காளஹஸ்தி சிவன் கோவில்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 12 (Post.13,370)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,470

Date uploaded in London – 23 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

காளஹஸ்தி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் PART- 12

சிறப்புகள் என்ன ?

சம்பந்தரால் படப்பெற்றதால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள கோவில் . அப்பர், சுந்தரர் ஆகிய நாயன்மார்களும் காளப்ப நாதனைத் தொழுது பாடியுள்ளனர் . ஆகவே மூவர் பாடிய தலம் இது.

 63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனாருடன் தொடர்புடைய தலம்

பஞ்ச பூதஸ்தலங்களில் இது வாயு ஸ்தலம் ; அதாவது இங்கே சிவ பெருமான் வாயு உருவில் அருள் புரிகிறார்

இது ராகு- கேது பரிகார தலமும் ஆகும் .

எங்கே உள்ளது?

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது .சென்னையிலிருந்து 125 கி.மீ. சுமார் இரண்டரை மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

திருப்பதியிலிருந்து சுமார் 40 கி.மீ

திருத்தணியிலிருந்து 85 கி.மீ சுமார் இரண்டு  மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

திருப்பதி, சென்னை, காஞ்சீபுரம் , ரேணி குண்டா ஆகிய இடங்களி லிருந்து பஸ்ஸில் செல்வது  எளிது. ரயிலிலும் செல்லலாம். காளாஸ்தித்ரி  என்று வட்டார மக்கள் சொல்லுவார்கள். அதையே பஸ் ஓட்டுநர்களும் சொல்லுவர். திருத்தணி, திருப்பதி ஆகிய புண்ய ஸ்தலங்களுக்குச் செல்வோர் காளஹஸ்தி செல்வதும் வழக்கமாக இருக்கிறது .

காளஹஸ்தி என்றால் என்ன அர்த்தம் ?

சிலந்தி, பாம்பு, யானை ஆகியன சிவ பெருமானை பூஜித்ததால் காளஹஸ்தி என்ற பெயர் ஏற்பட்டது.

ஸ்ரீ = சிலந்தி, காளம்= பாம்பு, அத்தி = யானை ஆகிய மூன்றும் வழிபட்டு சிவனடி சேர்ந்த திருத்தலம்.

ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் இப்போது காணப்படும் கோவிலை எழுப்பினான்

பொன்முகரி என்னும் ஆறு அருகிலேயே ஓடுகிறது .

ராஜேந்திர சோழன் முதல் விஜய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயர் வரை பலரும் திருப்பணி செய்த இந்தக் கோவிலில் அவர்களுடைய கல்வெட்டுகளும் உள்ளன . தமிழ் மொழியிலும் சம்ஸ்க்ருதத்திலும் காளத்தி நாதர் மேல் பல புராணங்களை பெரியோர்கள் இயற்றியுள்ளனர்.

கோவில் வரலாறு

63 நாயன்மார்களில் சம்பந்தருக்கும் முந்தியவர் கண்ணப்ப நாயனார் . அவருடைய கதை தமிழர்கள் அனைவரும் அறிந்ததே; வேடுவர் குலத்தில் பிறந்த அவர் பொன்முகலி ஆற்றைக் கடந்து வந்து ஒரு காட்டுப் பன்றியைத் துரத்தி வந்தபோது, அவருக்கு ஒரு அற்புத உணர்வு,– ஆனந்த உணர்வு –ஏற்படட்டது . மலை மீது ஏறிச் சென்றபோது பூக்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கத்தைக் கண்டு பேரானந்தம் அடைந்தார். கல்வி கற்காதவர் ஆதலால் வாயில் ஜலம் கொண்டு வந்து அதனால் அபிஷேகம் செய்து,  தான் கொன்ற காட்டுப்பன்றி மாமிசத்தை நைவேத்தியம் செய்தார். வழக்கமாகப் பூ ஜை செய்யும் சிவகோசரியார் என்ற பிராமணர் இதையெல்லாம் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டார். சிவ பெருமானே அவர் கனவில் வந்து மறுநாள் காலையில் நடக்கப்போகும் ஒரு காட்சியைக் காண வருமாறு கோவில் குருக்களைப்  பணித்தார் . அவர் மறைந்திருந்து பார்த்தபோது வேட்டுவன் கண்ணப்பன் தன்னுடைய பாணியில் அர்ச்சனயைச் செய்தான். அப்போது சிவனின்– லிங்கத்தின்– ஒரு கண்ணிலிருந்து ரத்தம் கொட்டவே கண்ணப்பன் அதை அகற்றி தன் கண்ணையே எடுத்து சிவலிங்க கண்ணை அடைத்தான் ; அதற்குள் மறுகண்ணிலிருந்து ரத்தம் வரவே தன்னுடைய செருப்புக்காலை சிவலிங்கத்தின் மீது அடையாளத்துக்கு வைத்துக் கொண்டு இரண்டாவது கண்ணையும் பிடுங்கி சிவன் மீது அப்பினான். அப்போது சிவனே  காட்சி தந்து அவனது கண்கள் மீண்டும் பார்வை அடையுமாறு அருள்புரிந்தார்.. இதற்குப் பின்னர் ஆதிசங்கரர் முதல்  பல சிவ பக்தர்கள் கண்ணப்பனைப் புகழந்து பாடினர். கண்களையே தானம் செய்ததால் அவர் பெயர் கண்ணப்பர் ஆனது. அவர் பூஜித்த சிவன் என்பதால் இந்த இடத்தின் புகழ் பரவியது.

