கேளுங்கள் கொடுக்கப்படும்! (Post No.13,661)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.661

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

கேளுங்கள் கொடுக்கப்படும்! 

ச.நாகராஜன்

 இன்றைய வாழ்க்கை முறையில் எங்கு போனாலும் கேள்விகள்! அம்மா, மகளிடம் கேள்வி! மகள் அப்பாவிடம் கேள்வி! கல்லூரியில் பேராசிரியர்களின் கேள்விகள்! இண்டர்வியூவில் கேள்விகள்!

கேள்விகள் கேட்காமலும் வாழ முடியவில்லை. கேட்பவர்களுக்கு பதில் சொல்லாமலும் வாழ முடியவில்லை. சொல்லப்போனால் நாம் கேட்கும் கேள்விகளிலும் நாம் கூறப் போகும் பதில்களிலும் தான் நமது வெற்றியே அடங்கி இருக்கிறது. இது இன்று ஆரம்பித்த ‘மாடர்ன் டெக்னிக்’ இல்லை.

ரிக் வேத காலத்தில் ரிஷிகள், “ஆஹா! பிரபஞ்சம் எப்படித் தோன்றியது” என்று பிரம்மாண்டமான கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து வேள்வி யுகத்திலேயே கேள்வி யுகம் தொடங்கி விட்டது!

மகாபாரதத்தில் யட்சன் தர்மரைக் கேட்ட கேள்விகளும் அதற்கு தர்மர் கொடுத்த பதில்களும் மாடர்ன் குருமார்கள் உற்று நோக்க வேண்டிய நுட்பமான கேள்வி-பதில் முறை! சிறிய சொற்களால் யட்சன் கேட்ட உயிர் எடுக்கும் அல்லது உயிர் கொடுக்கும் கேள்விகள் அவை.

ஆதி சங்கரர் தனது ப்ர்ச்னோத்தர ரத்ன மாலிகாவில் கொக்கி போன்ற கேள்விகளையும் நறுக்குத் தெறித்தாற் போன்ற பதில்களையும் தந்திருப்பது பிரமிப்பையும் வியப்பையும் தரும்.

இந்த நவீன யுகத்திற்கேற்ப கேள்வி கேட்பதை வாஷிங்டனில் வாழும் வாலெரி என்ற பெண்மணி ஆறு மட்டங்களாக வகுத்து புதிய அணுகுமுறையைத் தருகிறார். இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல அனுமதிக்கும் அவர் தன் பெயரை விட்டு விடக் கூடாது என்று வேண்டுகிறார். (நியாயமான வேண்டுகோள் தானே!)

கேள்விகளின் ஆறு மட்டங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கேள்வி கேட்பதை அலசி ஆராய்வோம்.

1)   எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள்; ஆனால் சமமாக அல்ல.

(All Question; but not equally)

சிந்தனை செய்யாமலேயே கேள்வி கேட்பது சுலபம்; ஆனால் கேள்வி கேட்காமல் சிந்தனை செய்ய இயலாது. என்ன, ஏன், எப்படி போன்ற கேள்விகளே சிந்தனையைத் தூண்டுகின்றன. ஒரு விஷயத்தைத் தெரியாமல் அறிந்து கொள்ள கேள்வி கேட்பது, அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வி கேட்பது, சில சமயம் மற்றவர்களின் நம்பிக்கைக்குச் சவால் விட்டு கேள்விகளைக் கேட்பது என கேள்விகளைப் பல விதமாகக் கேட்கிறோம். கேள்வி கேட்பதற்கு ஏற்ப விடையும் வருகிறது.

2)   எல்லா கேள்விகளும் சமம் அல்ல!

(All Questions are not equal)

உண்மையான விஷயங்களைத் தரவும், நிலைமையைத் தெளிவு படுத்தவும் கேட்கப்படும் கேள்விகள் அந்த நிமிடம் நாம் அறிய வேண்டுவனவற்றைத் தெளிவாக்குகிறது. ஆனால் எதிர்காலத்தை ஊடுருவி நம்மை விரிவு படுத்திக் கொண்டு,  நாம் அறிய வேண்டுவனவற்றை சிறந்த மேதைகள் கேட்கிறார்கள்.

3)   கேள்வியின் சக்தி

(The Power of Question)

ஒரு கேள்விக்கான இன்றைய பதில் நாளைக்கே பொருத்தமில்லாமல் போகலாம். நமது அறிவின் எல்லையைத் தொட்டுச் சோதிக்கின்றன கேள்விகள். நாம் நினைத்துப் பார்க்க முடிய அளவு சக்தி கேள்விகளுக்கு உண்டு. உதாரணமாக ‘எதிர்கால இயல்’ வல்லுநரான ஜோயல் பார்க்கரின் கேள்வியைப் பார்க்கலாம்.

எந்த ஒன்று செய்வதற்கு முடியாது? செய்ய முடிந்தால் நிலைமையை அடியோடு மாற்றக் கூடியது எது?

சிந்தனையை ஊக்கி விட்டு, கற்க வைத்து, மனதை ஒருமுகமாக ஈடுபடுத்தி வைப்பதே கேள்வியின் சக்தி!

சரியான கேள்விகளைக் கேட்கத் தெரிந்தால்.

1)      தேவையான தருணத்தில் அதிக தகவல்களைப் பெற முடியும்.

