விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –26 (Post No.13,506)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,506

Date uploaded in London – 3 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

காடு -மலை – கடல் அதிசயங்கள்

வ்ருக்ஷஹ – நாம் எண்  555-

மரம் போல் அசையாது இருப்பவர்.

வ்ருக்ஷ  இவ ஸ்தப்தோ  திவி திஷ்டத் யே கஹ — தைத்ரீய ஆரண்யகம்

நிழல்  தரும் மரம் போல அடியார்களை ஆதரிப்பவர் .மேலும் அவர்கள் செய்வதை அனைத்தையும் பொறுத்துக்க கொள்பவர் .

அசைக்க முடியாத மரம் போன்றவர் – ஸ்வேதஸ்வராத உபநிஷத்

என் கருத்து

மகாபாரதத்தின் ஒரு பகுதி விஷ்ணு சஹஸ்ரநாமம் (வி.ச.)

அப்போதே  மரத்தையும் கடவுளாகக் கண்டவர் இந்துக்கள். இதனால்தான் எல்லாக் கோவில்களிலும் தல மரங்கள் இருக்கின்றரன . மேலும் வட சாவித்ரி விரதம்துளசி கல்யாணம் போன்றவை பின்பற்றப்படுகின்றன.

தமிழிலும் மரத்தினைப் போற்றும் பாடல்கள் ஏராளம் இருக்கின்றன.

தென்னை மரம் பாடல்

தென்னை மரத்தின் தியாகம்!

பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.

தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்

வாக்குண்டாம்

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

நீதிநெறிவெண்பா

பனைமரத்துக்கு  தண்ணீர் விடாமலே  பலன் தரும்– உத்தமர்.

தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்.- நடுத்தர /மத்திமர்,

பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்– கடைத்தர மனிதர்கள்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.- குறள் 216:

A tree that fruits in th’ hamlet’s central mart,

Is wealth that falls to men of liberal heart.- KURAL 216

XXXX

மஹீதரஹ – நாம எண் 369-

பூமியைத் தாங்குபவர் .

பூபாரத்தைப் பூமியை நிலை நிறுத்துபவர் .

கெட்டவர்களை அழித்து நல்லோரை மட்டும் வாழ வைப்பது விஷ்ணு வின் வேலை என்பதை கீதையில் காண்கிறோம் . இதன் மூலம் பூ பாரம் குறையும்

பரித்ராணாய ஸாதூ4னாம் வினாஶாய ச து3ஷ்க்ருதாம்

த4ர்மஸம்ஸ்தாபனார்தாய ஸம்ப4வாமி யுகே யுகே  ||4-8. கீதை |

ஸன்மார்க்கத்தைப் பாதுகாக்கவும்பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களை அழிக்கவும்தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும்நான் இந்த பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்.

மேலும் புராணங்களில் பழமையான விஷ்ணு புராணம் கூறுகிறது:

மலைகளைத் தோற்றுவித்து பூமிக்கு ஆதாரம் அளிப்பவர்

வனானி விஷ்ணுர் கிரயோ திஸாஸ் ச – காடுகள்மலைகள்திசைகள் அனைத்தும் விஷ்ணுவே விஷ்ணுபுராணம் 2-12-38

என் கருத்து

மரம்காடு மலை  முதலிய இயற்கைப் பொருட்கள் எல்லாம் கடவுளே என்ற பார்வை உலகில் வேறு எங்கும் இல்லை. இப்போது உலகம் சுற்றுப்புறத்தையும்காடுகளையும்தண்ணீரையும் பாதுகாருங்கள் என்று சொல்லுவதற்கு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழி க்கின்றன.

xxxx

ஜகதஸ் சேதுஹு – நாம எண் 288—

உலகைக் கரையேற்றுபவர் அல்லது கரைபோல காப்பவர்.

சமுத்தாரண ஹேதுத்வா  தசம்பேத காரணாத்  வா —

உலகத்தில் நல்லது கெட்டது என்பனவற்றைப் பிரிப்பவர் புண்ணிய பாவ பலன்களை மாறாதபடி கொடுப்பவர். 

இவ்வுலகங்கள் பிரிந்துபோகாதபடி சேர்த்துப் பிடிக்கும் கரை/ சக்தியாக விளங்குபவர்- ப்ருஹதாரண்யக உபநிஷத் 4-4-22

xxxx

வி.ச.வில் கடல்

அபாம் நிதி — நாம எண்  323–

கடலாக இருப்பவர் .

கீதையில் கிருஷ்ணர் சொல்வது 10-24

நீர் நிலைகளில் நான் கடல்.- சரசானாம் அஸ்மி சாகரஹ.

இன்றும் கடலில் குளிப்பது புனித நீராட லாகக் கருதப்படுகிறது.

XXXX

அம்போநிதி –நாம எண் 517—

மேற்சொன்ன கீதை 10-24 வரிகள் இதற்கும் பொருந்தும்

இன்னும் ஒரு பொருள்-

நான்கு அம்பஸூக்கள் என்று வேதங்களில் சொல்லப்படும் தேவர்மனிதர்புத்திரர்அசுரர் ஆகியவர்களுக்குப் புகலிடமாக இருப்பவர்.

அம்பாம்ஸி தேவஹ தயோஸ்மி ன்னிதீயன்தஹ இத் யம்போநிதிஹி .தானி ஹ வா  ஏ-தானி -சத்வார்- யம்பாம்ஸி  தேவா மனுஷ்யாஹா பிதரோ ஸூ ராஹா இதி ஸ்ருதே ஹே .

சாகரோ வா ஸரஸா மஸ்மி ஸா கரஹ இதி பகவத் வசனாத் — என்று சங்கர வியாக்கியானம் சொல்கிறது

எல்லா உலகங்களையும் தாங்கும் பீடம் போல கூர்மாவதாரத்தில்  கூர்ம ரூபியாக / ஆமை வடிவமாக தன்னைத் தானே வைத்துக்கொண்டவர் என்பது மற்றும் ஒரு உரை

XXXX

ரத்னசாகரஹ – நாம எண் 473-

ரத்தினங்களை உள்ளே வைத்திருக்கும் கடலாயிருப்பவர். அல்லது அடி யார்களை தன் வயிற்றில் வைத்துக் காப்பவர். சிறந்த தனங்களை தன்னிடம் கடல் போல வைத்திருப்பவர். அர்த்தம்காமம் என்னும் இரண்டு விஷயங்களைத் தம்மிடம் எப்போதும் வைத்திருப்பவர்.

 XXXX 

ச்ருதி சாகரஹ .–நாம எண் 264–

சுருதிகளாகிய நதிகள் நாடியடையும் கடல் போன்றவர் .

எல்லா வேதங்களாலும் அறிய வேண்டியவன் நானே – பகவத் கீதை 15-15

சுபம்

–Subham—

Tags– விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part 26, காடு ,மலை ,கடல் அதிசயங்கள்

Leave a comment

Leave a comment