Post No. 13,492
Date uploaded in London – 30 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
வி.ச.வில் விலங்குகள் பறவைகள் பெயர்கள் !
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (வி.ச.) விலங்குகள், பறவைகள், மரங்கள் பெயர்களை யாரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள். ஆயினும் ஆல மரம், அரச மரம் , அத்திமரம் ஆகியன இருப்பதைக் கண்டோம் . இனி கருடன், அன்னம், பருந்து, சிங்கம், பசு, கொம்புள்ள மீன் மான், மயில், , சிங்கம், காட்டுப்பன்றி, நிலவி லுள்ள முயல் ஆகியன பற்றிக் காண்போம் .தசாவதாரத்தின் பெயர்கள் வி.ச.வில் உள்ளன.
xxxx
வ்ருஷாகபி – நாம எண் 101-
சங்கரர் மூன்று பொருள்களைத் தருகிறார்.அதில் ஒன்று கபி = வராஹம்/பன்றி என்பதாகும் இதை வராஹ அவதாரத்துடன் தொடர்புபடுத்தலாம்
xxxx
ஹம்ஸஹ – நாம எண் 191-
அன்னம் என்பது பொருள்; விஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஹம்ஸாவதாரமும் ஒன்று.
***
சுபர்ண- நாம எண் 192–
இரண்டு இறக்கைகள் உடையவை என்று பொருள் கூறுவர்
என் கருத்து
ரிக் வேதத்தில் இதை கருடன், கழுகு , பருந்து ஆகிய பறவைகளைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்
***
சிம்ஹ – நாம எண் 200 மற்றும் 488-
சிங்கம் என்பது பொருள் ; பாவிகளை அழிப்பவர்
xxxx
ஸஹஸ்ரபாத் — நாம எண் 227-
ஆயிரம் அல்லது கணக்கற்ற கால்களை உடையோன் (புருஷசூக்த மந்திரம், ரிக்வேதம்).
என் கருத்து
ரயில் வண்டிப் பூச்சி ஆழ்ந்து பெரிய பூரான் வகைகளையும் ஆங்கிலத்தில் , சம்ஸ்க்ருத்தில் ஆயிரம்காலன் (It also means MILLEPEDE in Sanskrit) என்பார்கள்.
***
சிபிவிஷ்டக –நாம எண் 273-
சிபி என்றால் பசு ; ஆகையால் யக்ஞத்தில் பசுவில் உறைவோன் என்பார் சங்கரர்
xxxx
சசபிந்து ஹு –நாம எண் 285–
சந்திரனில் முயலாக தோன்றுபவர்
இயற்கையில் காணும் எல்லா வற்றையும் இறைவனாகப் பார்க்கும் இந்த ஒரு குணத்தை உலகில் எந்த மதத்திலும் காணமுடியாது;
ஒருவேளை அவர்கள் எங்காவது ஒரே ஒரு விலங்கை அல்லது பறவையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் குமரி முதல் இமயம் வரை மரம் செடி பூக்களையும், விலங்குகள் பறவைகளையும் இறைவனின் நாமா க்களில் பயன்படுத்துவோர் இந்துக்களே; அதாவது அவைகளை இறைவனின் பெயர் களாக தினமும் பூஜிக்கிறார்கள்.
யானை முதல் எறும்பு வரை என்பது இந்து சமய துதிகளில் வரும் மரபுச் சொல்லாகும்.
தமிழ் நாட்டிலேயே நாம் திரு எறும்பூரையும், கரி (யானை) வலம் வந்த நல்லூ ரையும் கண்டுவிடலாம்.
xxx
சிகண்டி- நாம எண் 311-
மயில் தோகைக்கு இப்படி ஒரு பெயர் உண்டு.
கிருஷ்ணர் இப்படி மயில் தோகையை அணிந்தார் என்று வியாக்கியானத்தில் கூறுகின்றனர்.
முருகன், கிருஷ்ணர், சரஸ்வதி முதலிய கடவுளருடன் மயில் தொடர்புடையது. இதனால் இதை இந்தியாவின் தேசீயப் பறவையாக அறிவித்துள்ளார்கள். பாபிலோனிய மன்னர்களை அசத்த இந்திய வியாபாரிகள் மயில்களைக் கொண்டு சென்றனர். அவர்கள் இடி உறுமும் ஒலியை டமாரத்தில் எழுப்ப அவைகள் ஆடின. பாபிலோனிய மன்னர்கள் அதிசயித்துப் போயினர்.
***
கருடத்வஜஹ –நாம எண் 354-
விஷ்ணுவின் வாஹனம் கருடன்; அமெரிக்கா முதலிய நாடுகளின் சின்னம் கருடன்; பல நாட்டுக் கொடிகளில், இப்போது பறக்கிறது; கிரேக்க தூதன் தன்னைப் பரம பாகவதன் என்று கல்வெட்டில் பொறித்து கருட ஸ்தம்பத்தையும் கட்டிவைத்தது இப்போது மத்திய பிரதேசத்தல் விதிஷா நகர் அருகில் உள்ளது. இன்றும் கருடனைப் பார்த்தால் மந்திரம் சொல்லி வணங்குகின்றனர் இந்துக்கள். கரிகால் சோழன் கருட வடிவில் யாக குண்டம் வைத்து யாகம் செய்ததும் சங்க இலக்கியத்தில் உள்ளது
XXXX
ரோஹிதஹ- நாம எண் 364-
கொம்புள்ள சிவப்பு மீனாக அவதரித்தவர் . மச்சாவதாரக் கதை – பிரளயம் கதை — எல்லா சமய நூல்களிலும் உளது.
