
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.245
Date uploaded in London – — 16 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (3), (4), (5)
ராமாயணத்தில் சாபங்கள் (3) – தாடகைக்கு வந்த சாபம்!
ச.நாகராஜன்
விஸ்வாமித்திரருடன் ராமரும் லக்ஷ்மணரும் அயோத்தியை விட்டுப் புறப்பட்டு திரிபதகை என்ற நதிக்கரையோரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள காமாஸ்ரமஸ்தானத்தில் சுகமாக இருந்த போது அதன் சரித்திரத்தையும் கேட்டு உணர்ந்தார்கள்.
அடுத்து அவர்கள் புகுந்த இடம் ஒரு அடர்ந்த காடு. அதைப் பற்றி ராமர் கேட்க விஸ்வாமித்திரர், “மலத நாடு என்றும் கரூச நாடு என்றும் வழங்கப்பட்ட இரு நாடுகள் இங்கு செழிப்புடன் இருந்தன.
ஒரு சமயம் ஸுந்தன் என்பவனது மனைவியான தாடகை இந்த இடத்தை நாசம் செய்ய ஆரம்பித்தாள். இந்த துர்நடத்தை உள்ளவளை எனது கட்டளையினால் நீ வென்று விடு” என்றார்.
தாடகையைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்ற ராமர், ‘ஒரு பெண்ணுக்கு ஆயிரம் யானைகளின் பலம் வந்தது எப்படி?’ என்று வினவினார்.
விஸ்வாமித்திரர் அவர் கோர ரூபம் கொண்டு ராக்ஷஸியாக ஆன
கதையைக் கூறலானார்: “முன் காலத்தில் ஸுகேது என்ற பெரிய ஒரு யக்ஷன் இருந்தான். அவன் மகப்பேறு இல்லாமையால் கடும் தவம் புரிந்தான். அதனால் சந்தோஷமடைந்த பிரம்மா அவனுக்கு தாடகை என்ற பெண்ணை வரமாகக் கொடுத்தார்.
அவள் வளர்ந்த காலத்தில் ஜர்ஜ புத்திரனான ஸுந்தனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள். சில காலத்திற்குப் பின்னர் அவள் மாரீசன் என்ற புத்திரனைப் பெற்றாள். அவன் சாபத்தினால் ராக்ஷஸனாக ஆனான்.
ஸுந்தன் அழிந்த அளவில் தாடகை புத்திரனோடு கூட அகஸ்திய முனிவரை உபத்திரவம் செய்ய ஆரம்பித்தாள்.
காமபாணத்தினால் பீடிக்கப்பட்ட தாடகை அகத்தியரை நோக்கி ஓட கோபம் கொண்ட அகத்தியர், “ இந்த ரூபத்தை விட்டு கோரமான உருவம் உனக்கு உண்டாகக் கடவது” என்று சாபமிட்டார்.
அகஸ்த்ய: பரம க்ரூதஸ்தாடகாமபி சபதவான் |
புருஷாதீ மஹாயக்ஷீ விரூபா விக்ருதானனா!
இதம் ரூபமாஹாய தாருணம் ரூபமஸ்து ||
(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 14,15)
இதன் பொருள் :
அகஸ்த்ய: அகஸ்தியர்
பரம க்ரூதத்ஸ – பரம கோபம் கொண்டவராய்
தாடகாம் அபி – தாடகையைப் பார்த்து
புருஷாதீ – ‘மனிதர்களைக் கொல்லுகின்ற நீ
விரூபா – விகார ரூபமுடைய
விக்ருதானனா – விகாரமான முகத்தை உடைய
மஹா யக்ஷீ – மஹா யக்ஷிணியான நீ
இதம் ரூபம் – இந்த ரூபத்தை
அபஹாய – விட்டு விட்டு
தாருணம் – அதி வேதனையை விளைவிக்கும் கோரமான
ரூபம் தே – உருவமானது உனக்கு
அஸ்து – உண்டாகட்டும் (என்று கூறி)
சபதவான் – சபித்தார்.
அந்தக் கணமே அவள் கோர ரூபத்தை அடைந்தாள். அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தாள்.
தாடகை பற்றிக் கூறிய விஸ்வாமித்திரர் ராமரிடம், “இவளை வதம் புரிய மூன்று லோகங்களிலும் உன்னைத் தவிர வேறு எந்த மானிடனாலும் முடியாது பெண்ணைக் கொலை செய்ய வேண்டி இருக்கிறதே என்ற அருவருப்பு உனக்குத் தேவையில்லை. அனைத்து பிரஜைகளின் நன்மைக்காக இதை நீ செய்ய வேண்டியது உனது கடமை. நீ இவளை வதம் செய்” என்றார்.
ராமரும் முனிவரின் ஆணையை சிரம் மேற்கொண்டு தாடகையை வதம் செய்தார்.
ராமாயணத்தில் சாபங்கள் (4) – மாரீசனுக்கு வந்த சாபம்!
இதே தருணத்தில் அகஸ்தியர் மாரீசனை நோக்கி ராக்ஷஸனாய் இருத்தலை அடை என்று சபித்தார்.
ராக்ஷஸத்வம் பஜஸ்வேதி மாரீசம் வ்யஜஹார: |
(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 13)
ச மாரீசம் – அவர் (அகஸ்தியரானவர்) மாரீசனை நோக்கி
ராக்ஷஸத்வம் – ராக்ஷஸனாய் இருத்தலை
பஜஸ்வ – நீ அடைவாயாக
இதி – என்று
வ்யாஜஹார – சபித்தார்.
இதனால், மாரீசன் ராக்ஷஸன் ஆனான்.
ராமாயணத்தில் சாபங்கள் (5) – ஸுந்தனுக்கு வந்த சாபம்!
தாடகையின் கணவனான ஸுந்தனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி பால காண்டத்தில் இதே ஸர்க்கத்தில் ஒரு ஸ்லோகத்தைக் காண்கிறோம்.
ஸுந்தே து நிஹதே ராம சாகஸ்த்யம்ருஷிஸத்தமம் |
தாடகா சஹ புத்ரேண ப்ரதர்ஷயிதுமிச்சதி ||
(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 10)
ராம – ராமா!
ஸுந்தே – ஸுந்தன்
நிஹதே து – அழிந்த அளவில்
சா – அந்த
தாடகா – தாடகையானவள்
புத்ரேண சஹ – புத்திரனோடு கூட
ருஷிசத்தமம் – முனி ச்ரேஷ்டரான
அகஸ்த்யம் – அகத்தியரை
ப்ரதர்ஷயிதும் – உபத்திரவம் செய்ய
இச்சதி – யத்தனித்தாள்
இங்கு ஸுந்தனுடைய சாபம் பற்றிய முழு விவரங்கள் தரப்படவில்லை.
அவன் யாருக்கு என்ன தீங்கு செய்தான். யார் அவனுக்கு என்ன சாபம் தந்தார்கள் என்பது விளக்கப்படவில்லை.
ஆனால் ஸுந்தனின் அழிவு தரப்படுகிறது.
***