ராமாயணத்தில் சாபங்கள் (43) வேதவதீ ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,445)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.445

Date uploaded in London – 16 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (43) 

ராமாயணத்தில் சாபங்கள் (43) வேதவதீ ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “வேதவதீ சாபம்’ என்ற ஸர்க்கம்.

ஒரு காலத்தில் ராவணன் பூமண்டலத்தில் திரிந்து கொண்டிருந்த சமயம் இமயமலைச் சாரலில் தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.

“பெண்ணே, நீ யார்? உனது யௌவனத்திற்கு ஒவ்வாத இதை ஏன் அனுஷ்டிக்கிறாய்?” என்று கேட்டான்.

அந்தப் பெண் அதிதி பூஜையை உரிய படி செய்து விட்டு, “எனது தந்தை குசத்வஜர் என்ற பிரம்ம ரிஷி. பிரஹஸ்பதியின் புதல்வர். அவரது பெண்ணான எனது பெயர் வேதவதீ. என்னை தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்டோர் மணப்பதற்காகப் பெண் கேட்டு வந்தனர். தந்தையார் விஷ்ணுவையே மருமகனாக மனதில் நிர்ணயித்து விட்டார். அந்தச் சமயத்தில் சம்பு என்ற ராக்ஷஸ அரசன் எனது தந்தையார் தூங்கிக் கொண்டிருந்த போது அவரைக் கொன்றான். இதனால் துக்கமடைந்த எனது தாயார் அவரது உடலுடன் அக்கினியில் பிரவேசித்தாள். நான் என் தந்தையாரின் மனோரதத்தை நிறைவேற்றுவதாக சங்கல்பம் கொண்டு நாராயணனையே மனதால்  ஸ்திரமாய் வரித்து வருகிறேன்” என்றாள்.

ராவணன், “ நான் தசக்ரீவன். லங்கா அதிபதி. எனது மனைவியாக நீ ஆகி விடு” என்றான்.

‘இப்படி எல்லாம் உளறாதே’ என்று வேதவதீ சொல்லிக் கொண்டிருக்கும் போது அவளது கூந்தலை ராவணன் உள்ளங்கையால் தொட்டான்.

உடனே கோபம் கொண்ட வேதவதீ அந்தக் கூந்தலை அறுத்தாள். அவளது கையே கத்தியாக ஆனது. அக்கினியை வளர்த்து உடலை அதில் அர்ப்பணிக்க தீர்மானித்த அவள் கோபம் கொண்டு ராவணனைப் பார்த்து இப்படி மொழிந்தாள்:

யஸ்மாத் தர்ஷிதா சாஹம் த்வயா பாபாத்மா வனே |

தஸ்மாத்த்வம் வதார்தம் ஹி சமுத்பத்ஸ்யே ஹ்ருஹம் புன: ||

அஹம் – நான்

பாபாத்மா – பாபாத்மாவாகிய

த்வயா – உன்னால்

வனே – காட்டில்

தர்ஷிதா – கை தீண்டப்பட்டேன்

யஸ்மாத் தஸ்மாத் – அந்தக் காரணத்தால்

தவ – உனது

வதார்தம் ச – மரணத்திற்காகவே

அஹம் ஹி – நானே

புன: து – இன்னொரு தரமும்

சமுத்பஸ்யே – ஆவிர்ப்பவிக்கப்போகிறேன்

ந ஹி சக்யம் ஸ்திரியா ஹன்ந்தும் புருஷ: பாபநிஸ்சய: |

சாபே த்வயி மயோத்ப்ருஷ்டே தபசஸ்ச வ்யயோ பவேத் |\

ஸ்திரியா – பெண்ணாகிய

மயா – என்னால்

த்வயி – உன் பேரில்

சாபே – சாபம்

உத்ருஷ்டே ச – இடப்பட்டதேயாகில்

தபஸ: – தவப் பெருமைக்கு

வ்யய: – குறைவு

பவேத் – ஏற்படும்

பாபநிஸ்சய: – பாவத் தொழிலே புரியும்

புருஷ ஹி – புருஷனாக இருந்தும்

ஹந்தும் – கொன்று விட

சக்யம் ந – விதியில்லை

யதி த்வம்ஸ்தி மயா கிஞ்சித்க்ருதம் தத்தம் ஹுதம் ததா |

தஸ்மாத்த்வயோனிஜா சாத்வீ  பவேயம் தர்மிண: சுதா ||

தஸ்மாத் – ஆகையால்

மயா – என்னால்

க்ருதம் து – செய்யப்பட்ட புண்யங்களின் பலனும்

தத்தம் து – கொடுக்கப்பட்ட தானங்களின் பலனும்

ஹுதம் ததா – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பலனும்

கிஞ்சித் – கொஞ்சமேனும் இருக்கிறதென்றால்

அயோனிஜா – அயோனிஜையாக – (கர்ப்பவழி இல்லாமல் பிறப்பவளாய்)

தர்மிண: – ஒரு தர்மாத்மாவின்

சாத்வி – அருமை

சுதா – பெண்ணாக

பவேயம் – விளங்குவேன்

 உத்தரகாண்டம், பதினேழாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 31 முதல் 34 முடிய

இவ்வாறு சொல்லி விட்டு வேதவதீ  அக்னியில் குதித்து விட்டாள்.அப்போது ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.

அகத்திய முனி இப்படிக் கூறிவிட்டு, “தேவரீர் நீரே விஷ்ணு. சீதையே வேதவதீ” என்று  உண்மையை ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.

யுத்தகாண்டத்தில் வேதவதீயின் இந்த சாபத்தையும் ராவணன் நினைவு கூர்கிறான்.

அறுபதாவது ஸர்க்கம், ஸ்லோகம் 10, 11

சபதோஹம் வேதவத்யா ச யதா ஸா தர்ஷிதா புரா |

சேயம் சீதா மஹாபாகா ஜாதா ஜனகநந்தினீ ||

புரா – முன்னால்

யதா – எப்பொழுது

ஸா – அவள்

தர்ஷிதா – தீண்டப்பட்டாளோ அப்போது

வேதவத்யா  – வேதவதீ என்ற அவளால்

அஹம் – நாம்

சபத: – சபிக்கப்பட்டேன்

ஜனக நந்தினி – ஜனகரின் மகளாய்

மஹாபாகா – பேரெழில் வாய்ந்தவளாய்

ஜாதா – பிறந்து

சீதா – சீதா என்ற பெயருடன் விளங்கும்

இயம் – இவள்

ஸா ச – அவளே தான்.

இப்படி ராவணன் தனக்கு முன்னால் கொடுக்கப்பட்ட சாபத்தை யுத்த காண்டத்தில் நினைவு கூர்கிறான். இதை அடுத்து நந்தீஸ்வரர், ரம்பை, வருணனின் மகள் கொடுத்த சாபத்தையும் கூறுகிறான்.

**

Leave a comment

Leave a comment