Post No. 13.438
Date uploaded in London – —14 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (41)
ராமாயணத்தில் சாபங்கள் (41) பார்வதி தேவியைப் பார்த்த குபேரனின் இடது கண் பிங்கள நிறமானது!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் பதிமூன்றாவது ஸர்க்கமாக அமைவது, “குபேரனது தூதனைக் கொல்வது”.
லங்கையை ஆளத் துவங்கிய ராவணன் கட்டுக்கடங்காதவனாக தேவர்கள், ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரையும் துன்பப்படுத்த ஆரம்பித்தான். அங்குள்ள அழகிய நந்தவனங்களை அழித்தான்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட குபேரன் ஒரு தூதனை ராவணனிடம் அனுப்பினான்.
அவன் ராவணனிடம் சென்று குபேரன் சொன்னதாக, “மனம் போன போக்கில் இதுவரை செய்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினான்.
அத்துடன் குபேரன் தனக்கு ஒரு கண் பிங்கள நிறமான வரலாற்றை ராவணனிடம் தூதன் மூலமாகக் கூறுகிறான்.
ஒரு முறை குபேரன் கேதாரம் என்ற ஒரு விரதத்தை மேற்கொண்டான். அதற்காக இமயமலைக்குச் சென்றான். அங்கு குபேரனால் உபாசிக்கப்பட்ட பரமசிவன், பார்வதி தேவியுடன் இருக்க அவர்களை குபேரன் பார்த்தான். கண்ணைப் பறிக்கும் ஜோதி கொண்டவராக உமாதேவியின் சுந்தர ரூபத்தைக் கண்ட குபேரன் இவர் யாராக இருக்கலாம் என்று அறிய விரும்பியபோது அவனது இடது கண் அம்மனை நோக்கி வீழ்த்தப்பட, அந்தக் கண் தேவியின் தெய்வ ஒளியால் புழுதியால் மறைக்கப்பட்டு பார்வை சக்தி ஒழிந்ததாக ஆனது. வேறு விபரீத எண்ணத்துடன் குபேரன் பார்வையைச் செலுத்தவில்லை.
பின்னர் மலையின் மற்றொரு விசாலமான சாரலை அடைந்து எண்ணூறு வருடங்கள் மஹா விரதம் ஒன்றை அனுஷ்டித்தான். இதனால் ப்ரீதி அடைந்த பரமேஸ்வரன் குபேரனை நோக்கி, “தேவியின் பிரபாவத்தால் தேவியின் ரூபத்தில் கண் வீழ்த்தப்பட்டதால் எந்த உனது இடது கண் பார்வையை இழந்ததோ அது மண் நிறத்தை அடைந்தது. ஆகவே இந்தக் காரணத்தினால் இனிமேல் நீ ‘ஏகாக்ஷி பிங்களன்’ என்ற பெயரை சாச்வதமாய் அடைவாய்” என்றார்.
திரும்பி வந்த குபேரன் ராவணனது தீச்செயல்களைக் கேட்கவே தூதனை நல்லுரை சொல்ல அனுப்பினான்.
ஆனால் இதைக் கேட்ட ராவணன் கோபம் கொண்டு தூதனையே வெட்டிக் கொன்றான். மூன்று உலகங்களையும் வெல்லக் கருதி குபேரனை நோக்கிக் கிளம்பினான்.
இந்த வரலாற்றில் இந்த ஸர்க்கத்தில் 24வது ஸ்லோகமாக வருவது இது:
தேவ்யா திவ்யப்ரபாவேன துக்தம் மமேக்ஷணம் |
ரேணுத்வஸ்தமிவ ஜ்யோதி: பிங்களத்வமுபாகதம் |\
– உத்தர காண்டம், 13-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 24
தேவ்யா – அம்மனின்
திவ்யப்ரபாவேன – தெய்வ ஒளியால்
மம – எனது
ஜ்யோதி – சக்ஷூரிந்திரியங்களில் ஒன்றாகிற
சவ்யம் – இடது
ஈர்ஷணம் – கண்
ரேணுத்வஸ்தம் இவ – புழுதியால் மறைக்கப்பட்டதென
தக்தம் – பார்வை சக்தி ஒழிந்ததாக
பிங்களத்வம் – பிங்கள (மண்) நிறத்தை
உபாகதம் – அடைந்துவிட்டது.
இங்கு சாபம் எதுவும் தரப்படவில்லை. குபேரனின் இடது கண் பிங்கள நிறம் ஆயிற்று. இது பார்வதி தேவியின் திவ்ய ஜோதியாலா அல்லது சாபத்தினாலா? சாபம் என்று கூற முடியாது, ஏனெனில் எந்த வார்த்தையும் பார்வதி தேவியின் வாயிலிருந்து வரவில்லை.
என்றாலும் குபேரன் ஏகாக்ஷி பிங்களன் ஆன வரலாறு இங்கு தரப்படுகிறது.
**