2)      எது தெரிந்து கொள்ள வேண்டியது, எது தேவையற்றது என்று பாகுபடுத்திப் பிரித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

3)      தகவலைத் தெரிந்து கொண்டு அதைச் சீர் தூக்கிப் பார்த்து உங்களின் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4)      நீங்கள் அறிந்தவற்றின்  மூலம் புதிய அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

5)      பார்வையை பரந்த அளவில் விரித்துக் கொண்டு புதிய தொடர்புகள், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது ஆறு மட்டங்களில் உள்ள கேள்வி வகைகளைப் பார்ப்போம்.

இப்படிப் பார்க்கும் உத்தி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். உங்களை அருமையாகச் சிந்திக்க வைக்கும். அதிக சக்தியை உங்களுக்குத் தரும்.

இந்தப் புதிய முறை உங்களுக்குச் சரியான வழியைக் காட்டி, உங்களை இயக்கி, உங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும். மறைந்திருக்கும் உங்களின் ஆற்றல் பூரணமாக வெளிப்படுவதால் அதைத் திறமையாக உபயோகப்படுத்தி வெற்றி மேல் வெற்றி பெறலாம்.

1)      முதல் மட்டம் (Reflexive)

நேரடியானது. பதிலுக்குத் தானே இட்டுச் செல்வது. உரையாடலை உடனே முடிக்க வல்லது. இது தான் முதல் வகை. இது தற்போதுள்ள உங்களின் பார்வையை உறுதிப்படுத்துவதாகும். உதாரணத்திற்கு ஒரு கேள்வி:

இந்தப் புதிய வேலை உனக்குப் பிடித்திருக்கிறது, இல்லையா?  இதை அடிப்படை சிந்தனை அல்லது Reflexive  எனலாம்.

2)  இரண்டாவது மட்டம் (Framing)

அடிப்படைத் தகவலை அறியச் செய்வது இந்த வகைக் கேள்விகள்.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: எந்த பொஸிஷனுக்கு நீ விண்ணப்பிக்கிறாய்?

இதை உருவாக்குதல் அல்லது Framing  எனலாம்.

3. மூன்றாவது மட்டம் (Planning)

கிடைத்த தகவலை வைத்து தன் கைவசம் உள்ள விஷயத்துடன் இணைத்து தனது வேலையை வெற்றிகரமாக முடிப்பது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: உனது முந்தைய வேலையின் அனுபவம், உனது இந்த வேலைக்கு எப்படி உதவும்?

இதை திட்டமிடல் Planning  எனலாம்.

4)  நான்காவது மட்டம் (Reflective)

கிடைத்த தகவலை ஒரு புதிய வழியில் உபயோகப்படுத்துவது அல்லது ஒரு புதிய நிலைக்குப் பயன்படுத்துவது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: குறிக்கோளை அடைய உனது தலைமைப் பண்புகளை நீ பயன்படுத்திய சமயத்தை விவரி. அது எப்படி உனக்கு வெற்றியைத் தந்தது? இதை பிரதிபிம்ப சிந்தனா முறை அல்லது Reflective எனலாம்.

5) ஐந்தாவது மட்டம் (Predictive)

பிரச்சினையைத் தீர்க்க படைப்பாற்றலை ஊக்குவித்து, சிந்திப்பது ஐந்தாவது வகை.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “உற்பத்திப் பிரிவில் உள்ள தொழிலாளர்களையும் பொருள்களை எடுத்துச் செல்லும் பிரிவில் உள்ளவர்களையும் சேர்த்து விட்டால் அது உன் நிர்வாக உத்தியை எந்த விதத்தில் மாற்றும்?”

இதை முன்கூட்டி உணர்தல் அல்லது Predective எனலாம்.

6)    ஆறாவது மட்டம் (Gap)

வலிமையுடன் கூடிய சிந்தனை மற்றும் கற்பதை ஊக்குவிக்கும்.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “உனது வேலையில் முதல் 30 நாட்கள் செய்ய வேண்டிய மூன்று வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதிக மதிப்புடைய எந்த மூன்று செயல்களைத் தேர்ந்தெடுப்பாய்?”

இதை புதிய சிந்தனா முறை அல்லது Gap எனலாம்.

முதலில் ஆறாம் மட்டத்தில் உள்ள கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். பின்னர் அதையும் முதல் மட்டத்தில் உள்ள கேள்விகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரிய வரும்!

நீங்கள் கேட்கின்ற கேள்விகளை இனி இந்த ஆறு வகைகளில் பொருத்திப் பாருங்கள். அதோடு உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளையும் இந்த ஆறு வகைகளில் பொருத்திப் பாருங்கள்.

கேள்வி கேட்பதில் உள்ள சூட்சுமம் தெரிய வரும்!

கேள்வி கேட்கத் தெரிந்து விட்டால் நீங்கள் தான் இந்த நாட்டு மன்னர்!

ஏனெனில் எப்படிப்பட்டவரையும் உங்களால் சமாளிக்க முடியும்; எப்படிப்பட்ட பதிலையும் உங்களால் அறிவியல் பூர்வமாகக் கொடுக்க முடியும்!

சிரித்துக் கொண்டே இண்டர்வியூக்களை எதிர்கொண்டு ஜெயிக்கலாம் அல்லது இண்டர்வியூக்களையே நடத்தலாம்.

பதில் வேண்டுவோருக்கு அனாயாசமாக நீங்கள் சொல்லக் கூடிய மந்திரம் :- “கேளுங்கள், கொடுக்கப்படும்!”

**

 ‘நிலாச்சாரல்’ இணைய தள இதழில் 1-11-2006 அன்று வெளியான கட்டுரை.

Leave a comment

Leave a comment