ராமாயணத்தில் சாபங்கள் (48) ப்ருகு முனிவர் மஹாவிஷ்ணுவுக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,461)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.461

Date uploaded in London – 21 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (48) 

ராமாயணத்தில் சாபங்கள் (48) ப்ருகு முனிவர் மஹாவிஷ்ணுவுக்குக் கொடுத்த சாபம்! 

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில்  ஐம்பத்தோராவது ஸர்க்கமாக அமைவது, “பிருகு மஹரிஷியின் சாபம்’ என்ற ஸர்க்கம்.

சுமந்திரரை நோக்கி லக்ஷ்மணர், “ஏன் ராமர் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறார்” என்று கேட்க சுமந்திரர், “யாரிடமும் சொல்லக் கூடாத ரகசியத்தைச் சொல்கிறேன்” என்று ராமரது சோகத்திற்கான காரணத்தைச் சொல்கிறார்.

முன்னொரு காலத்தில் துர்வாஸ மஹரிஷி வசிஷ்டருடைய ஆசிரமத்தில் வந்து தங்கி இருந்தார். அப்போது அவரை வணங்கிய தசரதர் தனது வம்சத்தைப் பற்றிக் கூறி அருளுமாறு அவரை வேண்டினார்.

உடனே துர்வாஸர் மஹாவிஷ்ணு சாபம் பெற்றதால் ராமராய் அவதரித்த விருத்தாந்தத்தைக் கூறலானார்.

முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில் அசுரர்கள் அனைவரும் ஓடி வந்து பிருகு மஹரிஷியின் மனைவியிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.  அங்கேயே வசித்தும் வந்தார்கள்.

இதனால் மிகுந்த கோபம் கொண்ட மஹாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் பிருகு  மஹரிஷியின் மனைவியின் தலையை அறுத்துத் தள்ளினார்.

இதனால் வெகுண்ட பிருகு மஹரிஷி மஹாவிஷ்ணுவுக்கு இப்படி சாபம் கொடுத்தார்:

யஸ்மாதவத்யாம் பத்னிமவதீ: க்ரோதமூர்ச்சித: |

தஸ்மாத்த்வம் மானுஷே லோகே ஜனிஷ்யஸி ஜனார்தன ||

தத்ர பத்னிவியோகம் த்வம் ப்ராப்ஸ்யஸே பஹுவார்ஷிகம் ||

ஜனார்தன – ஹே ஜனார்தனா!

த்வம் – நீ

க்ரோதமூர்ச்சித: – கோபத்தால் மெய்மறந்தவனாகி

அவத்யாம் – கொல்லத் தகாதவளான

மே – எனது

பத்னீ, – பத்னியை

அவதீ: – கொன்று விட்டாய்

யஸ்மாத் தஸ்மாத் – ஆகவே

மானுஷே லோகே – மானிட உலகில்

ஜனிஷ்யஸி – நீ பிறக்கக் கடவாய்

தத்ர – அவ்விடத்தில்

த்வம் – நீ

பஹுவார்ஷிகம் – பல்லாண்டு அளவு

பத்னி வியோகம் – மனைவியைப் பிரிவதை

ப்ராப்யஸே – அடையக் கடவாய்

–    உத்தர காண்டம், 51-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 15 & 16

பிருகு மஹரிஷி இப்படி மஹாவிஷ்ணுவை சபித்து விட்டாலும் கூட  மிகுந்த வருத்தத்தை அடைந்தார்.

மஹாவிஷ்ணுவும் தாபத்தை அடைந்தார்.

பிருகு மஹரிஷி வருந்தி இருக்க சப்த ரிஷிகள் அவரிடம் வந்தார்கள். என்னை இப்படி ஒரு சாபம் கொடுத்ததிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர்களிடம் பிருகு வேண்டினா.

ஶ்ரீமன் நாராயணனையே நீர் சரணம் அடைவீராக என்று அவர்கள் கூறியருளினர்.

அவரும் மஹாவிஷ்ணுவையே பூஜித்து வந்தார்.

மஹாவிஷ்ணு “நீர் சத்தியமாய் சொன்ன வாக்கை உலக உபகாரத்தின் பொருட்டு அது நிச்சயமாய் என்னால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது தான்” என்று கூறி அருளினார். 

அப்படியே அவர் ஶ்ரீ ராமராக அவதரித்துள்ளார்.

 என்று இப்படி ராமாவதார ரகசியத்தை சுமந்திரர் லக்ஷ்மணருக்குக் கூற அவர் ‘நன்று, நன்று” என்று கூறி திருப்தி அடைந்தார்.

**

Leave a comment

Leave a comment