மேலும் 30 ராமகிருஷ்ண பரமஹம்சர்  பொன்மொழிகள்: ஜூன் 2024 காலண்டர் (Post.13,288)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,288

Date uploaded in London – –   30 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இதற்கு முன்னர் 2017 மார்ச் மாத காலண்டரில் 31 பொன்மொழிகள் வெளியானது. இதோ மேலும் 30  ராமகிருஷ்ண பரமஹம்சர்  பொன்மொழிகள்.

பண்டிகை நாட்கள் – ஜுன் 4 இந்திய தேர்தல் முடிவுகள், 17-பக்ரீத், 21-உலக யோகா தினம்,

அமாவாசை – 6;  பெளர்ணமி – 21.ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -2,17.

சுபமுகூர்த்த நாட்கள் – 2, 9, 10, 12, 16, 17

xxxx

ஜூன்  1 சனிக் கிழமை

கங்கை நீர், பிருந்தாவனத்துத் தூள் , பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தின்  மஹா பிரசாதம் இவை மூன்றையும் சாதாரணமாகக் கருதாதே.  இம்மூன்றும் பரப் பிரும்மத்தின் சொரூபங்களேயாம்.

xxxx

ஜூன்  2 ஞாயிற்றுக் கிழமை

ஸதா ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யப்படுகிற வீட்டில் பேய் பிசாசுகள் அணுகமாட்டா..

xxxx

ஜூன்  3 திங்கட் கிழமை

ஈசுவரனுக்கு இச்சை உண்டானால் , அவன் ஓர் ஊசிக் காதின் வழியாக ஒரு யானையைப் போகவும் செய்வான். தன்னுடைய இஷ்டப்படியெல்லாம் அவன் செய்யச் சக்தியுள்ளவன் .

XXXX

ஜூன்  4 செவ்வாய்க்கிழமை

ஹரி என்றால் இருதயத்தைக் கவர்பவன் என்று பொருள். ‘ஹரி பல்’ என்றால் ஹரிதான் நமக்குப் பலம் என்று பொருள்.

xxxx

ஜூன்  5 புதன் கிழமை

உன்னுடைய மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றும் திட நம்பிக்கையும் உடையவனாய் இரு. ஆனால் மதவெறியும் பிற மதத்தின் மீது துவேஷமும் அற்றவனாய் இரு.

xxxx

ஜூன்  6 வியாழக்கிழமை

பெரியோரை தரிசிக்கும்போதும் ஆலயத்துக்குப் போகும்போதும்  வெறும் கையனாய் ஒருபோதும் போகக்கூடாது. ஏதேனும் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும் .

xxxx

ஜூன் 7   வெள்ளிக் கிழமை

பாபமும் பாதரசமும் எளிதில் ஜீரணமாகாது

xxxx

Sarada Devi, Sri Ramakrishna’s Wife

ஜூன்  8 சனிக் கிழமை

முள்ளங்கி தின்றவனுக்கு முள்ளங்கி ஏப்பமும் கத்தரிக்காய்  தின்றவனுக்கு கத்தரிக்காய் ஏப்பமும்தான் வரும். அதுபோல சில சமயங்களில் உள்ளத்தில் உள்ளதை வாய் வெளிவிட்டுவிடும்

xxxx 

ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை

கோபம் தாமஸ  குணத்தின் அடையாளம்; கோபத்தில் மனிதனுக்குப் பகுத்தறிவு போய்விடுகிறது. ஹனுமார் இலங்கையைக் கொளுத்தியபோது சீதாதேவி இருக்குமிடத்தையும் அது அழித்துவி டுமே என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை

xxxx

ஜூன் 10 திங்கட் கிழமை

பிறர் எதைச் செய்யவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதை நீயே செய்.

xxxx

ஜூன் 11 செவ்வாய்க்கிழமை

மனிதர்கள் புகழ்வதும் சீக்கிரம்;  இகழ்வதும் சீக்கிரம் ஆகையால் மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே .

xxxx

ஜூன் 12 புதன் கிழமை

ஒருவனுடைய குண தோஷங்கள் அவனுடைய நண்பர்களைப் பொறுத்திருக்கின்றன. நிற்க.  ஒருவன் தன்னுடைய குணங்களுக்கு ஏற்ப நட்பு ஏற்படுத்திக் கொள்கிறான்.

XXXX

ஜூன் 13 வியாழக்கிழமை

ஜனங்கள் விழித்துக் கொண்டிருக்கும் வீட்டில் திருடர்கள் நுழைவது இல்லை. அது போல நீ எப்போதும் ஜாக்கிரதையாக இருந்தால், உனது தூய்மையைக் கெடுக்கக்கூடிய கெட்ட எண்ணங்கள் மனதில் வாராது.

XXXXX

ஜூன் 14   வெள்ளிக் கிழமை

மாயை என்பது தாய் தந்தையர், உற்றார் உறவினர் மீது ஏற்படும் பாசம் ஆகும். எல்லாப் பிராணிகளிடத்தும் சமமாகப் பழகும் அன்புக்கு தயை என்று பெயர்.

XXXX

ஜூன் 15 சனிக் கிழமை

தர்ம மார்கத்தில் நீ நிம்மதியாய் வாழுங் காலத்தில் லோக ஜனங்களின் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் பொருட்படுத்தாதே .

xxxx

ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை

மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல்  போவதில்லை.

XXXX

ஜூன்  17 திங்கட் கிழமை

பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை  அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.

XXXX

ஜூன்  18 செவ்வாய்க்கிழமை

அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும்.

XXXX

ஜூன்  19 புதன் கிழமை

சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விசத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும்.

XXXX

ஜூன்  20 வியாழக்கிழமை

சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.

XXXX

ஜூன் 21  வெள்ளிக் கிழமை

உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.

XXXX

ஜூன்  22 சனிக் கிழமை

உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது.

XXXX

ஜூன்  23 ஞாயிற்றுக் கிழமை

ஆழ்ந்த தியானம் செய்வதால் இறைவனின் உண்மைச் சுபாவம் வெளியாகும் . அது பக்தனுடைய உள்ளத்தில் நன்றாய்ப் பதியும் .

XXXX

ஜூன்  24 திங்கட் கிழமை

முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.

XXXX

ஜூன்  25 செவ்வாய்க்கிழமை

நாணலும் பாசியும் மூடிய குளத்தில் துள்ளி ஓடும்  மீன்களை  வெளியிலிருந்து  காணமுடியாது . அது போல மாயை மூடியவரின்  இதயத்திலுள்ள இறைவனைக் காணமுடியாது.

XXXX

ஜூன்  26 புதன் கிழமை

இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.

XXXX

ஜூன்  27 வியாழக்கிழமை

எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.

XXXX

ஜூன்  28   வெள்ளிக் கிழமை

உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.

XXXX

ஜூன்  29 சனிக் கிழமை

அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்

ஜூன்  30 ஞாயிற்றுக் கிழமை

நூற்றுக்  கணக்காகவும், ஆயிரக்   கணக்காகவும் குருக்களை  பெறலாம். ஆனால் உண்மையான ஒரு சிஷ்யனைக் கண்டு பிடிப்பது கடினம் என்பது பழமொழி. இதன் பொருள் என்னவென்றால் உபதேசம் செய்ய பலர் இருக்கின்றனர் . அதைப் பின்பற்றுவோர் ஒரு  சிலர்தான் .

Pitcure of Maa Sarada Devi

–subham—

Tags- மேலும், ராமகிருஷ்ண பரமஹம்சர், பொன்மொழிகள், ஜூன் 2024 காலண்டர்

Leave a comment

Leave a comment