ராமாயணத்தில் சாபங்கள் (56) கௌதமர் ஒரு கழுகுக்குக் கொடுத்த சாபம் (Post No.13,488)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.488

Date uploaded in London – 29 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (56)

ராமாயணத்தில் சாபங்கள் (56) கௌதமர் ஒரு கழுகுக்குக் கொடுத்த சாபம்

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில்  அறுபதாவது ஸர்க்கத்தில் வரும் கதை இது.

இது சில பிரதிகளில் மட்டும் காணப்படுகிறது. கோரக்பூர் உள்ளிட்ட பிரதிகளில் இந்தக் கதை இல்லை.

முன்னொரு காலத்தில் அழகான ஆரண்யம் ஒன்றில் ஒரு கழுகிற்கும் கோட்டானுக்கும் சண்டை ஒன்று வந்தது.

சண்டைக்குக் காரணம் கோட்டானின் கூட்டில் கழுகு புகுந்து வசிக்க ஆரம்பித்தது. அந்த கூடு தன்னுடையதே என்றது. சண்டை அதிகமாகிப் போக, இரண்டும் ராமரிடம் சென்று நீதி கேட்கலாம் என்று முடிவு செய்தன.

இரண்டும் ராமரிடம் சென்றன. கழுகு, “ ஓ! அரசரே! இந்தக் கூட்டில் நான் நெடுங்காலம் வசித்து வருகிறேன். இது என்னுடைய கூடு தான்” என்றது.

கோட்டானோ, “இல்லை, அரசே! இந்தக் கூட்டில் நான் தான் நெடுங்காலமாக வசித்து வருகிறென். இது என்னுடைய கூடு தான் என்றது.

இதைக் கேட்ட ராமர், திருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், ராஷ்டிரவர்த்தனன், அசோகன், தருமபாலன் என்னும் தனது மந்திரிமார்களை அழைத்தார்.

மந்திரிகள் எவ்வளவு காலமாக வசித்து வருகிறாய் என்று கழுகை விசாரித்த போது, கழுகு “பூமியில் மானிடர் எப்போது உற்பத்தி ஆனார்களோ அப்போதிலிருந்து இதில் நான் வசிக்கிறேன்” என்றது.

கோட்டானை விசாரித்த போது அது, “பூமியில் பாதபங்கள் செழித்து வளரத் தொடங்கிய நாளிலிருந்து நான் இதில் வசித்து வருகிறேன்” என்றது.

இப்படி நடந்த விவாதம் தொடர்ந்தது. பின்னர் ஶ்ரீ ராமர், முன்னொரு காலத்தில் மது கைடபர் என்பவர்களை மஹாவிஷ்ணு தன் சக்கராயுதத்தால் வதம் செய்தார். அப்போது அவர்களின் மேதஸ் என்னும் நிணநீர் பூமியெங்கும் பாய்ந்தது. அதனால் தான் இந்த பூமிக்கு மேதினி என்ற பெயர் உண்டானது.  ஆகவே இது கோட்டானின் கிரகம் என்றே நிச்சயிக்கிறேன்” என்றார்.

அப்போது ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.

“ஓ! ரகுநந்தன! ஏற்கனவே தபோபலத்தினால் தஹிக்கப்பட்டிருக்கும் இந்தப் பறவையை (கழுகை) மீண்டும் தண்டிக்க வேண்டாம். பூர்வ காலத்தில் பிரம்மதத்தன் என்ற பெரும் செல்வனாகவும் சூரனாகவும் இந்தக் கழுகு இருந்தது. ஒரு சமயம் கௌதமர் என்ற முனிவர் அவர் இல்லத்திற்கு வந்த போது அவருக்கு அவன் மாமிசங்களை ஏராளமாகப் படைத்தான். இதைக் கண்டு வெகுண்ட அவர், நீ’ பிணம் தின்னும் கழுகாக ஆகக் கடவது’ என்று சாபம் இட்டார். பின்னர் அவரே மனமிரங்கி “நீ மஹாவிஷ்ணு ஶ்ரீ ராமராக அவதரிக்கும் போது அவர் கரம் உன் மீது பட்ட மாத்திரத்தில் நீ புனிதனாக ஆவாய்” என்று கூறி அருளினார்.” இப்படி அசரீரி ஒலியைக் கேட்ட ராமர் அந்தக் கழுகைத் தன் கையில் எடுத்து தடவ அந்தக் கழுகு ஒரு திவ்ய புருஷனாக ஆனது. அந்த திவ்ய புருஷன் ராமரை வணங்கி, “ என் சாபம் நீங்கப் பெற்றேன்” என்று கூறி விடை பெற்றான்.

அறுபதாவது ஸர்க்கத்தில் 59 முதல் 63 முடிய உள்ள ஸ்லோகங்களில் இந்த சாபம் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்லோகங்கள் வருமாறு:

மாம்ஸமஸ்யாபவத்தத்ர ஆஹாரே தூ மஹாத்மன: |

அத க்ருத்தேன முனினா சாபோதத்தோ ஸ்ய தாருண: |\

க்ருதஸ்த்வம் பவ வை ராஜன்மாமைனம் ஹயத் சோப்ரவீத் |

ப்ரஸாதம் குரும் தர்மக்ஞ அஞானான்மே மஹாவத் |\

சாபஸ்யாந்தம் மஹாபாக க்ரியதாம் வை மமானக |

தத்ஞானக்ருதம் மத்வா ராஜானம் முனிரப்ரவீத் ||

உத்பஸ்யதி குலே ராஞாம் ராமோ நாம மஹாயஷ: |

இக்ஷ்வாகூணாம் மஹாபாகோ ராஜா ராஜீவலோசன: |\

தேன ஸ்ப்ருஷ்டோ விபாபஸ்த்வம் பவிதா நரபுங்கவ |\

–    உத்தரகாண்டம் 60-ம் ஸர்க்கம் 59 முதல் 63 முடிய உள்ள ஸ்லோகங்கள் ( சில பிரதிகளில் மட்டும் உள்ளவை)

இப்படி ஒரு கதை கழுகு பெற்ற சாபத்தையும் அதன் விமோசனத்தையும் கூறுகிறது.

**

Leave a comment

Leave a comment