WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.386
Date uploaded in London – —28 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஜூன் 2024 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நூறு வயது வாழத் தடைகள், பிரச்சினைகள்!
ச.நாகராஜன்
வேதம் கூறும் மனிதனின் ஆயுள்
ஈஸாவாஸ்ய உபநிடதத்தில் வரும் கீழ்க்கண்ட மந்திரம் மனிதன் நூறு ஆண்டுகள் வாழ விரும்ப வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
குர்வன்னேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேத் சதம் சமா: |
ஏவம் த்வயி நான்யதேதோஸ்தி ந கர்ம லிப்யதே நரே ||
இதன் பொருள்
உலகில் ஒருவர் நூறு ஆண்டுகள் வாழ விரும்ப வேண்டும், ஆனால் செயல்களைச் செய்தவாறே வாழ வேண்டும். இந்த வழியில், – இந்த வழியில் மட்டுமே தான், – ஒருவன் செயல்களின் கறையிலிருந்து விடுபட முடியும்.
ஆக செயல்கள் தவிர்க்க முடியாதவை; ஆனால் அவற்றைச் செய்வதில் உள்ள பலன்களின் மீது எண்ணம் வைக்காதே என்கிறார் கண்ணபிரான்.
நூறை எட்டுவதில் உள்ள தடைகள்
ஆனால் உண்மையில் பார்த்தால் வெகு சிலரே நூறு ஆண்டுகள் வாழ்கின்றனர்.
காரணம், கலி காலத்தில் மனிதனின் ஆயுள் மிகக் குறைவு என்று பொதுவாக கூறப்படுகிறது.
ஆனால் நூறு வயதுக்கு தடை விதிப்பவை எவை?
மதுப் பழக்கம், சிகரட் பழக்கம், போதைப் பழக்கம், தவறான பாலியல் உறவு, தவறான உணவு வகைகளை உட்கொள்வது, அதிகப்படியான உடல் சாகஸங்கள், யோகா உடல்பயிற்சி, மனப் பயிற்சி ஆகியவை இன்றி இருப்பது உள்ளிட்டவையே மனிதனின் பூரண ஆயுளுக்கான தடைகளாக உள்ளன.
35 வயதுள்ள ஒரு மனிதன் அடுத்த பத்து வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்பு 1.5 சதவிகிதம் தான். ஆனால் அதே மனிதன் 75 வயதில் அடுத்த பத்து வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்பு 45 சதவிகிதமாகிறது.
வயதாகிக் கொண்டே போவது ஆரோக்கியத்திற்கு சற்று தீங்கு விளைவிக்கும் ஒன்று தான். என்றா;லும் இப்போது நாம், வயதாவதால் ஏற்படும் பிரச்சினைகளின் அடிப்படைகளை நன்கு அறிந்து கொண்ட ஒரு அறிவியல் உலகத்தில் வாழ்கிறோம்.
ஸ்டெம் செல்கள்
ஆரம்ப காலத்தில், இளம் பருவத்தில் உடலியல் நடைமுறையில் நமது ஸ்டெம் செல்கள் தங்களுக்குள் நன்றாக தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால் வயதாகும் போது இது குறைவு பட்டு பிரச்சினைகள் பெரிதாகின்றன.
டயபடிக் கிட்னி நோய் எனப்படும் நீரிழிவு நோய் அடிப்படையிலான சிறு நீரகக் கோளாறை நீக்க இந்த ஸ்டெம் செல்களை இன்னும் அதிகமாக ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர்.
அமெரிக்கன் ஃபெடரேஷன் ஃபார் ஏஜிங் ரிஸர்ச் (American Federation For Aging Research) பல விஞ்ஞானிகளையும் மருத்துவர்களையும் அழைத்து அடிக்கடி ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறது.
ஆரோக்கியமான நூறு வயது வாழ்வது என்பதை ஆராய்வது ஒரு சவாலான விஷயம் தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கின்றானர்.
மரபணு தான் காரணமா?
பிரிட்டனின் ஜனத்தொகையில் நூறு வயது வாழ்பவர்கள் 0.02க்கும் குறைவான சதவிகிதத்தினரே. நூறு வயதை இவர்கள் எப்படி எட்டிப் பிடித்தனர்?.
பொதுவாக இவர்கள் டாக்டர்களிடம் செல்வதே இல்லை. புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. அதிக பழ வகைகளையும் நல்ல காய்கறிகளையும் உண்கின்றனர்.
வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டால் மிகக் குறுகிய காலம் தான் நோயினால் அவஸ்தைப் படுகின்றனர்.
நூறு வயது வாழ்வோரின் குழநதைகளும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது ஒரு சிறப்பான விஷயம்.
ஆனால் யூதர்களில் ஆஷ்கெனஜி பிரிவினர் புகை பிடிக்கின்றனர்; என்றாலும் நூறு வயதை எட்டுகின்றனர்.
இதையெல்லாம் ஆராய்ந்த விஞ்ஞானிகள் இப்படி ஆரோக்கியமான நூறு வயதை எட்டுவது மரபணு சார்ந்த விஷயமா – ஜீன் தான் இதற்குக் காரணமா என்று ஆராய ஆரம்பித்துள்ளனர்.
மரபணு சார்ந்த விஷயங்கள் நூறு வயது எல்லையைத் தொட வைக்கின்றனவா?
நூறு வயது வாழ்வோரில் க்ரோத் ஹார்மோனை குறைந்த அளவு கொண்டுள்ள பெண்கள் அதிகமாக இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவர்களுக்கு மூளை, இதயம் மற்றும் தசை செயல்பாடுகள் பிரமாதமாக உள்ளன.
ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
பெரிய ரகசியம்
ஒரு பெரிய ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர் – நூறு வயது வாழ்வோருக்கு, அவர்களின் க்ளூகோஸ் அளவு, யூரிக் அமிலம் க்ரியாடினின் ஆகியவை ரத்தத்தில் குறைந்த அளவே உள்ளது.
(Have lower – but not too low – levels of glucose, uric acid and creatinine in their blood)
இதை விரிவாக விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்துள்ளனர்.
எட்டு விதிகள்
ஆரோக்கியமான நூறு வயது வாழ்வை விரும்புவோருக்கு
பொதுவாக எட்டு விதிகளை அறிவியல் உலகம் தருகிறது.
அவையாவன
1)எப்போதும் உடல் செயல்பாட்டுடன் இருந்து வாழ்வது. புதியனவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பது ஒரு நல்ல வழி.
2)மது அருந்தாமல் இருப்பது
3. ஓபியத்தை அறவே தவிர்ப்பது (போதை மருந்தை தவிர்ப்பது)
4) புகை பிடிக்காமல் இருப்பது
5) மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது
6) நல்ல உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவது
7) அன்றாடம் தேவையான தூக்கத்தைக் கொள்வது
8) பாஸிடிவ் அணுகுமுறையை உறவினரிடமும் சமூகத்தினரிடமும் கொள்வது
அறிவியல் உலகம் தரும் ஆலோசனைகளை மேற்கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வோம்!
***







