Post No. 13.422
Date uploaded in London – —9 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (37)
ராமாயணத்தில் சாபங்கள் (37) பிரம்மதேவர் கும்பகர்ணனை சபிப்பது!
ச.நாகராஜன்.
யுத்த காண்டத்தில் அறுபத்தியோராவது ஸர்க்கமாக அமைவது – “ஶ்ரீ ராமரிடம் கும்பகர்ணனை வர்ணிப்பது” என்ற ஸர்க்கம்.
உக்கிரமாக நடந்த போரில் கும்பகர்ணன் வரவே அவனைப் பார்த்த ஶ்ரீ ராமர் ஆச்சரியப்பட்டார்.
விபீஷணரை நோக்கி ஆச்சரியத்துடன், “ மலையை நிகர்த்தவனாய், கிரீடம் புனைந்தவனாய், கபில நிறக் கண்களுடன் மின்னல்களுடன் கூடிய மேகம் போல ஒருவன் காண்கிறானே, இவன் யார்?” என்று வினவுகிறார் அவர்.
உடனே கும்பகர்ணனின் வரலாற்றை விபீஷணர் கூறத் தொடங்குகிறார்.
“இவனைப் போன்ற வேறொரு ராக்ஷஸன் இல்லை. இவனது வரத்தால் இவன் அதிக பலம் பெற்றவன். பசியால் ஆயிரக்கணக்கான பிராணிகள் இவனால் விழுங்கப்பட்டன. போரிட அவனோடு வந்த இந்திரனை நையப் புடைத்து அவனது யானையான ஐராவதத்தின் தந்தம் ஒன்றை முறித்தெடுத்துக் கொண்டான். உடனே இந்திரன் தன் பிரஜைகளோடு பிரம்மாவை அணுகி முறையிட்டான். “இப்படி இவன் தின்று வருவானேயாகில் பூமியில் யாருமே இருக்கமாட்டார்கள்” என்றான் அவன்.
அவர் கும்பகர்ணனைப் பார்த்து பின் வருமாறு சபித்தார்:
த்ருவம் லோகவிநாஷாய பௌலஸ்த்யேநாஸி நிர்மித: |
தஸ்மாத்த்வமத்யப்ரம்ருதி ம்ருதகல்ப: ஷயிஷ்யஸே ||
லோக விநாஷாய – உல்க அழிவின் பொருட்டு
பௌலஸ்த்யேன – பௌலஸ்தியரால்
நிர்மித: அஸி – உண்டாக்கப்பட்டிருக்கிறாய்.
த்ருவம் – இது நிச்சயம்
தஸ்மாத் – ஆகையால்
அத்யப்ரப்ருதி – இது முதல்
ம்ருதகல்ப: – செத்தவனுக்கு ஒப்பாவாய்
த்வம் – நீ
ஷயிஷ்யஸே – தூங்கக் கடவாய்
யுத்த காண்டம்,, அறுபத்தியொன்றாம் ஸர்க்கம், ஸ்லோக எண் 24
உடனே பிரம்மதேவரின் சந்நிதியில் கும்பகர்ணன் வீழ்ந்து விட்டான்.
இதைக் கண்ட ராவணன், பதறியவனாய் பிரம்மதேவரைப் பார்த்து, “இவனது தூக்க விஷயத்திலும் விழிப்பு விஷயத்திலும் குறிப்பிட்ட காலம் ஒன்றை விதித்து அருள்வீராக” என்று விண்ணப்பம் செய்து கொண்டான்.
உடனே பிரம்ம தேவர் கூறலானார் இப்படி:
ஷயிதா ஹ்யேஷ ஷண்மாஸானேகாஹம் ஜாகரிண்யதி |
ஏகேநாஹ்யா த்வஸௌ வீரஸ்சரன்பூர்மி புபுக்ஷித: |\
வ்யாத்தாஸ்யோ பக்ஷயேல்லோகான் சம்க்ருத்த இவ பாவக: |\
ஏஷ ஹி – இவனும்
ஷண்மாஸான் – ஆறு மாதங்கள்
ஷயிதா – தூங்குவான்
ஏகாஹம் – ஒரு நாள்
ஜாகரிண்யதி – விழித்திருப்பான்
வீர: – வீரனாகிய
அஸௌ – இவன்
ஏகேன ஆஹ்யா து – அந்த ஒரு நாளிலோ
புபுக்ஷித: – பசி கொண்டவனாய்
பூமி, – பூமியில்
சரன் – சஞ்சரிக்கின்றவனாய்
வ்யாத்தாஸ்ய – வாயைத் திறந்து கொண்டு
சம்க்ருத்த – சினம் கொண்டவனாய்
பாவக: இவ – அக்னி போன்றவனாய்
லோகான் – ஜந்துக்களை
பக்ஷயேன – விழுங்கித் தின்று வருவான்”
– யுத்த காண்டம்,, அறுபத்தியொன்றாம் ஸர்க்கம், ஸ்லோக எண் 28 & 29
இப்படியாக கும்பகர்ணனின் சாபம் பற்றி விபீஷணர் ஶ்ரீ ராமருக்கு எடுத்துக் கூறினார்.
பிரம்ம தேவர் கும்பகர்ணனை சபிக்க, ராவணன் அவனுக்காகப் பரிந்து சாப விமோசனம் கேட்க பிரம்மா “ஆறு மாதம் தூக்கம்; ஒரு நாள் விழிப்பு” என்று சாபத்திற்கு ஒரு விதிவிலக்கு அளித்தார்.
இதனால் கும்பகர்ணன் ஏன் உறங்கிக் கொண்டே இருக்கிறான் என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது.
இத்துடன் யுத்த காண்டத்தில் வரும் மூன்று சாபங்களும் முடிகிறது.
இனி உத்தர காண்டத்தில் வரும் 24 சாபங்களைப் பார்ப்போம்.
**