ராமாயணத்தில் சாபங்கள் (49) நிருக மஹாராஜனுக்கு இரு பிராமணர்கள் கொடுத்த சாபம்! (Post No.13,465)

Great Rishis bless Rama.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.465

Date uploaded in London – 22 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (49) 

ராமாயணத்தில் சாபங்கள் (49) நிருகமஹாராஜனுக்கு இரு பிராமணர்கள் கொடுத்த சாபம்! 

ச. நாகராஜன் 

உத்தர காண்டத்தில்  ஐம்பத்து மூன்றாவது ஸர்க்கமாக அமைவது, “நிருக மஹாராஜாவின் சாபம்’ என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமரின் உத்தரவின் பேரில் சீதா தேவியை லக்ஷ்மணன் கங்காதீரத்தில் இருந்த வால்மீகி ஆசிரமத்தில் விட்டு விட்டு வந்தான். ராமரிடம் அவரது உத்தரவை நிறைவெற்றி விட்டதையும் சொன்னான்.

“பின்னர் நான்கு தினங்களாக என்னைப் பார்க்க வந்தவர்களை நான் கவனிக்கவில்லை. அப்படி யாரேனும் வந்திருந்தார்கள் எனில் அவர்களை உடனே உள்ளே அனுப்பு” என்று ராமர் லக்ஷ்மணனிடம் கூறி விட்டு, “இது ஒரு அரசன் பிரதி தினமும் செய்யப்பட வேண்டிய காரியம். இப்படிச் செய்யாது விட்ட நிருக மஹாராஜனின் திருஷ்டாந்தத்தைக் கேள்” என்று கூறி நிருக மஹாராஜனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

நிருக மஹாராஜன் பூர்வத்தில் பெரும் புகழ் பெற்றவன். அவன் ஒரு சமயம் கன்றுகளுடன் கூடிய கோடி பசுக்களை தானம் செய்தான். அப்போது ஒரு அந்தணனுடைய பசுவும் கன்றும் அந்த இடத்திற்குத் தப்பித்து வந்திருந்தது. அவையும் தானத்தில் கொடுக்கப்பட்டு விட்டது.

தனது பசுவையும் கன்றையும் காணாமல் தவித்த பிராமணன் கனகலம் என்னும் கிராமத்திற்கு வந்த போது தன் பசுவைக் கண்டான். உடனே தான் அதற்கு வைத்த பேரான சபலா (காமதேனு) என்ற பெயரைக் கூவி அழைத்தான். பசுவும் கன்றும் அவனிடம் வந்தன.

ஆனால் பசுவைத் தானமாகப் பெற்ற பிராமணன் பசுவை விட மறுத்தான்.

ஆகவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ராஜாவிடம் முறையிடத் தீர்மானித்து நிருகனிடம் வந்து ராஜமாளிகை வாயிலில் காத்துக் கிடந்தார்கள். பல தினங்கள் கடந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை.

இதனால் வருத்தமும் கோபமும் அடைந்த அவர்கள் நிருகனுக்கு இப்படி ஒரு சாபத்தைக் கொடுத்தார்கள்;

அர்த்தினாம் கார்யசித்யர்த்தம் யஸ்மாத் த்வம் நைஷி தர்சனம் |

அத்ருஷ்ய சர்வபூதானாம் க்ருகலாஸோ பவிஷ்யஸி ||

கார்யசித்யர்த்தம் – ஒரு காரியத்தை வேண்டி

அர்த்தினாம் –  யாசித்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு

த்வம் – நீ

தர்சனம் – தரிசனம்

ந ஏஷி – கொடுக்காதிருக்கிறாய்

யஸ்மாத் – ஆகையால் இந்தக் காரணத்தினால்

சர்வ பூதானாம்  – எல்லாப் பிராணிகளுக்கும்

அத்ருஷ்ய – கண்களுக்குத் தோன்றாத

க்ருகலாஸ; – ஓணானாய்

பவிஷ்யஸி – ஆகக் கடவாய்

பஹுவர்ஷ சஹஸ்ராணி பஹுவர்ஷ சதானி ச |

ஸ்வ்ப்ரேஸ்மின்க்ருகலாஸோ வை தீர்க காலம் வஸிஷ்யஸி ||

ஸ்வப்ரே – ஒரு குழியில்

க்ருகலாஸ: – ஓணானாகி

அஸ்மின் வை – அதிலேயே

பஹுவர்ஷ சஹஸ்ராணி – அநேக ஆயிரம் ஆண்டுகளும்

பஹுவர்ஷ சதானி – அநேக நூறு ஆண்டுகளும்

தீர்க காலம் – தீர்க்க காலம்

வஸிஷ்யஸி – வசித்திருப்பாயாக

உத்பத்ஸ்யதே ஹி லோகேஸ்மின்யதூனாம் கீர்திவர்தன: |

வாஸுதேவ இதி க்யாதோ லோகே புருஷவிக்ரஹ||

புருஷ விக்ரஹ: மானிட உருவம் கொண்டவராய்

யதூனாம் – யாதவர்களின்

கீர்தி வர்தன: – கீர்த்திக்குக் காரணபூதராய்

லோகே – பூமியில்

வாஸுதேவ: – வாஸுதேவர்

இதி – என்று

க்யாத: ஹி – பெயருடையவராகவும்

அஸ்மின் – இந்த

லோகே – லோகத்தில்

உத்பத்ஸ்யதே – அவதரிப்பார்.

ஸ தே மோக்ஷயிதா ராஜம்ஸதஸ்மாச்சாபாத்பவிஷ்யஸி |

க்ருதா ச தேன காலேன நிஷ்க்ருதிஸ்தே பவிஷ்யதி |\

ஸ: –  ஶ்ரீ மஹாவிஷ்ணு

தேன காலேன – அதற்குரிய காலத்தில்

பவிஷ்யஸி – அவதரிப்பார்

ராஜன் – அரசே

தே – உன்னுடைய

தஸ்மாத் – அந்த

சாபாத் – சாபத்திலிருந்து

மோக்ஷயிதா – விமோசனம் செய்வார்

தே – உனக்கு

நிஷ்க்ருதி: ச – பூர்வ ஸ்திதியும்

க்ருதா பவிஷ்யதி – உண்டு பண்ணப்படட்டும்

உத்தர காண்டம், ஐம்பத்து மூன்றாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 17 முதல் 20 முடிய

இப்படியாக நிருகனின் சரிதத்தை ராமர் லக்ஷ்மணனுக்கு எடுத்துரைத்தார்.

இதைக் கேட்ட லக்ஷ்மணன் செய்த குற்றம் அற்பமாய் இருக்கையில் சாபம் மிகக் கொடியதாக இருக்கிறதே என்று கேட்டான்.

உடனே ராமர் பதிலை விஸ்தாரமாகக் கூறி பூர்வ ஜென்ம விதிப்படி இது அனுபவிக்கப்பட வேண்டியதாயிற்று என்று கூறுகிறார். 

**

Leave a comment

Leave a comment