WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.596
Date uploaded in London – —28 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xx
நீங்கள் முன்னேற ஏ.கே. 47 மிரட்டல் தான் வேண்டுமா?
ச. நாகராஜன்
பி.பி.சி. அண்மையில் ஒலிபரப்பிய ஒரு உண்மைக் கதை சுவையான ஒன்று. முன்னேறத் துடிப்பவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதும் கூட!
டாம் என்பவர் ஒரு விவசாய ஆராய்ச்சியாளர்; ஆர்க்கிட் பூக்களைச் சேர்ப்பது அவரது தொழில். அவரை கொலம்பியா கொரில்லாக்கள் திடீரெனக் கடத்திச் சென்று விட்டனர். தென் அமெரிக்காவில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவில் ஒன்பது மாதம் அவர் சிறை வைக்கப்பட்டார். அவர் தனது நண்பருடன் அபூர்வ தாவர வகைகளைச் சேகரிக்கச் சென்ற போது தான் இருவரும் கடத்தப்பட்டனர். பயங்கரமான ஒன்பது மாத கடத்தல் வாசத்தில் அங்கு இருவரையும் தினசரி தலையை வெட்டப் போவதாகத் தீவிரவாதிகள் மிரட்டிக் கொண்டே இருந்தனர்.
எவ்வளவு கொடுமையான பீதியை அவர்கள் அனுபவித்திருப்பார்கள்! நம் வீரப்பன் – ‘ராஜ்குமார்’ நாட்களை நினைத்துப் பாருங்கள்.
இந்த பயங்கர அனுபவம் தந்த மனத்துன்பத்திலிருந்து விடுபட,
டாம் தனது டயரியில் தான் கனவு கண்டு அமைக்க விரும்பும் அபூர்வ வகை தாவரங்கள் அடங்கிய ஒரு தோட்டத்தின் வரைபடத்தை அமைக்க முயன்றார். இந்தச் சம்பவத்தை அவர் பி.பி.சி. நிகழ்ச்சியின் போது விவரித்தார்…
“என்னைக் கடத்தியவர்கள் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி என்னை அடித்து உதைத்தனர். அன்றைய தினம் எனது சகோதரியின் பிறந்த தினம்.”
“உனக்கு இன்னும் ஐந்து மணி நேரம் தான் இருக்கிறது” என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொல்லப்படுவதற்கு முன் இருந்த ஐந்து மணி நேரத்தை ‘நர்க வேதனை’யோடு எப்படிக் கழிப்பது? எனவே, அதை மறப்பதற்காகத் தனது டயரியை எடுத்தார்; தனது கனவுத் தோட்டத்தை முழு விவரங்களுட\ன் வரைய ஆரம்பித்தார்.
ஏ.கே. 47 அவரது தலையை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருக்க, அவரது மனம், கனவு ப்ராஜெக்டில் ‘ஃபோகஸ்’ ஆனது! அவர் தன் கனவில் ஆழ்ந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. அந்த வரைபடம் ஆரம்பமாகி முன்னேறிக் கொண்டே இருந்தது. ஐந்து மணி நேரம் கழிந்தது. வழக்கம்போல உணவு வந்தது; ஆனால் குண்டு எதுவும் பாயவில்லை!
ஒன்பது மாதங்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக அந்த இருவரும் விடுவிக்கப்பட்டனர். தனது சொந்த ஊரான ‘கெண்ட்’க்கு வந்த டாம் பராமரிக்கப்படாமல் கிடந்த தனது பூர்வீக சொத்தான இரண்டு ஏக்கர் நிலத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இன்று ஒரு மாயாஜாலத் தோட்டம் நிஜமாகவே லிவிங்ஸ்டன் கேஸில் கிரவுண்டில் உருவாகி இருக்கிறது.
‘தாவரங்களின் உலகத் தோட்டம்’ என்ற அந்த பிரம்மாண்டமான தோட்டம், பார்க்க வருவோரை மகிழ்விக்கிறது!
எவ்வளவோ விஷயங்களைக் கனவு கண்டு, அதை நிறைவேற்ற செயல்படாமல் இருக்கும் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டில் தலைக்கு நேரே ஒரு ஏ.கே.47 மிரட்டல் தேவையாக இருக்கிறதா – திட்டத்தை ‘ஃபோகஸ்’ செய்து தயாரிக்க?
டாமின் அனுபவம் ஒன்றே போதாதா?
நமது வீட்டின் முன்னறையில் அமைதியாக அமர்ந்து ஒரு ஐந்து மணி நேரத்தில் நமது கனவுத் திட்டத்தின் வரைபடத்தை முழு விவரங்களுடன் உருவாக்க முடியாதா, என்ன? குறிக்கோளை முடிவு செய்து, வெவ்வேறு கலர்களில் நமது திட்டத்தை அதற்குரிய முக்கியத்துவம், கால எல்லை இவற்றை நிர்ணயித்து எதிர்கால நனவுப் பலகையாக ஒன்றை உருவாக்க முடியாதா என்ன?
ஐந்து மணி நேரம் தீவிரவாதிகள் உங்களைக் கடத்தி ஏ.கே. 47 -யுடன் மிரட்ட வேண்டுமா, என்ன? நீங்களே இனிய சுகானுபவமாக உங்களை ஒரு ஐந்து மணி நேரம் கடத்திக் கொண்டு கனவிலிருந்து நனவுக்கு இட்டுச் செல்லும் வரைபடத்தை உருவாக்கி எதிர்காலத்தை எதிர் கொள்ளலாமல்லவா?
**
சினேகிதி மாத இதழில் 2007, பிப்ரவரி மாதம் வெளியான கட்டுரை.