Post No. 13.611
Date uploaded in London – —31 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘இட்லி சாப்பிடுவது’ போல விழுங்குங்கள்!
ச. நாகராஜன்
வானத்திலிருந்து நூறு அடி ஆழம் கீழாகப் பரவி ஏழு நகரங்களை மூடி, அனைத்து இயக்கத்தையும் நிறுத்தும் மூடு பனியைத் திரட்டி எடுத்தால் அதை ஒரு பாட்டிலுக்குள் அடைத்து விடலாம்! இது அறிவியல் விளக்கும் ஒரு வியப்பூட்டும் உண்மை!
விமானம் ஓடுதளத்தில் இறங்கவோ, ஏறவோ முடியாது; வாகனங்கள் தடைபட்டு மெல்ல மெல்ல செல்லும்; ஒரு அடி தூரத்தில் இருப்பதைக் கூடக் காண முடியாமல் யார் மீது மோதப் போகிறோமோ என்று பயந்து மெல்ல மெல்லச் செல்ல வேண்டியிருக்கும். இது மூடு பனியின் விந்தை ஜாலம்! என்றாலும் அதைத் திரட்டினால் ஒரு சிறிய பாட்டில் கூட நிறையாது.
இந்த மூடுபனியைப் போலத்தான் நன் வாழ்க்கையில் சந்தோஷத்தை மறைத்து ‘ஏழு நகரம்’ அளவு பரவி நம்மைத் துன்பப்படுத்தும் டென்ஷனும் கூட!
பிரிட்டனில் 55 லட்சம் பேர் அலுவலக டென்ஷனால் அல்லது ஸ்ட்ரெஸ்ஸால் பாதிக்கப்பட்டதைக் கண்ட ‘மைண்ட்’ என்ற மன நல மேம்பாட்டு அமைப்பு ஐந்து கோடி மனித நாட்கள் இதனால் இழக்கப்படுவதாகக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளது.
ஜனத்தொகை குறைந்த, சுற்றுப்புறச் சூழ்நிலை அவ்வளவாக மாசுபடாத, பிரிட்டனிலேயே இப்படி நிலை என்றால் நூறு கோடி ஜனத்தொகை உள்ள அதிக ‘மாசுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலை’ உள்ள நமது நாட்டின் நிலை என்னவாக இருக்கும்? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கொடுமையாக இருக்கும்!
ஆணும் பெண்ணும் அலுவலகத்திற்குக் காலை எட்டு மணிக்குக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு புறாக் கூட்டில் அடைய வருவது போல வீடு வரும் போது இடைப்பட்ட நேரத்தில் துணைக்கு நம்முடன் வரும் ஒரே துணை டென்ஷன் தான்! எவ்வளவு அவஸ்தைகள்; எவ்வளவு டென்ஷன்! இதைப் போக்கும் வழிகளைக் கூறுவதாக ஏதேனும் புத்தகம் வந்தால் அதை நம்ப வேண்டாம். ஏனெனில் பாஸிடிவ் டென்ஷன் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவை; நெகடிவ் டென்ஷனை அழிக்கவோ, நீக்கவோ போக்கவோ முடியாது. ஆகவே அதை ‘சமாளிக்க’ என்ன செய்வது என்று கற்றுக் கொண்டாலே ஈடு கொடுத்து வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.
அற்புதமான வைரம் சாதாரண நிலக்கரியாக இருந்து அழுத்தப்பட்டதால்தானே உன்னத நிலையை அடைகிறது.
உங்கள் ‘ஸ்ட்ரெஸ்ஸை’ நீங்கள் சமாளித்து வைரம் ஆகி ஜொலிக்கலாம். சரி, சமாளிக்க வழிகள் உண்டா, என்ன? உண்டு!
1. உடலும் மனமும் களைத்த நிலையில் தூக்கத்தைத் தள்ளிப் போடாதீர்கள். அயர்ந்த நித்திரை நல்ல புத்துணர்ச்சியையும் புதிய ஆற்றலையும் அதிக சிந்தனைத் திறனையும் அள்ளி வழங்கும். இரவில் நெடு நேரம் கண் விழிப்பவர்களாக இருந்தால் உடனே பழக்கத்தை மாற்றுங்கள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் இன்றியமையாதது.
2. தேவையர்ற அனைத்தையும் அலவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, உதறி எறியுங்கள். நிறைய நேரம் கிடைக்கும். மனதில் நிம்மதியும் கூடும்! வீண் அரட்டை, இடைவிடாத டி.வி, சீரியல், டெலிபோனில் நீண்ட பேச்சு, நிறைய பேருடன் பேச்சு.. இப்படித் தேவையற்ற விஷயங்களின் பட்டியலைப் போட்டால் நீங்களே வியப்படையும் அளவு பட்டியல் நீளும். அதைக் குறைக்கும் போது டென்ஷனும் குறையும்!
3. இட்லி சாப்பிடுவதை நினைத்துப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இட்லிக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும். இட்லியை யாரும் ஒரேயடியாக வாயில் வைத்துத் திணித்து விழுங்குவதில்லையே! விள்ளல் விள்ளலாக எடுத்துச் சுவைத்து அனுபவித்துச் சாப்பிடுகிறோம் இல்லையா? வாழ்க்கையையும் ஒரே நாளில் அனுபவித்து விடத் துடிக்காதீர்கள். ஒவ்வொன்றாக – ஒவ்வொன்றாக செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
4. முக்கியத்துவத்திற்கு முதலிடம் (FIRAT THINGS FIRST) என்ற அடிப்படையில் உங்கள் மீது விழும் பளுக்களை ஒவ்வொன்றாக உதறி முன்னேறப் பழகுங்கள்.
சின்னக் கழுதைக் கதையைக் கேட்டிருக்கிறோமே, நினைவிருக்கிறதா?
கழுதை ஒன்று இருளான, அவ்வளவாக ஆழம் இல்லாத பாழும் கிணற்றில் விழுந்து விட்டது. அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதை அறியாத அதன் சொந்தக்காரன் அதைத் தூக்கி விடவும் முடியாமல் அதை அப்படியே விடவும் முடியாமல், அதை அப்படியே விட மனமில்லாமல் அது இறந்து விட்டதாக் நினைத்துக் கொண்டு அதை அங்கேயே புதைக்க விரும்பினான். ஒவ்வொரு கூடையாக மணலை அள்ளிக் கிணற்றில் போட்டான். தன் முதுகின் மீது ஒவ்வொரு முறையும் வந்து விழுந்த மணலை உதறி அதைக் கீழே தள்ளியது அந்தக் கழுதை. இப்படியே கிணற்றில் போட்ட மணலைக் கீழே உதறி உதறி அது மேலே வந்து விட்டது!
உங்கள் முதுகின் மீது போடப்படும் பளுக்களையும் உதறி உதறிக் கீழே தள்ளுங்கள், அதன் மீது ஏறி நின்று மேலே முன்னேறுங்கள்.
சினேகிதி மாத இதழில் 2006, மார்ச் மாதம் வெளியான கட்டுரை.
xxxx