XXX
அஜஹ — நாம எண் 521-
அகார பொருளாகிய, தம்மிடத்தில் பிறந்த, மன்மத வடிவில் இருப்பவர் (அகாரத்தின் பொருளாகிய ஸ்ரீமன் நாராயண ரூபியாயிருப்பவர் ).
என் கருத்து
அஜஹ சென்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ஆடு என்ற பொருளும் உண்டு .எழுத்துக்களில் தான் அ -காரம் என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லுவதும் நினைவுகூறத்தக்கது )
XXXX
மஹா ச்ருங்கஹ – நாம எண் 536–
(பிரளய சமுத்திரத்தில் ஓடம் போல பூமியைத் தன் கொம்பில் கட்டி விளையாடிய) சிறந்த கொம்புள்ளவர் .
கொம்புள்ள சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரிக பசுபதி முத்திரை பற்றி எழுதியதையும் நினைவிற்கொள்க)
XXXX
நந்திஹி -நாம எண் 618–
பரமானந்த வடிவாயிருப்பவர்
என் கருத்து
நந்தி என்பது சிவன் முன்னிலையில் இருக்கும் ரிஷபத்தை — காளை மாட்டினைக் — குறிக்கும்.
திருமூலர் திருமந்திரத்தில் சிவ பெருமானைக் குறிக்கவும் நந்தி என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.
XXXX
வ்யக்ரஹ — நாம எண் 762-
முடிவில்லாதவர் ; அக்ரம் முடிவு அல்லது அழிவு இல்லாதவர் அல்லது பக்தர்களுக்கு அபீஷ்டங்களைக் கொடுப்பதில் முனைத்திருப்பவர் .
இதை வ்யாக்ர என்று கொண்டால் புலி என்று பொருள்படும் என்பது என் கருத்து.
XXXX
நைக ச்ருங்கஹ — நாம எண் 763-
அநேகம் கொம்புகளை உடையவர்.தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்பவை கொம்புகள்; அல்லது நான்கு வேதங்களைக் கொம்பாக உடையவர். சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீகத்தின் பசுபதி முத்திரையின் கொம்புகள் என்பது என் கருத்து . சத்வாரி ச்ருங்காஹா என்ற மந்திரம் தைத்ரீய ஆரண்யகத்திலும் (1-10-17) ரிக் வேதத்திலும் வருகிறது ; ஹரப்பா நாகரீகம் வேத கால நாகரீகம் என்பதற்கு இது முக்கியச் சான்று; வேறு எங்கும் கொம்பு பற்றி மந்திரமோ துதியோ கிடையாது; தமிழில் மட்டும் நீ என்ன பெரிய கொம்பனோ என்ற மரபுச் சொற்றொடர் உளது
XXXX
ச்ருங்கி — நாம எண் 797–
கொம்புள்ள மீனாக அவதரித்தவர்
(நான் மேலே சொன்ன ஹரப்பன் நாகரீக கொம்பன் விஷயம் இதற்கும் பொருந்தும் )
xxxx
கபிஹி- நாம எண் 899–
சூரியனாயிருப்பவர் ..
சங்கரர் சொல்கிறார் – கம் ஜலம் ரஸ்மிபிஹி பிபன் ஸூர்யோ கபீர் வராஹா வா.
மஹாபாரதம் சாந்தி பர்வம் சொல்கிறது 352-24,
கபிர் வராஹக ஸ்ரேஷ்டஸ்ச.
பொருள்
க- என்றால் தண்ணீர்; தன்னுடைய கிரணங்களால் நீரைக்குடிக்கும் சூரியன் கபி ; மஹாபாரதம் இதை வராஹம் – காட்டுப் பன்றி — வராஹ அவதாரம் — என்கிறது
(தற்காலத்தில் கபி என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்கு குரங்கு என்ற பொருளும் உள்ளது.)
என் கருத்து
சங்கத் தமிழ் இலக்கியத்துக்கு நல்ல உரை எழுதியவர் மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பார்ப்பான் நச்சினார்க்கினியன் ஆவார். அவரைப் அறிஞர்கள் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று பாராட்டுவார்கள் ; அவர் ‘கொண்டு பொருள் கூட்டி’ உரை எழுதுவதில் வல்லவர். ஒரு செய்யுளில் உள்ள ஒரு சொல்லை ஏதாவது வரியிலிருந்து எடுத்து இன்னுமொரு வரையிலுள்ள சொல்லுடன் இணைத்துப் பொருள் சொல்லுவார். அது மறுக்க முடியாத உரையாக இருக்கும். சங்கரரும் அப்படிப் பொருள் சொல்லுவதை ‘முதல் ஸ்லோகம் முதல் இறுதி ஸ்லோகம் வரை’ காணமுடிகிறது. நச்சி ஒரு பிராமணர் என்பதால் அவர், சங்கரரின் உரையைப் படித்து இந்த உத்தியைக் கையாண்டார் போலும்!
பீஷ்மர் சொன்ன சஹஸ்ரநாமத்தில் இருபதுக்கும் மேலான விலங்கியல் பெயர்கள் இருக்கின்றன இன்றும் அவைகளை தென் இந்தியக் கோவில் திருவிழாக்களில் வாஹனங்களாக காண்கிறோம். இன்னும் சிலவற்றைக் கொடிகளில் காண்கிறோம். இந்து கலாசாரம் காலத்தால் அழிக்கமுடியாதது ; அவர்கள் இயற்கை அன்பர்கள், புறச் சூழல் ஆர்வலர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று .
—சுபம்—
Tags- விஷ்ணு சஹஸ்ர நாமம் (வி.ச.), விலங்குகள், பறவைகள், அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –25