உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள்! (Post No.13,601)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.601

Date uploaded in London – 29 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள்! 

ச. நாகராஜன் 

‘உங்கள் வீட்டில் ஐன்ஸ்டீனா’ என்று கண்களை அகல விரிக்கும் இளம் கர்ப்பிணியாகவோ அல்லது கல்யாணமாக இருக்கும் அழகிய யுவதியாகவோ நீங்கள் இருந்தாலும் சரி, தங்க விக்ரஹம் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயாக இருந்தாலும் சரி, நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்!

நவீன அறிவியல் தனது ஆராய்ச்சிகள் மூலம் தரும் ஒரு அபூர்வமான தகவல் :-

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே ஒரு பிறவி மேதை தான்! ஆனால் அதை நாம் வளர்க்கும் விதம் தான் சோகமயமானது! “எல்லாக் குழந்தைகளுமே பிறவி மேதைகள் தான்! அவர்களுடைய முதல் ஆறு வருட வாழ்க்கைக்குள்ளாகவே அந்த மேதைத் தன்மையை நாம் நீக்குகிறோம்” என்கிறார் ஒரு உளவியல் மேதை!

கல்யாணமானவுடனேயே ஐன்ஸ்டீன் ஜீனியஸை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டியது தான் என்று நவீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆரோக்கியமான வாலிபனும் யுவதியும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மணம் புரிந்ததோடு நின்று விடாது ஆரோக்கியமான விஷயங்களை நினைப்பவர்களாக ஆரம்பத்திலிருந்தே இருக்க வேண்டும் என்பது அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்பு!

அழுமைமயமான சீரியல்களைப் பார்க்கும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் அழுகைமயமாகவே தான் இருக்கும்.

கர்ப்ப காலத்தில் வயிற்றில் உள்ள குழந்தையுடன் நல்ல விஷயங்களை அடிக்கடி பேசுங்கள். உன்னதமான இசையைக் கேட்க விடுங்கள். நல்ல தோத்திரங்கள், ஶ்ரீ ஸூக்தம், மேதா ஸூக்தம் போன்ற மேதைத் தன்மையைத் தூண்டும் உணர்வு மற்றும் அறிவு நலங்களைத் தருபவனவற்றைக் கேட்கப் பழக்கப்படுத்துங்கள்!

ஒரு அபூர்வ குழந்தையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அந்தக் குழந்தை மூன்று வயது வரை பேசவில்லை. பேச முயன்றபோது வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்பட்டது. அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படும் அந்தக் குழந்தையின் கோபம் சற்று கடுமையானதாகக் கூட இருந்தது. பள்ளியிலோ பரிதாபமாக விழித்தது. பள்ளி ஆசிரியர்களும், ‘இது உருப்படாது’ என்று ‘தண்ணீர் தெளித்து’ விட்டு விட்டார்கள்.

ஆனால் சீட்டுக்கட்டுகளை வைத்து கட்டிடங்களை அமைக்கச் சொன்ன போது அந்தக் குழந்தைக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ஜிக்- ஸா புதிர்கள், புதிய கட்டிடங்கள் அமைப்பது இவற்றில் அந்தக் குழந்தைக்கு ஆர்வம் அதிகமானது. பார்ப்பது,  பார்த்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பது, அதை அப்படியே மனதில் உருவகப்படுத்துவது என்று இருந்த குழந்தை சீட்டுக்கட்டில் பதினான்கு மாடிக் கட்டிடம் கட்டி மற்றவர்களை அதிசயிக்க வைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, ஐன்ஸ்டீன் தான்!

உலகின் சிந்தனைப் போக்கையே தனது ஒப்புமை -ரிலேடிவிட் தத்துவத்தால் மாற்றிய பிரபல மேதையின் இளமைப் பருவம் பற்றித்தான் முந்திய பாராவில் நீங்கள் படித்தது.

மேலை நாடுகளில் ஒன்று, இரண்டு, ஏ, பி,சி, இவற்றையெல்லாம் கார்டுகளில் அடித்து அவற்றை வகுப்புகளில் ஃப்ளாஷ் செய்கிறார்கள். இவற்றிக்கு ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ என்று பெயர்.

இப்படிப்பட்ட ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ எதுவும் ஐன்ஸ்டீன்கள் உருவாகத் தேவை இல்லை. குழந்தை தன்னைச் சுற்றிப் பார்த்து ஒவ்வொன்றையும் ஆவலுடன் அறியத் துடிக்கும் அந்தத் தருணம் தான் மேதை அரும்பும் தருணம்! அதை அடக்குவதன் மூலமாகவோ அல்லது அலட்சியப்படுத்துவதன் மூலமாகவோ முளையிலேயே மேதைத்தன்மையைக் கிள்ளி எறிந்து விடலாம். இதைத்தான் பெரும்பாலான தாய்மார்கள் செய்கின்றனர். (குழந்தை சற்று நேரம் இருக்கட்டும்; சீரியல் போனால் வருமா?)

