விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1 (Post.13,251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.251

Date uploaded in London – — 18 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 மாலைமலர் 15-5-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1

ச.நாகராஜன்

பலர் தடைகளைச் செய்த போதிலும் விடாது போராடி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் உயிரினங்களையும் காத்த ஒரு அதிசயப் பெண்மணி ராக்கேல் கார்ஸன். அமெரிக்க ஜனாதிபதி கென்னடியையே ஒரு கமிட்டி அமைக்க வைத்து தனது கூற்றை நியாயப்படுத்திய இந்த அமெரிக்கப் பெண்மணி அதிகம் அறியப்படாதவர். ஆனால் அரிய செயலைச் செய்தவர்.

இவரைப் பற்றித் தெரிந்து கொள்வது இயற்கை ஆர்வலர்களுக்கு உத்வேகம் ஊட்டும்.

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் 27-5-1907இல் ராக்கேல் கார்ஸன் சாதாரணமான நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார்.

அவரது தந்தை ஒரு டிராவலிங் சேல்ஸ்மென். ஆகவே பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார்.

தாயோ ஒரு இசைப் பாடகி. மகளின் புத்தி கூர்மையைக் கண்டு வியந்த தாய், தனது பெண்ணை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பணம் பெரிய பிரச்சினையாக இருந்தது. தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்றார். படிப்புக்கு வழி வகுத்தார்.

தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் – இயற்கையை நேசிப்பது. இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை அவரால் சிறுவயதிலிருந்தே பொறுக்க முடியாது. பொங்கி எழுவார்.

இது பின்னால் உலக மக்களுக்குப் பெரிய நன்மையைச் செய்தது!

இளம் வயது எழுத்தாளர்

எட்டாம் வயதிலேயே ராக்கேல் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நமது அம்புலிமாமா போல செயிண்ட் நிக்கலஸ் என்ற மாதப் பத்திரிகை ஒன்று குழந்தைகளுக்காக அமெரிக்காவில் வெளி வந்து கொண்டிருந்தது. அதை குடும்பத்தினர் படிப்பது வழக்கம்.

1918, மே மாதம் தனது 11ஆம் வயதில் ராக்கேல் ஒரு கதையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது நான்கு மாதங்கள் கழித்து பத்திரிகையில் வெளியானதோடு சன்மானமாக பத்து டாலரும் கிடைத்தது.

இரண்டே வருடங்களில் அவரது கதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் கதைகளாக அமைந்தன. இதனால் மகிழ்ந்த பத்திரிகை நிர்வாகம் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு செண்ட் அளிக்க முன் வந்தது.

தனது பண்ணை நிலத்தில் நிறைய நேரம் செலவழிப்பது அவரது இளமைக்கால பொழுது போக்காக அமைந்தது.

உயிரியலாளர்

27ஆம் வயதில் கல்லூரிப் படிப்பை ராக்கேல் முடித்த போது அவரது தந்தை 71ஆம் வயதில் இறந்தார்.

கடல் வாழ் உயிரினம் பற்றிய உயிரியலாளராக அவர் திகழ்ந்தார்.

கடலைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துபடி.

ரொமான்ஸ் அண்டர் தி வாட்டர் (Romance Under the Water) என்று மீன்களைப் பற்றி அவர் எழுதிய வானொலி உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது

அரசு வேலை ஒன்றும் அவருக்குக் கிடைத்தது. ஆகவே பணக் கவலை ஒழிந்தது. திருமணத்தைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. தனியாகவே இறுதி வரை வாழ்ந்தார்.

அப்போது இரண்டாம்  உலக மகாயுத்தத்தில் பேர்ல் ஹார்பர் மீது நடந்த தாக்குதலினால் அமெரிக்கர்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தவே 1941-ல் வெளியான அண்டர் தி சீ விண்ட்(under the sea Wind) என்ற அவரது புத்தகத்தைப்  பற்றி யாரும் கவனிக்கவில்லை ஆனால் அடுத்து 1950இல் “சீ அரவுண்ட் அஸ்” (Sea Around Us)  என்ற அவரது புத்தகம் உலகளாவிய விதத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆறே மாதங்களில் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அத்துடன் பல விருதுகளும் மெடல்களும் அவரைத் தேடி வந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் அவரை ஆவலுடன் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.

இயற்கையை உற்றுக் கவனித்து வந்த ராக்கேல் அதற்கு நாசம் விளைவிப்போரை எளிதில் இனம் கண்டார்.

மனிதர்கள் இயறிகையை அழிக்கலாமா, கூடாது என்று முடிவெடுத்த அவர் சைலண்ட் ஸ்பிரிங் – மௌன நீரூற்று – (Silent Spring)  என்ற நூலை எழுதி செப்டம்பர் 1962இல் வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி நூலைப் படித்து வியந்தார். உலக மக்களின் அனைவரின் பார்வையையும் இது திருப்பியது. பெருத்த சர்ச்சையையும் தோற்றுவித்தது.

தமிழ்நாட்டில் ராஜாஜி கூட சுற்றுப் புறச் சூழல் கேட்டை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட ஆரம்பித்தார்.

DDT இரசாயன உரத்தின் கேடு

விஷயம் என்ன?

அப்போது டிடிடி (DDT) என்ற உரம் வயலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. இதைப் பற்றிக் கவலை அடைந்த ராக்கேல் அதை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் இறங்கினார்.

1939இல் பால் முல்லர் (Paul Muller) என்பவர் DDT என்ற இரசாயனத்தை வயலில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் என்றார். இதை ஏற்ற அமெரிக்க ராணுவம் 1943இல் நேப்பிள்ஸ் நகரில் இதைத் தெளித்தது. அதனால் அந்த நகரில் பத்து லட்சம் பேர் தொற்று வியாதியினால் பீடிக்கப்பட்டனர்.

1948 இல் DDT-ஐக் கண்டு பிடித்த முல்லருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க DDT அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தெளிக்கப்பட்டது.

1959இல் 40000 டன்கள் DDT அமெரிக்கா முழுவதும் தெளிக்கப்பட அமெரிக்காவே கெமிக்கலினால் பாதிக்கப்பட ஆரம்பித்தது.

கொதித்து எழுந்தார் ராக்கேல்.

to be continued………………………………

**

Leave a comment

Leave a comment