவித்த முதல் மேலை நாட்டுப் பயணியாவார்.
இப்படி திபெத்திய மர்மங்கள் ஏராளம் உண்டு. ஒலி அலையின் சக்தி உள்ளிட்ட மர்மங்களைப் பற்றிப் படித்தால் பிரமிப்பை அடைவோம்.
***