Post No. 13.434
Date uploaded in London – —13 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (40)
ராமாயணத்தில் சாபங்கள் (40) விஸ்ரவஸ் கைகஸீயிடம் கூறியது!
ச. நாகராஜன்.
உத்தர காண்டத்தில் பதினோராவது ஸர்க்கமாக அமைவது, “ராவணன் லங்கையை அடைவது”. பன்னிரண்டாவது ஸர்க்கமாக அமைவது- “ராவணன் முதலியவரது விவாஹம்’.
அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்கு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் நடந்த விவாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்.
லங்கையை குபேரன் ஆண்டு வந்தான். அப்போது ரஸாதல லோகத்திலிருந்து வந்த ஸுமாலி ராவணனை நோக்கி, “குழந்தாய்! நீ பிரம்மாவிடமிருந்து உத்தமமான வரத்தைப் பெற்று விட்டாய். விஷ்ணுவின் மீது ஏற்பட்ட நமது பயம் நீங்கியது. நீ இலங்கைக்கு மன்னனாக ஆவாய்.” என்றார்.
பிரஹஸ்தனும் அதை ஆதரித்து இலங்கைக்கு மன்னனாக ஆகும்படி தன் கருத்தைத் தெரிவித்தான். உடனே பிரஹஸ்தனையே தனது தூதுவனாக ராவணன் சகோதரன் குபேரனிடம் அனுப்பினான்.
பிரஹஸ்தன் குபேரனிடம் லங்கையை ராவணான் ஆள விரும்புகிறான் என்று சொன்ன போது குபேரன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
சரி என்று சொன்னான்.
பிரம்ம ரிஷியும் தனது தந்தையுமான விஸ்ரவஸிடம் சென்று இந்த விஷயத்தில் அபிப்ராயம் கேட்டான்.
அவர், “ராவணன் என்னால் எவ்வளவோ புத்திமதி சொல்லப்பட்டான். ஆனால் தீய தொழிலிலேயே பற்றுடையவனாக இருக்கிறான். அவன் இலங்கைக்கு மன்னனாக ஆகட்டும்” என்கிறார்.
வரப்ரதாநாத்சம்மூடோ மான்யாமான்யான்ஸ துர்மதி: |
ந வேத்தி மம சாபாஸ்ச ப்ரக்ருதிம் தாருணாம் கத: |\
உத்தர காண்டம், பதினோராவது ஸர்க்கம்., ஸ்லோகம் 40
ஸ: – அவன்
வரப்ரதாநாத் – வர ப்ரசாதத்தினால்
சம்மூட: – மதி மயக்கம் கொண்டவனாகியும்
துர்மதி – தீய வழியையே நாடுகின்றவனாகியும்
மம – எனது
சாபாத் – சாபத்தினால்
தாருணம் – கொடுமையான
ப்ரக்ருதிம் – பிறவிக்குணத்தை
கத: ச – அடைந்தவனாகவும்
மான்யாமான்யான் – பெரியோர்களையும் சிறியோர்களையும்
ந வேத்தி – பகுத்தறியாமலிருக்கிறான்”
இவ்வாறு விஸ்வரஸ் கூறுகிறார்.
இங்கு அவர் தந்த சாபத்தைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.
ராவணன் மகிழ்ச்சியுடன் இலங்கைக்குச் சென்று ஆள ஆரம்பித்தான்.
ஒரு நாள் தனது தங்கையின் திருமணம் பற்றி ஆலோசித்த அவன் வித்யுத்ஜிஹ்வன் என்பவனுக்கு பாணிக்ரஹணம் செய்து கொடுத்தான்.
ஒரு நாள் வனத்திற்குச் சென்ற போது திதியின் புதல்வானாகிய மயனை அவனது புத்திரியான மண்டோதரியுடன் சந்தித்தான்.
அவர்களை யார் என்று ராவணன் கேட்க தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட மயன் மண்டோதரியை தர்மபத்னியாக ஏற்குமாறு ராவணனிட்ம் கூறுகிறான்.
ராவணனும் அதற்கு சம்மதித்தான். கல்யாணமும் நடந்தது.
அகஸ்தியர் ராமனிடம் கூறுகிறார்:
ஸ ஹி தஸ்ய மயோ ராம சாபாபிஞஸ்தபோ தனாத் |
விதித்வா தேன ஸா தத்தா தஸ்ய பைதாமஹம் குலம் ||
– உத்தர காண்டம், பன்னிரண்டாவது ஸர்க்கம்., ஸ்லோகம் 20
ராம! – ஓ, ராம
ஸ: – அந்த
மய: – மயனானவன்
தஸ்ய – அவனுக்கு
தபோதனாத் – தபோதனரிடமிருந்து
சாபாபிஞ: ஹி – சாபம் இருக்கிறதென்று’ அறிந்தவன் தான்
தஸ்ய – அவனுடைய
பைதாமஹம் – கொள்ளுப்பாட்டனார் (பிரம்மதேவரது)
குலம் – குலப்பெருமையை
விதித்வா – பாராட்டி
ஸா – அவள்
தேன – அவனால்
தத்தா – கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டாள்
இந்த சாபத்தைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
ஆனால் ஏன் விஸ்ரவஸ் ராவணனுக்கு சாபத்தைக் கொடுத்தார் என்பது தெளிவாக தரப்படவில்லை. (கொடிய வேளையில் வந்து சேர்ந்தாய் என அவர் கைகஸீயிடம் சொல்வதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்)
இப்படியாக ராவணன் மண்டோதரியை மணந்தது குறித்து அகத்தியர் ராமரிடம் கூறுகிறார்.
**