ராமாயணத்தில் சாபங்கள் (7,8) – சுபாஹு பெற்ற சாபமும், குசகன்யா- வாயு சாபமும்(Post.13,260)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.260

Date uploaded in London – 21 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (7,8) 

ராமாயணத்தில் சாபங்கள் (7,8) – சுபாஹு பெற்ற சாபமும், குசகன்யா- வாயு சாபமும்

 ச.நாகராஜன்

சுபாஹுவின் சாபம் (சாபம் 7)

மாரீசனுடன் சுபாஹுவும் அகத்திய முனிவரால் சாபம் பெற்றான். இதை முன்னமே தந்துள்ள சுபாஹு வரலாற்றில் காணலாம்.

 குசகன்யா – வாயு சாபம் (சாபம் 8)

தாடகையின் விருத்தாந்தத்தைக் கூறிய விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணருடன் பயணப்பட்டார்.

அப்போது செழிப்பான சோலைகளால் விளங்கும் தேசத்தை வழியில் பார்த்த ராமர் விஸ்வாமித்ர மஹரிஷியை நோக்கி, “பகவானே! இது யாருடைய தேசம்?” என்று கேட்க, விஸ்வாமித்திரர் அந்த பிரதேசத்தின் வரலாற்றையும் குசரின் கன்யைகளின் வரலாற்றையும் கூறலானார்.

பிரம்மாவின் குமாரரான குசர் என்ற தபஸ்வி இருந்தார். அவருக்கு வைதேஹியிடத்தில் நான்கு புத்திரர்கள் உண்டானார்கள்.

அவர்களின் குசாம்பர் கௌசாம்பி என்னும் பட்டணத்தையும்,

குசநாபர் மஹாதயம் என்னும் பட்டணத்தையும்,

அதூர்தரஜஸ் என்பவர் தர்மாரண்யம் என்னும் பட்டணத்தையும்

வஸூ என்பவர் கிரிவ்ரஜம் என்னும் பட்டணத்தையும் நிர்மாணித்தார்.

வஸூ நிர்மாணித்த வஸூமதி என்கின்ற பிரதேசமே இது என்றார்.

குசநாபர் கிருதாசி என்னும் மனைவியின் மூலம் நூறு பெண் குழந்தைகளைப் பெற்றார்.

அவர்கள் யௌவன பருவம் அடைந்தனர். ஒரு மழை காலத்தில் மின்னல் கொடிகள் போல சிங்கார தோட்டத்தை அடைந்து ஆடவும் பாடவும் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாயு பகவான் அவர்கள் அழகில் மயங்கினார்.

அவர்களை நோக்கி வாயு பகவான், “நான் உங்கள் எல்லோரையும் விரும்புகிறேன். என்னை மணம் புரிந்து எனக்கு மனைவிகளாக ஆனால் தேவ ஸ்தீரிகளாக ஆவீர்கள்” என்றார்.

இதை மறுத்துப் பேசிய அவர்கள், “ எங்கள் தந்தை யாருக்கு எங்களை மணம் செய்து வைக்கிறாரோ அவருக்கே நாங்கள் உரியவர்கள்” என்றனர்.

இதனால் மிக்க கோபம் கொண்ட வாயு பகவான் அவர்கள் அவயவங்களின் ஊடே புகுந்து அவர்களை முடமாக்கினார்.

அவர்கள் கூனிகளாக மாறி நடந்ததை அரசனிடம் சொல்ல பிரம்மதத்தன் என்ற அரசன் குசநாபரை வேண்ட, குசநாபர் நூறு கன்னிகைகளையும் பிரம்மதத்தருக்கு மணம் செய்வித்தார்.

பிரம்மதத்தரின் கரத்தைப் பற்றியவுடன் கன்னிகைகளின் உடல் குறை தீர்ந்து பழைய படி சௌந்தர்யவதிகளாக ஆனார்கள்.

