‘உணர்வு’பூர்வமாக வாழுங்களேன்! (Post No.13,607)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.607

Date uploaded in London – 30 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xx 

உணர்வுபூர்வமாக வாழுங்களேன்! 

ச. நாகராஜன் 

பிரிட்டனில் 2031-ம் ஆண்டு வாக்கில் திருமணம் என்ற புனிதச் சடங்கை நாடுவோரது எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும் என்ற சமீபத்திய ஆய்வு அந்த நாட்டின் ஆண் பெண்களை வெகுவாகக் கலக்கமடையச் செய்திருக்கிறது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தனித்தனியே தான் வாழ்வார்களாம். இனக் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்ட ஆணும் பெண்ணும் கூடி வாழ்வார்களாம். இதை கோ-ஹாபிடட் என்று கூறிக் கொள்வார்கள். சேர்ந்து வாழ்ந்து சலித்து விட்டால் அடுத்த துணையை நாட இருவருமே ஆயத்தமாவார்கள்!

மேலை நாட்டுத் தாக்கத்தால் மாறி வரும் நமது உறவுமுறைகள் நம்மையும் சற்றுக் கலக்குகிறது. ஆணும் பெண்ணும் சம்பாதிப்பதால் பணம் இருக்கிறது என்ற நிலையில் சிறு சிறு விஷயங்களில் கூட விட்டுக் கொடுக்காத பிடிவாத அணுகுமுறை விவாகரத்து வரை கொண்டு விடுகிறது.

“மதூ… நீ செய்வது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை” என்று நடுத்தர வயதான பெண்மணி தன் டீன் – ஏஜ் மகளிடம் சொல்லும் போது, “நான் எது செய்தாலும் உனக்குப் பிடிக்காது என்பது எனக்கு எப்பவோ தெரியும்” என்று வெடுக்கென்று பதில் வருகிறது. தாய் விதிர்விதிர்த்துப் போகிறாள்.

அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் பிரமாதமாக வேலை செய்பவர்கள் வாழ்வில் தோற்றுத் தனியே ஏக்கம் பிடித்து வாழ்வதைப் பார்க்கலாம். அறிவு அவர்களுக்குத் துணை கொடுக்கவில்லையா? புத்திசாலித்தனம் 20 சதவிகிதம் மட்டுமே இருந்து 80 சதவிகிதம் உணர்ச்சிபூர்வமாக வாழ்பவர்கள் நிம்மதியான வாழ்வு வாழ்கிறார்கள்.

உணர்ச்சி அறிவுதான் உறவுகளின் வாழும் வகையைக் காட்டும் அறிவு. மகளின் உணர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டிய மதுவின் அம்மா “உன்னுடைய அந்தச் செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவுசெய்து எனக்குக் கொஞ்சம் புரியும்படி விளக்கேன்” என்றால் மகளின் பிடிவாதப் போக்கு மாறி சரியாக சிந்திக்கும் பக்குவம் வரும்.

பணம் மட்டுமே வாழ்வு இல்லை என்பதை மண முறிவு வாங்கிய ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளும் போது, காலம் கடந்து விடுகிறது.

‘அகாடமிக்’ அறிவோடு வாழ்வதை விட ‘எமோஷனல்’ அறிவோடு நடப்பவர் சீக்கிரமே அனைவருக்கும் தலைவராக ஆவதோடு செல்வத்துடனும் உறவுச் செழிப்புடனும் சமுதாயத்தில் கௌரவம் மிக்க உயர் நிலையை அடைகின்றனர்.

ஜாக் மேயர், பீட்டர் சலொவி என்ற இரண்டு அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சி மூலமாக வாழ்க்கையை மேம்படுத்த உணர்ச்சி அறிவு பெரிதும் பயன்படும் என்று அறிவித்தனர்.

டேனியல் கோல்மேன் என்பவர் உணர்ச்சிகளை ஆராய ஆரம்பித்தார். ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்ற இவரது நூலைப் பற்றி பிரபல டைம் பத்திரிகை எழுதியவுடன் அது பிரமாதமாக விற்பனையானது. பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றி அவர் இது பற்றி விளக்க ஆரம்பித்தார். “என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை” என்று பாதிக்கப்பட்டவர் சொல்லும் போது அந்த உடைந்த உறவை ஏற்படுத்தியவர், சுமார் மூவாயிரம் சொற்களில் பேசிய பிறகு,, அது போலச் சொல்லி இருக்கிறார் என்று அர்த்தமாகிறது.

சொல்ல வருவதை மற்றவர் மனம் உடையாமல் வேறுவிதமாக மாற்றிச் சொல்வது ஒரு கலை. இதை சுலபமாகக் கற்கலாம்.

உணர்வு அறிவை மேம்படுத்த எளிய பத்து வழிகள் உள்ளன. சிறிது சிரமப்பட்டால் அவற்றைக் கற்று மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் வாழ்வதோடு நம் மனம் புண்படாமல் வாழவும் முடியும்.

1.உணர்ச்சிகள் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள். நிகழ்ச்சிகளுக்கும், உங்களுடன் பழகுபவருக்கும் பட்டப் பெயர் சூட்டாதீர்கள்.

2. எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

3. உங்கள் உணர்ச்சிகளுக்கு நீங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். (நீ பொறாமைப்பட வைக்கிறாய் என்பது தவறு. நான் உன்னைப் பார்த்து பொறாமைப்படுகிறேன் என்பதே சரி.)

4. நல்ல முடிவுகளை எடுக்க உங்கள் உணர்ச்சிகளை உதவுமாறு செய்யுங்கள்.

5.  மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

6. ஆற்றல்மிக்கவராக ஆகுங்கள். கோபப்படாதீர்கள்.

7. மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு பரிவு காட்டுங்கள்.

8. உணர்ச்சிகள் உங்களை மேம்படுத்துகிறதா என்று பாருங்கள். ஆக்க பூர்வமானதாக அவற்றை ஆக்குங்கள்.

9. யாருக்கும் புத்திமதி தர வேண்டாம். யாரையும் அதிகாரம் செலுத்த வேண்டாம்; கட்டுப்படுத்த வேண்டாம். விமர்சிக்க வேண்டாம். தவறாக எடை போட வேண்டாம்.

10. உங்களை மதிக்காதவர்களைத் தவித்து விடுங்கள்

உணர்வுபூர்வமான அறிவு கூடுவதன் மூலம் உறவுகளை செழிக்கச் செய்யலாம்! அலுவலகம், இல்லம், ஏன் நீங்கள் இருக்குமிடம் எல்லாம் இன்பம் பெருகும்.

சினேகிதி மாத இதழில் 2005, டிசம்பர் மாதம் வெளியான கட்டுரை.

xxxx

Leave a comment

1 Comment

  1. Varna Rekha's avatar

    Varna Rekha

     /  September 1, 2024

    It is all easy to write articles. Also easy to say that women are to be blamed for going out and earning, since money was mentioned, not ‘adjusting’ for ‘the pit for which there is no bottom at all’ , it has always been one sided. Why, even 2031 the world will be male dominated and females have to be adjusting.

    The news of atrocities against women, shows actually the frustration of men against the growing awareness among women due to education, getting a job, becoming economically independent. So everyone says the physically weaker one should be subservient to the stronger . Hypocrisy..!

Leave a comment