ராமாயணத்தில் சாபங்கள் (39)  விஸ்ரவஸ் கைகஸீயிடம் கூறியது! (Post No13,429)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.429

Date uploaded in London – 11 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (39) 

ராமாயணத்தில் சாபங்கள் (39) விஸ்ரவஸ் கைகஸீயிடம் கூறியது! 

ச. நாகராஜன்.

உத்தர காண்டத்தில் ஒன்பதாவது ஸர்க்கமாக அமைவது, “ராவணன் முதலியவர்களின் உற்பத்தி” 

ஒரு காலத்தில் ஸுமாலி என்ற அரக்கன் தன் அழகிய புதல்வியான கைகஸீ  என்ற கன்னிகையுடன் மண்ணுலகில் திரிந்து கொண்டிருந்த போது குபேரனது விமானத்தைப் பார்த்து வியந்தான்.  நாம் எதைச் செய்தால் தலை எடுப்போம் என்று எண்ணிய அவன், தன் புதல்வியை நோக்கி,  “நீ முனிவர்களுள் சிறந்தவரான விஸ்வரஸை சரண் அடைந்து அவரைக் கணவனாகப் பெறு” என்றான்.

இதைக் கேட்ட கைகஸீ விஸ்வரஸ் தவம் புரிந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து நாணத்துடன் நின்றாள்.

அவளைப் பார்த்த முனிவர், “ நீ யார்?எதற்காக இங்கு வந்தாய்?” என்றார்.

“தங்களது திருஷ்டி கொண்டு எனது கருத்தை அறிந்து கொள்ளுங்கள். நான் தந்தையின் ஆக்கினையால் இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கைகஸீ” என்றாள்.

“ஞான திருஷ்டி இன்றி அறிவால் உன் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறிய முனிவர் தொடர்ந்தார் இப்படி:

சுதாபிலாஷோ மத்தஸ்தே மத்தமாதங்காமினி!

தாருணாயாம் து வேலாயாம் யஸ்மாத்வம் மாமுபஸ்திதா ||

ச்ருணு தஸ்மாத்சுதான் பத்ரே யாதுஷாஞ்சனயிஷ்யஸி  |
தாருணாந்தாருணாகாராந்தாருணாபி ஜனப்ரியான் ||

ப்ரஸவிஷ்யஸி சுஸ்ரேணி ராக்ஷஸான்  க்ரூரகர்மண: |

ஸா து தத்வசனம் ச்ருத்வா ப்ரணிபத்யாப்ரவீத்வச: |\ 

–    உத்தரகாண்டம் , ஒன்பதாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 21,22,23

 மத்தமாதங்க காமினி – மதயானை போன்ற கமனமுடையவளே!

தே – உனக்கு

மத்த: – என்னிடமிருந்து

சுதாபிலாஷ: – புத்திரப் பெருக்கு வேண்டுமென்பது.

து – ஆனால்

த்வம் – நீ

மாம் – என்னை

தாருணாயாம் – கொடிய

வேலாயாம் – வேளையில்

உபஸ்திதா – வந்து சேர்ந்தாய்

யஸ்மாத் தஸ்மாத் – இந்தக் காரணத்தினால்

சுஸ்ரேணி – இடையழகுடைய

பத்ரே – நங்காய்

யாதுஷான் – எத்தன்மையரான

சுதான் – புதல்வர்களை

ஜனயிஷ்யஸி – பெறப் போகிறாயோ

ச்ருணு – அதை சொல்லுகின்ற என்னிடமிருந்து கவனித்துக் கேள்

தாருணான் – கொடியவர்களும்

தாருணாகாரான் – பயங்கரமான உருவம் கொண்டவர்களும்

தாருணானி ஜனப்ரியான் – கொடிய பரிஜனங்களிடத்தில் அன்புள்ளவர்களும்

க்ரூர கர்மண: – கொடிய தொழில்களை புரிபவர்களுமான

ராக்ஷஸான் – ராக்ஷஸர்களை

ப்ரஸவிஷ்யஸி – பிரசவிப்பாயாக”

ஸா – அவ:

தத்வசனம் – அந்த அவரது மொழியைக்

ச்ருத்வா து – கேட்டதுமே

ப்ரணிபத்ய – அடிபணிந்து ஸேவித்து

வச: – பதிலை

அப்ரவீத் – மொழிந்தாள்

“தேவரீரே! பிரம்மவித்தான தங்களிடமிருந்து நான் இப்படிப்பட்ட தீய ஒழுக்கங்களை உடையவர்களை புதல்வர்களாகப் பெற வரித்தேனில்லை. கிருபை செய்வீராக” – கைகஸீயின் இந்த மொழியைக் கேட்ட முனிவர், “ உனக்குக் கடைசிப் புதல்வன் எவனோ அவன் மட்டும் எனது குலத்திற்கேற்றவனாயும் தர்மாத்வாகவும் விளங்குவான்”  என்றார்.

இதில் சாபம் இல்லை என்றாலும் கூட தவறான வேளையில் வைக்கப்பட்ட கோரிக்கையால் நேரும் விபரீதத்தை முனிவர் வாக்கு தெரிவிக்கிறது.

இதன்படியே கைகஸீ, ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன் ஆகியோரைப் பெற்றாள்.

இப்படியாக ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை விபீஷணன் ஆகியோரின் ஜனனம் பற்றி நமக்குத் தெரிய வருகிறது.

**

Leave a comment

Leave a comment