
Post No. 13.290
Date uploaded in London – —31 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (16)
ராமாயணத்தில் சாபங்கள் (16) விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு பயந்த ரிஷிகள்!
ச.நாகராஜன்
விஸ்வாமித்திரர் தன்னிடம் வந்த அனைத்து ரிஷிகளையும் நோக்கி, “இதோ என்னிடம் வந்த இந்த திரிசங்கு சரீரத்துடனே ஸ்வர்க்க லோகம் போக வேண்டும் என்று விரும்புகிறான். ஆகவே அதற்காக செய்யப்படும் யாகத்தில் என்னோடு கூட நீங்களும் யாகத்தை ஆரம்பிப்பீர்களாக!” என்றார்.
ரிஷிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “ இந்த ரிஷி மகா கோபம் உடையவர். இவர் நெருப்புக்கு ஒப்பானவர். சாபத்தைக் கொடுப்பார். ஆகவே யாகம் ஆரம்பிக்கப்படட்டும்” என்று பேசிக் கொண்டனர்.
“அக்னிகல்போ ஹி பகவான்ஸ சாபம் ரோஷித:\
தஸ்மாத் ப்ரவத்யர்தாம் யஞ: ஸசரீரரோ யதா திவம் ||
கச்சோதிக்ஷ்வாகுதாயாதோ விஸ்வாமித்ரஸ்ய தேஜஸா |
தத: ப்ரவர்த்யதாம் யஞ: சர்வே சமதிதிஷ்டதா ||
பகவான் – பகவான் (விஸ்வாமித்திரர்)
அக்னிகல்ப: – அக்னிக்கு ஒப்பானவர்
ஹி – அன்றோ!
ரோஷித: – கோபம் கொண்டவராய்
சாபம் – சாபத்தைக் கொடுப்பார்
தஸ்மாத் – ஆகையால்
யஞ: – யாகமானது
ப்ரவர்த்யதாம் – ஆரம்பிக்கப்படட்டும்
இக்ஷ்வாகுதாயாத – இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன்
விஸ்வாமித்ரஸ்ய – விஸ்வாமித்திரருடைய
தேஜஸா – தவத்தின் பலத்தால்
ச சரீர: – உடலுடனேயே
யதா – எப்படி
திவம் – ஸ்வர்க்கத்தை
கச்சேத் – அடைவானோ
தத: – அப்படியே
யஞ: – யாகமானது
ப்ரவர்த்யாம் – பிரவர்த்திக்கப்படட்டும்
சர்வே – எல்லோரும்
சமதிஷ்டித – ஆரம்பியுங்கள் (என்றனர்)
பாலகாண்டம் அறுபதாவது ஸர்க்கம் – ஸ்லோகங்கள் 6, 7
இவ்விதமாக ரிஷிகள் அனைவரும் விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு பயந்தனர். அவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி யாகத்தை ஆரம்பித்தனர்.
இங்கு சாபம் வெளிப்படையாக யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
ஆனால் சாபம் கொடுத்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் விஸ்வாமித்திரர் சாபம் கொடுப்பார் என்ற பயத்தைக் காண முடிகிறது.
இதை பாலகாண்டம் அறுபதாவது ஸர்க்கம் விவரிக்கிறது.
இதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் வியப்பூட்டுபவை.
யாகம் நடந்தாலும் ஹவிர்பாகத்தைப் பெற தேவர்கள் அங்கு வராமல் இருந்து விட்டனர்.
விஸ்வாமித்திரர் கோபம் கொண்டு, கையை உயரத் தூக்கி, “உன் தேகத்துடன் ஸ்வர்க்கத்திற்குப் போ” என்றார்.
உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.
அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால் நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான்.
உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார்.
உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான்.
உடனே இன்னொரு பிரம்மா போல வேறு சப்தரிஷிகளை விஸ்வாமித்திரர் சிருஷ்டித்தார்.
நட்சத்திரவரிசை ஒன்றை உருவாக்கினார்.
“இன்னொரு இந்திரனையும் சிருஷ்டிப்பேன்” என்றார்.
தேவேந்திரன் அனைவருடனும் கூடி அவரிடம் வந்து, “குரு சாபத்தால் இழிவடைந்து இருக்கும் இவன் சுவர்க்கத்திற்கு தகுதியானவன் இல்லை.” என்றான்.
அதைக் கேட்ட விஸ்வாமித்திரர் , “அப்படியானால் உடம்புடன் இருக்கும் இந்த திரிசங்கின் ஸ்வர்க்கம் இங்கேயே சாஸ்வதமாய் இருக்கட்டும். என்னால் சிருஷ்டிக்கப்பட அனைத்தும் எது வரை லோகங்கள் இருக்குமோ அதுவரை அப்படியே இருக்கட்டும். தேவர்களாகிய நீங்கள் இதற்கு அனுக்ரஹிக்க வேண்டும்” என்றார்.
உடனே தேவர்கள் அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
திரிசங்கு தலை கீழாகவே தேவன் போல சாஸ்வதமாய் அன்றிலிருந்து அங்கேயே இருக்கிறான்.
இந்த விஸ்வாமித்திரரின் வரலாற்றை சதானந்த மஹரிஷி ஶ்ரீ ராமருக்கு விரிவாக எடுத்துரைக்கிறார். (பாலகாண்டம் ஸர்க்கம் 51-ல் விஸ்வாமித்திரரின் சரிதம் ஆரம்பிக்கிறது.)
தனது தாயான அகல்யா தேவி பற்றி அறிந்து மகிழ்ந்த சதானந்தர் ஶ்ரீ ராமரிடம் விஸ்வாமித்திரரின் சரிதத்தை விரிவாகக் கூறுகிறார்.
அதில் திரிசங்கு வரலாறு வருகிறது!
***