Post No. 13.469
Date uploaded in London – —23 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (50)
ராமாயணத்தில் சாபங்கள் (50) மஹரிஷி வசிஷ்டர் ராஜரிஷி நிமிக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் ஐம்பத்து ஐந்தாவது ஸர்க்கமாக அமைவது, “நிமியும் வசிஷ்டரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்வது’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமர் லக்ஷ்மணருக்கு நிருகனின் சாபத்தைத் தொடர்ந்து ராஜரிஷி நிமி பற்றிக் கூறலானார்.
இக்ஷ்வாகு வம்சத்தின் பன்னிரண்டாவது தலைமுறை பிள்ளையாய் வீர்யத்திலும் தர்மத்திலும் நிபுணராக இருந்த நிமி என்று ஒரு மன்னர் இருந்தார்.
அவர் ஒரு காலத்தில் கௌதம முனிவருடைய ஆசிரமம் அருகில் அமராவதி பட்டணத்திற்கு நிகரான ஒரு நகரை நிர்மாணித்தார்.
தன் தந்தையின் மனதை ஆனந்திக்கச் செய்ய வேண்டுமென்று தீர்க்கசத்திரம் என்ற ஒரு யாகத்தையும் செய்ய விரும்பினார்.
அதற்கு வசிஷ்டரை அழைத்த போது அவர், “ இதற்கு முன்னாலேயே இந்திரன் அழைப்பிற்கு சரி என்று சொல்லி இருக்கிறேன். அது முடிந்தவுடன் நீ ஆரம்பிக்கலாம்” என்றார்.
பின்னர் கௌதமர் இதைச் செய்ய ஒப்புக் கொண்டார்.
இமயமலைச் சாரலில் யாகத்தைச் செய்தார்.
இந்திரன் யாகத்தை முடித்த பின்னர் வசிஷ்டர் நிமியிடம் வந்தார்.
ஆனால் யாகம் கௌதம ரிஷியால் முடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
ஆகையால் பெரும் கோபம் கொண்டார்.
அவர் நிமியைப் பார்க்கக் கருதி ஒரு முகூர்த்த காலம் காத்திருந்தார்.
ஆனால் நிமியோ நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.
அதனால் அவரது கோபம் இன்னும் அதிகரித்தது.
உடனே அவர் இப்படி சாபமிட்டார்.
யஸ்மாத் த்வமன்யம் வ்ருதவான்மாமவஞாய பார்திவ |
சேதனேன வினாபூதே தேஹஸ்தவ பவிஷ்யதி |\
பார்திவ – அரசனே
மாம் – என்னை
அவஞாய – அவமதித்து
த்வம் – நீ
அன்யம் – வேறொருவரை
வ்ருதவான் – வரித்தாய்
யஸ்மாத் – ஆகையால்
தவ – உன்னுடைய
தேஹ: – உடல்
சேதனேன – உயிரை
வினாபூத: – விட்டுப் பிரிந்ததாய்
பவிஷ்யதி – ஆகக் கடவது
– உத்தர காண்டம், 55-வது ஸர்க்கம், ஸ்லோக எண் 17
தூங்கிக் கொண்டிருந்த நிமி எழுந்தவுடன் வசிஷ்டர் இட்ட சாபத்தை அறிந்தார். அவருக்குப் பெரும் கோபம் ஏற்பட்டது.
அதனால் அவர் பதிலுக்குச் சாபமிட்டார்.
அதை அடுத்துக் காண்போம்.
**