மலைமகள் – திருமகள் வேடிக்கையான உரையாடல்! (Post No.13,175)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.175

Date uploaded in London – — 25 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மலைமகள் – திருமகள் வேடிக்கையான உரையாடல்!

ச.நாகராஜன்

ஒரு முறை பார்வதி திருமகளை நோக்கி, “சிவன் யாசித்து வந்த சோறு இது தான்” என்று காட்டினாள்.

திருமகளோ, “மண்ணைத் தான் நான் கண்டேன்” என்றாள்.

பார்வதி, “சிவனுக்கு ஒரே ஒரு காளை தான்” என்றாள்.

உடனே திருமகள், “ அது சரி, எருதை மேய்த்து அதைக் கட்டிப் போடுகின்ற இடையன் யார்?” என்று கேட்டாள்.

பார்வதி, “சிவன் ஒருவருக்குத் தூது போனார்” என்று பதிலிறுத்தாள்.

“அந்த தூது போன கதையைச் சொல்லத் தொடங்கினால் அது ஒரு பாரதம் ஆகி விடும்” என்றாள் அவள்.

“தன்னிடம் வைக்கப்பட்ட ஓட்டை சிவன் திருடினான்”

“ஆஹா, கட்டுண்ட செய்தியை யாம் அறிவோம்”

“சிவன் சபையில் கூத்தாடினான்”

“அந்த ஆட்டத்தை பாம்பு அறியாதா, என்ன?”

“சரி, சிவன் விஷத்தை உண்டது என்ன?”

“மண் உண்டதை நாங்கள் அறிய மாட்டோமா, என்ன?”:

இப்படியாக விவரமாக மலைமகளான பார்வதியும் திருமகளும் பேசியவாறே விளையாடிக் கொண்டே இருக்கின்றனர்.

இவர்களைத் துணையாகக் கொண்டே பொருந்தி வரும் புத்திரர்களுடனும் மித்திரர்களுடனும் மனைவியுடனும் கூடி  மேலும் மிகுதியாக வாழக் கடவீர்களாக!

இப்படி ஒரு அருமையான பாடலை சிவபிரகாச சுவாமிகள் அருளியுள்ளார்.

பாடல் இதோ:

கவுரிகமலாயர னிரந்த சோறிதுவெனக் கமலைமண் கண்டேனெனக்

காளையொன்றே யரற்கென மாடுமேய்த்ததைக் கட்டிடைய னாரோவெனச்

சிவனொருவர் தூதென்ன வத்தூது சென்ற கதை செப்பிலொரு பாரதமெனச்

சோரோடு திருடினா னரனெனக் கட்டுண்ட செய்தி நாமறிவோமென,

அவையினடமாடினா னரனென்ன வவ்வாட லரவமறியாதோவென,

ஆலவதையுண்டனனரனென மண்ணுண்டவதனை யறியாதோவென,

விவரமொடுமலைமகளு மலர் மகளு மிவ்வாறு விளையாடு மிவர்கடுணையா,

மேவிவரு புத்ரமித்திர களத்திரருடன் மேன்மேலு மிக வாழியே!

பாடலின் பொருள்:

கவுரி – உமா தேவியானவள்

கமலாய் – திருமகளே

அரன் இரந்த சோறு இது என – சிவபிரான் யாசித்து வந்த சோறு இதுவென

கமலை – திருமகளானவன்

மண் கண்டேன் என – மண்ணைத் தான் நான்  கண்டேன் என்று சொல்ல

அரற்கு காளை ஒன்றே என – சிவனுக்கு எருது ஒன்று தான் என்று கூற

மாடு மேய்த்து அதைக் கட்டும் இடையன் ஆரோ என – அந்த எருதை  மேய்த்து அதைக் கட்டுகின்ற இடையன் யாரோ என்று கேட்க

சிவன் ஒருவன் தூது என – சிவன் ஒருவனுக்குத் தூது போனான் என்று சொல

அத்தூது சென்ற கதை செப்பில் ஒரு பாரதம் என – அந்த தூது போன கதையைச் சொன்னால் அது ஒரு பாரதம் ஆகும் என்று சொல்ல

அரன் சேர் ஓடு திருடினான் என – அரன்  தன்னிடத்தில் வைக்கப்பட்ட ஓடைத் திருடினான் என்று சொல்ல

கட்டுண்ட செய்தி நாம் அறிவோம் என- கட்டுண்ட சங்கதியை யாம் அறிவோம் என்று சொல்ல

அரன் அவையில் நடம் ஆடினான் என – சிவபிரான் சபையில் கூத்தாடினான் என்று சொல்ல

அவ்வாடல் அரவம் அறியாதோ என – அந்த ஆட்டத்தை பாம்பு அறியாதா என்ன என்று கேட்க

அரன் ஆலமதை உண்டனன் என – சிவபிரான் விஷத்தை உண்டான் என்று சொல்ல

மண் உண்ட அதனை அறியாதோ என – மண் உண்டதை அறிய மாட்டோமா என்ன என்று கூற

விவரமொடு – இவ்வாறு விவரமாக

மலைகளும் – மலையரையன் மகளாகிய பார்வதியும்

மலர்மகளும் – திருமகளும்

ஆக இவ்வாறு விளையாடும் இவர்கள் துணையா – இப்படி விளையாடுவோர்களாகிய இவர்களைத் துணையாகக் கொண்டு

மேவி வரு – பொருந்தி வருகின்ற

புத்ர மித்திரகளத்திரருடன் – புத்திர மித்திர களத்திரருடன்

மேன் மேலும் மிக வாழி – மேலும் மிகுதியாக வாழக் கடவீர்

  மித்திரன் என்றால் நண்பன் என்று பொருள்

களத்திரம் என்றால் மனைவி என்று பொருள்

 சிவபிரான் ஓடு திருடினார் என்பது திருநீலகண்டரின் திருவோட்டை  மறைத்த சரித்திரத்தைக் குறிக்கிறது.

அவ்வாடல் அரவம் அறியாதோ என்பது காளிங்கமர்த்தன சரித்திரத்தைக் குறிக்கிறது.

இப்படி ஒரு அருமையான பாடலை அருளியுள்ளார் சிவப்பிரகாச சுவாமிகள்!

***

Leave a comment

Leave a comment