
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.432
Date uploaded in London – —12 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (38)
ராமாயணத்தில் சாபங்கள் (38) புலஸ்தியரின் சாபம்!
ச. நாகராஜன்.
வால்மீகி ராமாயணத்தில் இறுதி காண்டமாக அமையும் உத்தர காண்டத்தில் 110 ஸர்க்கங்கள் உள்ளன. இதில் உள்ள மொத்த ஸ்லோகங்களின் எண்ணிக்கை 3276. பல அபூர்வ விஷயங்களைச் சொல்லும் காண்டம் இது. இதில் 24 சாபங்களைப் பற்றி சொல்லப்படுகிறது.
இதில் இரண்டாவது ஸர்க்கமாக அமைவது “பௌலஸ்தியோத்பத்தி”.
பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ராஜ்யத்தை ஆளும் ஶ்ரீ ராமரை வாழ்த்தி ஆசீர்வதிக்க அகஸ்திய முனிவரோடு ஏராளமான ரிஷிகள் வந்தனர்.
ஒவ்வொரு ராக்ஷஸன் பெயரைச் சொல்லி அவன் வதைக்கப்பட்டதால் சந்தோஷம் என்று அவர்கள் ஶ்ரீ ராமரிடம் தெரிவித்தனர்.
இந்திரஜித்தைப் பற்றி மட்டும் ஏன் மிக உயர்வாகக் கூறுகிறீர்கள் என்று ராமர் அகஸ்தியரைப் பார்த்துக் கேட்கவே அவர் ராவணனது குலத்தைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
சத்ய யுகத்தில் பிரம்மாவின் ஒரு புதல்வரான புலஸ்தியர் என்பவர் இருந்தார். அவர் ஒரு சமயம் ராஜரிஷி திருணபிந்து ஆசிரமத்திற்குச் சென்று அங்கு வசிக்கலானார். அவர் தவத்தில் இருந்த போது சில கன்னியர் அங்கு சென்று அவரது தவத்திற்கு இடையூறு விளைவித்தார்கள்.
இதனால் கோபமடைந்த புலஸ்தியர் ஒரு சாபத்தைக் கொடுத்தார் இப்படி!
அத க்ருத்தோ மஹாதேஜா வ்யாஜஹார மஹாமுனி |
யா மே தர்ஷன்பாகச்சேத் ஸா கர்ப தாரயின்யதி!|
என்று சபித்தார்.
– உத்தர காண்டம் 2-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 13
அத – அப்போது
மஹா தேஜா: – மிகுந்த தேஜஸ்வீயான
மஹாமுனி – மஹா முனிவர்
க்ருத்த: – கோபித்தவராய்
யா – எவள்
மே – எனக்கு
தர்ஷன் – கண்ணுக்குத் தெரிபவளாய்
ஆகச்சேத் – ஆகிறாளோ
ஸா – அவள்
கர்ப – கர்ப்பத்தை
தாரயின்யதி – தரித்தவளாய் ஆவாள்
வ்யாஜஹார – என்று சபித்தார்.
இதைக் கேட்ட கன்னியர் அனைவரும் சாபத்திற்கு பயந்து அங்கு செல்வதை நிறுத்தி விட்டனர்.
ஆனால் திருணபிந்துவின் மகள் இதைக் கேட்கவில்லை. அவள் அங்கு அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். ரிஷி அப்போது வேத கோஷம் செய்ய அவள் அவரைக் கண்டாள். அந்தக் கணமே அவள் கருத்தரித்தவளாயும் தேகம் வெளுத்தவளாகவும் ஆனாள்..
தனது ஆசிரமத்திற்கு அவள் செல்ல அவளது தேகத்தைப் பார்த்த திருணபிந்து யாது காரணம் என்று வினவினார். தான் புலஸ்திய மஹரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றதாகவும் அங்கு தனது தோழியர் யாரும் இல்லை என்றும் அவள் தெரிவிக்க, நடந்தது அனைத்தையும் ஞான திருஷ்டியால் திருணபிந்து தெரிந்து கொண்டார்.
உடனே தன் புதல்வியை அழைத்துக் கொண்டு புலஸ்தியரின் ஆசிரமத்திற்குச் சென்று புலஸ்தியரிடம், “என் புதல்வியை ஏற்று அருள்க” என்றார். “அப்படியே ஆகட்டும்”, என்றார் புலஸ்தியர். அவளை பாணிகிரஹணமும் செய்து கொடுத்தார் திருணபிந்து.
அவளது பணிவிடையால் சந்தோஷமடைந்த புலஸ்தியர் இப்படிக் கூறினார்:
பரிதுஷ்டோஸ்மி சுஸ்ரோணி குணானாம் சம்பதா ப்ருஷம் \
தஸ்மாத் தேவி ததாம்பத்ய புத்ரமாத்மசமம் தவ ||
உபயோர்வம்சகர்தாரம் பௌலஸ்த்ய இதி விஸ்ருதம் ||
சுஸ்ரோணி – அழகான இடை உள்ளவளே
குணானாம் – உன் குணங்களின்
சம்பதா – மேன்மையால்
ப்ருஷம் – அதிகமாக
பரிதுஷ்ட: சந்தோஷமடைந்தவனாக
அஸ்மி – ஆகிறென்
தஸ்மாத் – ஆதலால்
அத்ய – இப்பொழுது
தேவி – தேவியே
தவ – உனக்கு
உபயோ: – இருவர்களுடைய
வம்சகர்தாரம் – வ,ம்சத்தை விளங்கச் செய்பவனாய்
ஆத்ம சமம் – எனக்கு இணையான
விஸ்ருதம் – பெருமையை உடையவனாய்
பௌலஸ்த்ய – பௌலஸ்தியன்
இதி – என்ற
புத்ரௌ – ஒரு புத்திரனை
ததாமி – அனுக்ரஹிக்கிறேன்
– உத்தர காண்டம் 2-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 29
இவ்வாறு கூறிய புலஸ்தியர் அவன் விஸ்ரவஸ் என்ற பெயருடன் விளங்குவான்”
என்றும் கூறி அருளினார்.
புலஸ்தியரின் சாபமே திருணபிந்துவின் புத்திரிக்கு வரமாக அமைந்ததை இங்கு நாம் பார்க்கிறோம்.
***