விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 2 (Post.13,254)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.254

Date uploaded in London – — 19 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 15-5-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 2

 ச.நாகராஜன் 

சைலண்ட் ஸ்பிரிங்

சைலண்ட் ஸ்பிரிங் நூலில் அவர், அமெரிக்காவின் நடுவில் இருப்பதாக ஒரு கற்பனை நகரத்தைப் படைத்தார்.

நகரமே நாசமானது – கெமிக்கலினால். ஆடு மாடுகள் அழிந்தன. மக்கள் மடிந்தனர். பறவைகள் ஒழிந்தன. தேனிக்கள் முற்றிலுமாகக் காணாமல் போனது. வயல்கள் வாடின. ஏரி, குளம், ஆறுகள் வறண்டன. மீன்கள் அழிந்தன. கறிகாய்களையே காணோம். மருத்துவர்கள் காரணம் தெரியாமல் விழித்தனர். மொத்தத்தில் சர்வ நாசம்.

இதற்குக் காரணம் மக்களே. கெமிக்கல்களை அவர்கள் ஆதரித்ததே இதற்குக் காரணம்.

இப்படி நூலைப் படைத்த ராக்கேல், மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். DDT பற்றி ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இந்தப் புத்தகம் எழுந்ததே அவர் இளமையில் கண்ட ஒரு காட்சியினால் தான்!

ராக்கேல் சிறுமியாக இருந்த போது அவரது படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு மைல் தூரத்தில் உள்ள குதிரைகளை வெட்டித் தள்ளும் ஒரு கசாப்புத் தொழிற்சாலையைப் பார்த்த வண்ணம் இருப்பார். அதிலிருந்த புகைபோக்கியிலிருந்து எழும் புகை வானத்தை மறைக்கும்.

மாலை நேரத்தில் வெட்டப்பட்ட உபயோகமற்ற மாமிசக் குவியலிலிருந்து எழும் நாற்றமும், குதிரை மாமிசத்தினால செய்யப்பட்ட உரத்தின் நாற்றமும் கிராமம் வரை வந்து அனைவரையும் வாந்தி எடுக்கச் செய்யும். ஆகவே மாலை நேரங்களில் கிராம மக்கள் வீ டுகளின் கதவுகளைத் திறப்பதே இல்லை.

இந்த அவலத்தினால் ராக்கேலின் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டதில் வியப்பில்லை.

இதனால் தான் கற்பனை நகரத்தை தனது நூலான மௌன நீரூற்றில் உருவாக்கி அதனால் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிய நகரம் பற்றிக் கூறி அமெரிக்கப் பெண்மணிகளின் கவனைத்தை அவர் ஈர்த்தார். அனைத்துப் பெண்மணிகளும் அவருக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவின் தேசீயச் சின்னமான கழுகு ஒரு லட்சத்திலிருந்து 500 ஜோடிகளாகக் குறைந்தது ஏன்?

இரசாயன உரத்தினால் தான். அபாயகரமான உரம் அதன் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடாமல் பொறிப்பதற்கு முன் முட்டைகளை உடைத்து விட்டதால் இந்த அபாயம் ஏற்பட்டது!

இதையெல்லாம் உணர்ந்ததால் உலக மக்களிடையேயும் ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது;௧

கென்னடி அமைத்த குழு

புத்தகத்தின் தாக்கத்தை உணர்ந்த அமெரிக்க அரசும் விழித்தெழுந்தது.

ஜனாதிபதி கென்னடியின் தலைமையிலான ஒரு விசேஷ குழு இதை ஆராய ஆரம்பித்தது.

1962, ஆகஸ்ட் மாதம் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியான கென்னடியிடம், அரசு DDT  பற்றி ஏதேனும் செய்யப் போகிறதா இல்லையா என்று கேட்டனர்.

அவர் உடனடியாக இப்படி பதிலளித்தார்:

“ஆம்.செய்யப் போகிறோம். குறிப்பாக மிஸ் கார்ஸனின் புத்தகத்தால் தான். ஆனால் இதை அவர்கள் (கமிட்டி) பரிசீலித்து வருகிறார்கள்”.