பாலகாண்டத்தில் 32, 33–ம் ஸர்க்கங்கள் இந்த வரலாற்றை விரிவாக விவரிக்கின்றன.

 குசநாப கன்னிகைகள் வாயு பகவானை நோக்கிச் சொல்லும் ஸ்லோகங்கள் இவை:-

(32-ம் ஸர்க்கத்தில் வரும் ஸ்லோகங்கள் (19,20,21,22) இவை:)

அந்தரஸ்சரஸி பூதானாம் சர்வேஷாம் த்வம் சுரோத்தம |

ப்ரபாவஞாஸ்து தே சர்வா: கிமஸ்மானவமன்யஸே ||

சுரோத்தம – தேவ சிரேஷ்டரே!

த்வம் சர்வேஷாம் – நீர் எல்லா

பூதானாம் – பிராணிகளுடைய

அந்த: – உடம்பினுள்

சரஸி – சஞ்சரிக்கிறீர்

சர்வாம் து – எல்லோருமே

தே ப்ரபாவஞா: – உமது மஹிமையை அறிந்தவர்கள்

கிம் அஸ்மான் – ஏன் எங்களை

அவமன்யஸே – அவமானம் செய்கிறீர்

குசநாப ஸுதா: சர்வா: ஸமர்தாஸ்த்வாம் சுரோத்தம் |

ஸ்தானாச்சயாவயிதும் தேவம் ரக்ஷாமஸ்து தபோ வயம்

சுரோத்தம் – தேவ சிரேஷ்டரே!

குசநாப ஸுதா: – குசநாபரின் பெண்களான

வயம் – நாங்கள்

சர்வா: – எல்லோரும்

தேவம் – தேவனானாலும்

த்வாம் – உம்மை

ஸ்தானான் – பதவியிலிருந்து

ஸ்யாவயிதும் – தள்ள

ஸமர்த்தாம் – ஸாமர்த்தியமுடையவர்கள்

து – ஆன போதிலும்

தப: – தவத்தை

 ரக்ஷாம: – காப்பாற்றுகிறோம்

 மா பூத ஸ காலோ துர்பேத: பிதரம் சத்யவாதினம் |

நாவமன்யஸ்வ தர்மேன ஸ்வயம் வரமுபாஸ்மஹே ||

துர்போத: – துர்புத்தியுள்ளவரே

சத்யவாதினம் – உண்மை பேசுகின்ற

பிதரம் – தந்தையாரை

ந அவமன்யஸ்வ – அவமதிக்காதீர்கள்

ஸ: கால – அவர் யமனாக

மா பூத – ஆக வேண்டாம்

தர்மேண – தர்மத்தோடு

ஸ்வயம் – நாங்களே ஸ்வயமாக

வரம் உபாஸ்மஹே – பதியை அடைந்து கொள்கிறோம்

பிதா ஹி ப்ரபுரஸ்மாகம் தைவதம் பரமம் ஹி ச: |

நாவமன்யஸ்வ தர்மேண ஸ்வயம் வரமுபாஸ்மஹே ||

பிதா – தந்தையே

ஹி – அன்றோ

அஸ்மாகம் – எங்களுக்கு

ப்ரபு _ தலைவர்

ச: – அவரே

பரமம் தைவதம்  – சிறந்த தெய்வம்

ஹி – ஆகையால்

ந: – எங்களுடைய

பிதா – தந்தையார்

யஸ்ய – எவருக்கு

தாஸ்யதி – எங்களைக் கொடுக்கிறாரோ

ச: ந: – அவரே எங்களுக்கு

பர்தாம் – கணவராக

பவிஷ்யதி – ஆவார்

 இப்படி பணிவாகச் சொல்லியும் வாயு பகவான் அவர்கள் உடலில் புகுந்து அவர்களை கூனியாக்கினார்.

 ப்ரத்யக்ஷ ரூபத்தில் அவர் சாபமிடாவிட்டாலும் அவர்களை அவர் பங்கப்படுத்தினார்!

***

Leave a comment

Leave a comment