
Ram Temple, Ayodhya
Post No. 13.240
Date uploaded in London – — 14 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (1) – ராமாயணம் எழுந்த கதை!
ச.நாகராஜன்
உலகின் ஆதி கவியான வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணம் சூரிய சந்திரர் உள்ளவரை பூமியில் அனைவருக்கும் வழிகாட்டும் காவியமாக அமையும்.
ராமாயணத்தில் 61 சாபங்கள் வருகின்றன. இவற்றை முழுவதுமாக இந்தத் தொடரில் பார்க்கலாம்.
ஆனால் ராமாயணம் எழுந்ததே ஒரு சாபத்தினால் தான்!
அதை முதலில் பார்ப்போம்.
ஒரு முறை தமஸா நதி தீரத்தில் ஸ்நானம் செய்யச் சென்ற வால்மீகி முனிவர் தனது சிஷ்யரான பரத்வாஜரை நோக்கி, “எனது உதக பாத்திரம் கீழே வைக்கப்படட்டும். எனது மரவுரி என்னிடம் கொடுக்கப்படட்டும். சிரேஷ்டமான தமஸா நதியில் ஸ்நானம் செய்யப் போகிறேன்” என்றார்.
மரவுரி தரப்பட்டது. அதை கையில் எடுத்துக் கொண்ட வால்மீகி முனிவர் நாற்புறமும் பார்த்தவாறே சஞ்சரித்தார்.
அப்போது அவர் ஒரு அற்புதமான இணைபிரியாத இரு க்ரௌஞ்ச பக்ஷிகளைக் கண்டார். அந்த ஆண்- பெண் ஜோடியை அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு குரூரமான வேடன் அந்த ஜோடியில் ஆணைக் குறி பார்த்து அடித்துக் கீழே தள்ளினான். பெண் பறவை ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தன் ஜோடிப் பறவையைப் பார்த்து கதறிற்று.
இதைப் பார்த்த முனிவர் திடுக்கிட்டார். அவர் இதயத்தில் கருணை பொங்கியது.
அவர் வாயிலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன!
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாஸ்வதீ: சமா: |
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காம மோஹிதம் ||
– பாலகாண்டம் இரண்டாம் ஸர்க்கம் – பிரம்மாவின் வருகை -ஸ்லோக எண் 13
இதன் பொருள் :
நிஷாத – ஓ, வேடனே!
க்ரௌஞ்சமிதுனாத் – கிரௌஞ்ச பக்ஷிகள் இணைபிரியாது இருக்கும் தருணத்தில்
காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த
ஏகம் – ஒன்றை
அவதீ: – கொன்றாய்
யத் த்வம் – அதனால் நீ
சாஸ்வதீ: – நீடித்த
சமா: – ஆண்டுகளீல்
ப்ரதிஷ்டாம் – இருப்பை
மா அகம: – அடைய மாட்டாய்!
இப்படி ஒரு சாபத்தை வேடனுக்குக் கொடுத்தார் வால்மீகி.
இந்த பக்ஷியின் நிமித்தமாக சோகத்தினால் பீடிக்கப்பட்ட என்னால் சொல்லப்பட்ட இது என்ன? என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.
அந்த ஸ்லோகத்தின் நிஜமான அர்த்தம் அவர் மனதில் எழுந்தது.
மாநிஷாத – ஶ்ரீனிவாஸ!
க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட
ஏகம் – ஒருவனை
அவதீ: – கொன்றீர்
யத் – அதனால்
த்வம் – நீர்
சாஸ்வதீ: – நீடித்த
சமா: -ஆண்டுகளில்
ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை
அகம: – அடைவீராக
இப்படி ஒரு அர்த்தம் அவர் மனதில் உதிக்க அவர் வியந்து போனார்.
“இது பாதங்களுடன் அமைந்த எழுத்தொத்த வீணைத் தந்தியில் தாளத்தோடு கூடியது போன்று அமைந்த்ருக்கும் இது, ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே இருக்கட்டும்; வேறு விதமாக இல்லை” என்று அவர் கூறிய போதே பிரம்மா தானாகவே அவர் முன் தோன்றி, “. உம்முடைய வாக்கியமானது எனது அபிப்ராயத்தினாலேயே உண்டானது, நீங்கள் ராமாயண மகா காவியத்தை இயற்ற வேண்டும்” என்று சொல்லியதோடு “ஶ்ரீ ராமரின் சரித்திரமானது உலகத்தில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரை நிலைபெற்றிருக்கும். மேலும் ராமாயணம் எது வரை இருக்குமோ அதுவரை எனது உலகங்களில் நீர் ஸ்திரமாக இருக்கப் போகிறீர்” என்று கூறி அருளினார்.
இப்படியாக பிரம்மா வால்மீகி முனிவருக்குக் கூற, அற்புதமான ராமாயண மகா காவியம் உருவானது.
ஒரு சாபம் முனிவரது வாயிலிருந்து வர, அதுவே ராமாயண சரித்திரத்தின் ஆரம்பமாக அமைந்தது குறிப்பிடத் தகுந்தது.
இன்னும் 60 சாபங்கள் ராமாயணத்தில் உள்ளன.
அவற்றையும் பார்ப்போம்!
***