கென்னடியின் அறிவியல் குழு 1963 மே மாதம் 15ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

“சைலண்ட் ஸ்பிரிங் வெளிவரும் வரை பொதுவாக உரங்களில் விஷத் தனமை இருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் சுற்றுப்புறச்சூழல் கேட்டை ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவன் மூலமே தடுத்து நிறுத்த முடியும்.”

வணிக நோக்கில் இது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து  கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் விடாது போராடிய கார்ஸனுக்கு மக்களின் ஆதரவினால் வெற்றியே கிடைத்தது!

1972இல் அமெரிக்க அரசு விவசாயத்தில் DDT உபயோகத்தைத் தடை செய்தது.

என்றாலும் கூட மலேரியாவைத் தடுப்பதற்கு DDT அனுமதிக்கப்பட்டது. இதையும் ராக்கேல் எதிர்த்தார்.

இதய நோயால் பாதிப்பு

இதற்கிடையில் அவரது உடல் நிலை இதய நோய்களுள் ஒன்றான ஆஞ்ஜினா (ANGINA) வியாதியால் பாதிக்கப்பட்டது.

அவருக்கு மார்பகப் புற்று நோயும் வந்து சேர்ந்தது.

1964இல் கான்ஸர் உடல் முழுவதிலும் பரவி விடவே அவர் தலைமயிர் எல்லாம் உதிர்ந்து தலை வழுக்கையானது. எலும்புகள் பலஹீனமாக ஆகி விடவே அவர் வீல் சேரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1964 மார்ச் மாதம் கான்ஸர் கல்லீரலைத் தாக்கி அவரை வெகுவாகப் பாதித்தது.

அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் ஒரு ரேடியோ ஆக்டிவ் பதியத்தை அவர் உடலில் பதியம் செய்தனர்.

இது போன்ற உடல் நிலையில் தான் அவர் அமெரிக்க கமிட்டி முன்னர் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

DDT போன்ற இரசாயன உரங்கள் முதலில் பூச்சிகளைக் கொல்லும். பின்னர் உணவுச் சங்கிலித் தொடரினுள் புகுந்து உணவையே நச்சாக்கும். அதனால் பறவைகள், மீன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும். ஏனெனில் அவை இப்படிப்பட்ட நச்சு உணவுகளை உட்கொள்ள வேண்டிய சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு உருவாவதால் தான்! ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்றார் அவர்.

‘மக்கள் விஞ்ஞானி’ என்ற பெயருடன் புதுமையாக மலர்ந்த அவர் மக்களுக்காக அரிய உண்மைகளைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து வழங்கினார்.

நடக்க முடியாமல் அவர் தன் இருக்கைக்கு மெதுவாகத் திரும்பியது அனைவரையும் உருக்கியது.

தலை வழுக்கை தெரியாமல் இருக்க ஒரு ‘விக்’கை அவர் அணிந்திருந்தார்.

மறைவு

தனது வியாதி பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே அவரது கான்ஸர் பற்றி இறுதி வரை மக்களுக்குத் தெரியவில்லை.

1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அவர் காலமானார்.

அவரது அஸ்தியின் ஒரு பகுதி மேரிலாந்தில் அவரது தாயாரின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்னொரு பகுதி ஷீப்ஸ்காட் பே என்ற இடத்தில் தெளிக்கப்பட்டது.

இன்று சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் முன்பை விட ஏராளமாகப் பெருகி விட்டன. ஆனால் ராக்கேல் கார்ஸன் போல அயராது பாடுபட்டு அந்த அம்சங்களை ஒழிக்க ஆள் தான் இல்லை.

‘தி நன் ஆஃப் நேச்சர்’ – இயற்கையின் கன்யாஸ்தீரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கார்ஸனின் புகழ் என்றும் இலங்கும்!

ராக்கேலின் செய்தி

ராக்கேல் கார்ஸன் உலக மக்களுக்குக் கூறியது ஒன்றே ஒன்று தான் – “மனித குலமும் உயிரினங்களும் நீடித்து இருக்க, இயற்கையை நேசியுங்கள், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாதீர்கள்!”

***

Leave a comment

Leave a comment