WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.494
Date uploaded in London – —31 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (58)
ராமாயணத்தில் சாபங்கள் (58) ஸௌதாஸர் திருப்பி வசிஷ்ட முனிவருக்கு சாபம் கொடுக்க முயன்ற போது மதயந்தி அதைத் தடுத்தது!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் அறுபத்தைந்தாவது ஸர்க்கமான ஸௌதாஸ சரிதம் என்ற ஸர்க்கத்தில் வசிஷ்ட முனிவர் ஸௌதாஸருக்கு சாபம் கொடுத்ததைப் பார்த்தோம்.
ஸௌதாஸர் வசிஷ்ட முனிவரிடம் நரமாமிசம் தரும் படி அவர் தானே கேட்டார் என்று கூற வசிஷ்டர் நடந்ததை அறிந்து கொண்டார். ராக்ஷஸனே தன் போல் வேடம் பூண்டு வந்தான் என்பதை அறிந்து கொண்ட அவர் சாபம் கொடுத்ததைப் பற்றி வருந்தினார்.
உடனே ஸௌதாஸரிடம் அந்த சாபம் தீரும் காலத்தை உடனே கூறி அருளினார் இப்படி:
மயா ரோஷபரிதேன யதிதம் வ்யாஹதம் வச: |
நைதச்சக்யம் வ்ருதா கர்தும் ப்ரதாஸ்யாமி ச தே வரம் |\
ரோஷபரிதேன – கோபாவேசத்திலிருந்த
மயா – என்னால்
இதாம் வச: – இந்த வாக்கானது
வ்யாஹதம் – சொல்லப்பட்டது
யத் – எதுவோ
ஏதத் – இது
வ்ருதா – வீணாக
கர்தும் – செய்ய
ந சக்யம் ச – முடியாமல் இருந்தாலும்
தே – உனக்கு
வரம் – ஒரு வரத்தை
ப்ரதாஸ்யாமி – அளிக்கின்றேன்.
காலோ த்வாதஸ்ச வர்ஷாணி சாபஸ்யாந்தோ பவிஷ்யதி |
மத்ப்ரசாதாஸ்ச ராஜேந்த்ர வ்யதீதம் ந ஸ்மரிஷ்யஸி ||
த்வாதஸ்ச வர்ஷாணி – பன்னீராண்டு
கால: – காலம் முடியவும்
சாபஸ்ய – சாபத்திற்கு
அந்த: – முடிவு
பவிஷ்யதி – ஏற்படும்
ச – அன்றியும்
ராஜேந்த்ர – அரசர்க்கரசே
மத்ப்ரசாதாத் – எனது அனுக்ரஹத்தினால்
வ்யதீதம் – நடந்து முடிந்ததை நீ
ந ஸ்மரிஷ்யஸி – நினைக்க மாட்டாய்.
உத்தரகாண்டம் 65-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 31 & 32
இவ்வாறு ஸௌதாஸருக்கு வஷிஷ்ட முனிவர் அருளி ஆசி
கூறினார்.
சில பிரதிகளில் இந்த இடத்தில் கூடவே சில ஸ்லோகங்கள் உள்ளன.
வசிஷ்ட மஹரிஷி தகுந்த காரணமின்றி தன்னை சபித்து விட்டதாகக் கருதி கோபம் கொண்ட ஸௌதாஸர் கையில் ஜலத்தை எடுத்து வசிஷ்ட முனிவருக்குச் பிரதி சாபம் கொடுக்க எண்ணிய போது அவரது மனைவியான மதயந்தி அவரைத் தடுத்தாள்.
ராஜன் ப்ரபுர்யதோஸ்மாகம் வசிஷ்டோ பகவான்ருஷி: |
ப்ரதிசபதும் ந ஷக்தஸ்த்வம் தேவதுல்யம் புரோதத்பம் ||
மதயந்தி தன் கணவனைப் பார்த்துக் கூறினாள்;
“ஹே ராஜன்! பகவான் வசிஷ்டமுனிவர் நம் அனைவருக்கும் ஸ்வாமி ஆவார். தேவர்களுக்குச் சமமான புரோகிதரான அவருக்கு பிரதி சாபம் கொடுக்கக் கூடாது.”
“
இதைக் கேட்ட ஸௌதாஸர் கோபத்துடன் கையில் எடுத்த ஜலத்தை என்ன செய்வது என்று நினைத்த போது ராணி மதயந்தி அதை அவரது காலிலேயே விடுமாறு கூற அவரும் ஜலத்தைத் தன் கால்களிலேயே விட்டார். அந்த ஜலம் பட்டவுடன் அவரது பாதங்களில் புள்ளிகள் ஏற்பட்டன. அன்று முதல் அவர் கல்மாஷபாதர் என்ற பெயரால் புகழ் அடைந்தார்.
இந்த வரலாறு சில பிரதிகளில் இல்லை. என்றாலும் கூட இது கல்மாஷபாதரின் பெயருக்கான காரணத்தைக் கூறுவதால் முக்கியமானதாக ஆகி விட்டது.
**