மாறாக குழந்தை கற்க விரும்புவதை சுதந்திரமாக கற்க விடுவதோடு அதற்கு உற்ற துணையாக தாய் இருக்க வேண்டும். குழந்தையோடு தாயும் பாடம் படித்து விளக்குவதை குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றன. அறிவியல் பெரிதும் இதை ஆமோதிக்கிறது!

‘ரிச் சென்ஸரி எக்ஸ்பீரியன்ஸஸ்” எனப்படும் பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, சுவைப்பது என்ற புலன் வழி அனுபவங்களை இளம் தாய் தான் தன் குழந்தைக்குத் தர முடியும்!

உத்வேகமூட்டும் சுற்றுப்புறங்களை – கடல், ஆறு, மலை, குட்டை, ஏரி இவற்றில் அடங்கியுள்ள விஞ்ஞான விஷயங்களை விவரித்தல், டைனோஸர், சிங்கம், புலி, யானை ஆகியவற்றோடு பறவைகளைப் பற்றி விளக்குதல், அழகிய மலரிலிருந்து காணக்கூடிய இயற்கைக் காட்சிகளைப் பார்த்து அனுபவிக்க விடுதல் இவை ஒரு ‘ஐன்ஸ்டீனின் தாய்’ செய்ய வேண்டியவை!

ஒரு குழந்தை விளையாடுவதன் மூலமாகவே உடல்ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் வளர்கிறது. ஆகவே பொம்மையிலிருந்து வெளி உலகம் வரை குழந்தைக்கு விளையாட்டு தேவை! “குழந்தை தனது முதல் மூன்று வருடங்கள் பொம்மைகளை சுருட்டி தேய்த்து, முகர்ந்து பார்த்து, வாயில் வைத்துப் பார்த்து கற்க முயல்கிறது” என்கிறார் மற்றொரு உளவியல் அறிஞர். முதல் மூன்று மாதங்களில் பார்வையின் முழுப் பரிமாணமும் குழந்தைகளுக்கு வந்து விடாது. ரிச்சர்ட் எம். ரெஸ்டோக் தனது ‘தி இன்ஃபண்ட் மைண்ட்’ என்ற நூலில், “ஹார்ட்வேரும் சாஃப்ட் வேரும் ஒருங்கே இணையாத வரை குழந்தைகள் பார்ப்பதில்லை” என்கிறார். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் மாதங்களில் அது பார்க்க ஆரம்பிக்கிறது. இந்த மாதங்களில் நல்ல இசையை ஒலிக்கச் செய்யுங்கள்” என்பது அவரது அறிவுரை!

“சூப்பர் ஸ்டார்ட்” என்று பார்ப்பதை எல்லாம், குழந்தைகளிடம் திணிக்க முயலாமல் “உங்கள் ஐன்ஸ்டீன்களிடம்” உள்ள திறமையைக் கண்டுபிடிக்க முயலுங்கள்!

“முறையாக ஊக்கி விட்டால் எல்லா மொழிகளையும், இசை, நடனம் ஆகிய எல்லாவற்றையும் குழந்தைகள் கற்று விடும் என்று இந்த வெறி பிடித்த பெற்றோர்கள் நினைக்கின்றனர். பேபிகளை ப்ரஷர் கொடுத்து மேதைகளாக்க முடியாது” என்கிறார் டாக்டர் டயமண்ட்.

‘ப்ரஷர் செய்யாதீர்கள், புஷ் செய்யாதீர்கள், ஆனால் பே அட்டென்ஷன், வாட்ச், ட்யூன் இன் – கவனியுங்கள், கருத்தூன்றிப் பாருங்கள், லயத்துடன் சேர்த்து விடுங்கள்” – இதுவே மேதைத் தன்மையை ஊக்கி வெளிக் கொணர்ந்து விடும்!

உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள் உருவாக வேண்டுமென்று சொல்ல வேண்டாம்; அதற்கும் மேலான ஒருவரும் உருவாகக் கூடும்! கூடவே இருந்து பாருங்கள், பழகுங்கள், திறமைகளை ஊக்கி விடுங்கள்! உங்கள் குழந்தை யார் என்பது புரிந்து விடும்!

**

சினேகிதி மாத இதழில் 2006, ஜனவரி மாதம் வெளியான கட்டுரை.

Leave a comment

Leave a comment