Post No. 13.283
Date uploaded in London – —29 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (14)
ராமாயணத்தில் சாபங்கள் (14) – வசிஷ்ட புத்திரர்கள் திரிசங்குவிற்குத் தந்த சாபம்!
ச.நாகராஜன்
மிதிலாபுரிக்கு ராம லக்ஷ்மணருடன் வந்த விஸ்வாமித்திர மஹரிஷி ஜனகரின் சபைக்குச் சென்று அவரிடம் அகல்யா சாப விமோசனத்தை முழுவதுமாக எடுத்துரைத்தார்.
ஜனகனின் அரசவையில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த கௌதம ரிஷியின் மூத்த புதல்வரான சதானந்தர் மிகுந்த மகிழ்ச்சியுற்றார்.
அவர் ஶ்ரீ ராமரைப் பார்த்து மஹரிஷி விஸ்வாமித்திரரின் சரிதத்தைச் சொல்லலானார்.
முன்னொரு காலத்தில் இக்ஷ்வாகு குலத்தில் ஐம்புலன்களை அடக்கிய திரிலோக ப்ரஸித்தி பெற்ற திரிசங்கு என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவர் தனது உடலுடனேயே சொர்க்கம் செல்ல விரும்பினார். இதை அவர் வசிஷ்டரிடம் சொல்ல அவர் அது சாத்தியமில்லாத ஒன்று என்று பதில் கூறினார்.
உடனே திரிசங்கு வசிஷ்ட புத்திரர்களை அணுகித் தனது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.
அப்போது வசிஷ்டரின் புத்திரர்கள் தென் நாட்டில் தவத்தைப் புரிந்து கொண்டிருந்தனர். வசிஷ்ட புத்திரர்களைப் பார்க்க திரிசங்கு தென்னாடு நோக்கிச் சென்றார்.
அங்கே வசிஷ்டரின் புதல்வர்கள் நூறு பேர்கள் அதி ஜோதிர்மயமாய் விளங்குவதைக் கண்டு அனைவரையும் நமஸ்கரித்துத் தன் விருப்பத்தைச் சொன்னார்.
தனது விருப்பத்தை வசிஷ்டரிடம் சொன்ன போது அவர் மறுத்து விட்டதையும் அவர் கூறினார்.
திரிசங்குவின் வார்த்தையைக் கேட்ட வசிஷ்ட புத்திரர்கள் கோபம் கொண்டனர். தன் தந்தை மறுத்தும் விடாப்பிடியாய் தம்மிடம் அவர் வந்ததை எண்ணி அவரிடம், “ புனித முனிவராகிய வசிஷ்ட பகவான் முடியாது என்று சொன்ன யாகத்தை நாங்கள் எவ்விதம் செய்து முடிக்க சக்தர்களாவோம்? அவருக்கு அவமதிப்பை நாங்கள் எப்படி செய்ய முடியும்? நீ அசடாக இருக்கிறாய். ஊருக்குத் திரும்பிச் செல்” என்றனர்.
இதைக் கேட்டு கண்கள் கலங்கிய திரிசங்கு, “அப்படியானால் இன்னொரு வழியை நான் தேடிக் கொள்கிறேன்” (அன்யாம் கதிம் கமிஷ்யாமி) என்றார்.
இதைக் கேட்டு கடும் கோபம் கொண்ட ரிஷிபுத்திரர்கள் திரிசங்குவை ‘சண்டாளன் ஆவாய்’ என்று சபித்தனர்
ருஷிபுத்ராஸ்து தஸ் ச்ருத்வா வாக்ய கோராபிசம்ஹிதம் |
ஷேஷு பரமசம்க்ருத்வாஸ் சண்டாளத்வம் கமிஷ்யஸி ||
ருஷிபுத்ரா: – ரிஷி புத்திரர்கள்
கோராபி சம்ஹிதம் – மூர்க்கத்தனத்தை நன்கு விளங்கக் காட்டும்
தத் – அந்த
வாக்யம் – வார்த்தைகளைக்
ச்ருத்வா -கேட்டவுடனேயே
பரமசம்க்ருத்வா: – கடும் கோபம் கொண்டவர்களாய்
சண்டாளத்வம் – சண்டாளத்தன்மையை
கமிஷ்யஸி – நீ அடைவாயாக
ஷேஷு – என்று சபித்தனர்.
ஏவமுத்வா மஹாத்மனோ விவிஷுஸ்தே ஸ்வமாஸ்ரமம் ||
தே – அந்த
மஹாத்மன: – மஹாத்மாக்கள்
ஏவம் – இந்தப் பிரகாரம்
உக்த்வா – சபித்து விட்டு
ஸ்வம் – தமது
ஆஸ்ரமம் – ஆஸ்ரமத்திற்குள்
விவிஷு – புகுந்து விட்டனர்
திரிசங்கு பெற்ற சாபத்தை இந்த விதமாக கௌதமர் ராமருக்கு விளக்கிக் கூறினார்.
பாலகாண்டம் 58-ம் ஸர்க்கத்தில் 8,9 ஸ்லோகங்களாக மேற்கண்ட ஸ்லோகங்கள் அமைகின்றன.
**