மஹாசிவராத்ரி விழா இங்கு மிகப்பெரிய விழா ஆகும்

தேவாரத் தலம் பற்றிய புஸ்தகங்களில் தொண்டை மண்டல தல வரிசையில் இது இடம்பெறும்; இந்த ஊர் ஒரு காலத்தில் தொண்டைமான் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

கிருஷ்ண தேவராயர் 1516ம் ஆண்டில் கட்டிய கம்பீரமான ஏழு நிலைக் கோபுரத்துடன் இப்போது கோவில் காட்சி தருகிறது . அவருக்கு முன்னர் சிற்றரசர்கள் எழுப்பிய மண்டபங்களும் உள .

கோவிலுக்குள் விநாயகர், சுப்பிரமணியர், பால ஞானாம்பிகை , பஞ்சமுகேஸ்வரர், அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன.

கோவிலின் ஒரு சிறப்பு 35 அடி ஆழத்தில் உள்ள பாதாள விநாயகன் சந்நிதி; அகத்தியர் இதை நிறுவினார் ஒரு காலத்தில் பொன்முகலி ஆறு கோவிலுக்குப் பக்கத்தில் ஓடியதாம்; அப்போது அடர்ந்த காடுகள் இருந்த இடம் ; ஊர்ப் பெயரில் அமைந்துள்ள பாம்பு, யானை முதலியவற்றினைப் பார்க்கும்போதே காடு சூழ்ந்த இடம் என்பது புரிபடும்.

இரண்டு கால்களுள்ள மண்டபம் ஒன்றும் இருப்பதால் , யாராவது காளத்தி சென்று வந்தேன் என்று சொன்னால் இரண்டு கால் மண்டபம் பார்த்தாயா? என்று கேட்பார்கள்

கோவிலுக்குத் திருப்பணி செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்ட நகரத்தார் தேவகோட்டை இராமநாதன் செட்டியார் சிலையும் ஆற்றங்கரைக்குச் செல்லும் படிக்கட்டில் இருக்கிறது

கோவிலின் இரண்டு கொடி மரங்களில் ஒன்று ஒரே கல்லால் ஆனது 60 அடி  உயரம் . இதுவும் ஒரு அதிசயம் ஆகும்

கோவிலுக்குள் கண்ணப்பர் உள்பட ஏராளமான திருமேனிகள், சந்நிதிகள் இருக்கின்றன

கோவில் பற்றிய விவரம்

இறைவன் பெயர் – ஸ்ரீ காள ஹஸ்தீஸ்வர சுவாமி, காளாத்ரி நாதர், குடுமித்தேவர்

இறைவி – ஞானப் பிரசன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை

தலமரம் – மகிழம்

தீர்த்தம் – பொன்முகலி ஆறு, ஸ்வர்ணமுகி

மூலவர் – சுயம்பு லிங்கம்

சுவாமி மீது போர்த்தப்பட்ட தங்கக் கவசத்தில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கம் உயரமானது அடிப்பாகத்தில் சிலந்தி, மத்தியில் யானையின் 2 தந்தங்கள், மேற்பாகத்தில் ஐந்து தலை நாகமும் உள்ளன இவைதான் ஊரின் பெயருக்கே காரணம் .

மேற்கு நோக்கிய சந்நிதி; சதுர வடிவ ஆவுடையார் சந்நிதியில் மூலவர் பக்கத்தில் மனோன்மணி தேவியின் உருவம் உள்ளது.

கோவிலில் திருநீறு வழங்கும் மரபு இல்லை. தீர்த்தம் மட்டுமே தருவார்கள். நாம் திருநீறு பொட்டலம் கொண்டுபோனால் சுவாமியின் பாதத்தில் வைத்துத் தருகிறார்கள் .

வில் ஏந்திய கண்ணப்பர் உருவத்தைத் தரிசிக்க மறந்துவிடக்கூடாது  ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கமும் குறிப்பிட்டது தக்கது.

இறுதியாக காளத்தி மலை பற்றிய சுவையான விஷயம்

கைலாச கிரி என்று அழைக்கப்படும்  இம்மலை 25 சதுர கி.மீ பரப்புடையது; மலையில் காடுகளுக்கு இடையே சிவ லிங்கங்களும் தீர்த்தங்களும் உள்ளன. பரத்வாஜ ரிஷியின் சிலையும் தீர்த்தமும் உள்ளது; மலை அடிவாரத்தில் நீலகண்டேஸ்வரரைத் தரிசிக்கலாம் 16 கிமீ தொலைவில் ஸஹஸ்ர ராம லிங்கம் கோவில் உளது . ஒரு வருடத்தில் இரண்டு முறை சுவாமி, இந்த மலையை வலம் வருகிறார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமியுடன் செல்கிறார்கள்.

அருணகிரி நாதரும் திருப்புகழில் காளத்தி நாதரைத் துதிபாடுகிறார். தெலுங்குக் கவிஞர் தூர்ஜாட்டி என்பவரும் இறைவன் பெயரில் மகாத்மியம் ஒன்றை இயற்றியுள்ளார்.

காளத்தி நாதன் புகழையும் கைலைகிரி புகழையும் முழுவதும் சொல்ல எவராலும் இயலாது

–சுபம்–

Tags- காளஹஸ்தி சிவன் கோவில்,, ஆந்திர மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 12

Leave a comment

Leave a comment