30000 அபார்ஷன் செய்த டாக்டரின் கண்ணீர்! (Pos.13695)

30000 அபார்ஷன் செய்த டாக்டரின் கண்ணீர்! (Pos.13695)

  WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.695

Date uploaded in London – 22 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

30000 அபார்ஷன் செய்த டாக்டரின் கண்ணீர்! 

ச. நாகராஜன்

கருவிலே கொலை

 சிசுக்கொலை என்பது மிகக் கொடுமையானது. அதிலும் கருவிலே கொலை என்பது அதைவிடக் கொடுமை! 25 வருடங்களாக 30,000 அபார்ஷன்களைச் செய்த டாக்டர் மகேந்த்ர படீல் மனம் வருந்திக் கண்ணீர் விட்டு தனக்கு மன்னிப்பே கிடையாது என்று உருகுகிறார்.

 ஒரு நாளைக்கு ஆறு அபார்ஷன்களைச் செய்த பிரபலமான இந்த டாக்டர் 1993-ம் வருடம் ஹரே கிருஷ்ண இயக்கத்தைச் சேர்ந்த சுவாமிப் பிரபுபாதரின் சீடரான தேவ் அம்ருத் பிரபுதாஸின் பாகவத கதாகாலக்ஷேபத்தைக் கேட்டு மனம் மாறினார். ஐந்து வருடங்கள் கழித்து அபார்ஷன் செய்வதையே மறுக்கும் பக்த வேதாந்த மருத்துவ மனையில் சேர்ந்தார்.

 “பெருகி வரும் மக்கள் தொகையைத் தடுக்க அபார்ஷன் செய்வதில் என்ன தவறு, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 35,000 அபார்ஷன்கள் நடக்கின்றனவே” என்ற இவரது சகாக்களின் வார்த்தைகளை இவர் ஏற்கவில்லை.

 “1000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை ஒரு நாளைக்கு சம்பாதிக்கும் இந்தத் தொழில் வேண்டாம். 30000 உயிர்களைக் கொன்ற நான், ஒரு உயிரையாவது காப்பாற்றினால் தான் செய்த பாவம் சற்றாவது குறையும்” என்று அவர் வருந்திக் கூறுகிறார்.

 இயற்கை வளம் ஏராளம்

 மக்கள் தொகை பற்றிக் கவலைப்படுவோருக்கு கலிபோர்னியா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளை இவர் சுட்டிக் காட்டுகிறார்.

 பூமியின் இயற்கை வளம் இதைப் போல முப்பது மடங்கு ஜனத்தொகை உயிர் வாழப் போதுமானது என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. பிரச்சினை என்னவென்றால் இருக்கும் வளத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான். அதை உலக நாடுகளின் தலைவர்கள் தான் தீர்க்க வேண்டும் என்கிறார் இவர்.

 மௌன அலறல்

 இப்போது அபார்ஷன் செய்து கொள்ள வரும் பெண்களிடம் பேசி, அவர்களின் மனதை மாற்றும் மாபெரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் டாக்டர் படீல்!

ஐந்து நிமிடத்தில் அபார்ஷன் என்ற கோஷத்தை நம்பும் நம் நாட்டில், ஐந்து லட்சம் பெண்கள் அபார்ஷனால் மட்டும் இறந்துள்ளனர். அது மட்டுமல்ல, மௌன அலறல் (The Silent Scream) என்ற 28 நிமிடமே ஓடும் படம் கருவில் உள்ள சிசு என்ன பாடுபடுகிறது என்பதை உள்ளத்தை உருக்கும் வகையில் காட்டுகிறது. நியூயார்க்கைச் சேர்ந்த பெர்னார்ட் நாதென்ஸன் எடுத்தது இந்தப் படம். சர்ஜன் கத்தியுடன் சிசுவை நெருங்கும் போது  கரு தனக்கு நேரப்போகும் ஆபத்திலிருந்து தப்பிக்க அலறி விலகி ஓடுகிறதாம்! இதில் பெண் கருக்களே பெரும்பாலும் அழிக்கப்படுகிறதாம்!

 இதையெல்லாம் உணர்ந்துதான் தன் எஞ்சியுள்ள வாழ்நாளை அபார்ஷனைத் தடுக்கும் இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ளார் டாக்டர் படீல்!

 முதல் குழந்தை முப்பதிலா?!

 இதனிடையே வேலைக்குச் செல்லும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப் போடுவதை டாக்டர் டீ ப்ரூயின் கண்டிப்பதோடு, இப்படிச் செய்வது அவர்கள் குழந்தை பெறும் வாய்ப்பைக் குறைத்து விடும் என்று, தான் மேற்கொண்ட ஆய்வைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார். மெனோபாஸ் எனப்படும் கர்ப்பம் தரிக்க முடியாத காலகட்டத்திற்கு முந்தைய இருபது வருடங்கள், கருத்தரிப்பதில் அவ்வளவாக வளம் இல்லாத காலம் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.

 ‘கேரியர் முன்னேற்றம் என்று தாய்மையைப் பறி கொடுக்கின்றனரே இன்றைய நவீனப் பெண்கள்’ என்று வருத்தப்படும் அவர், இங்கிலாந்தில் ஒரு கேரியர் உமன் 29 வயதிலே தான் முதல் குழந்தை பெறும் அவல நிலையைச் சுட்டிக் காட்டுகிறார்.

 தாய்ப்பால் அறிவைப் பெருக்கும்!

 இது ஒரு புறமிருக்க டென்மார்க்கில் 3253 பேரை ஆராய்ந்த ஒரு ஆய்வறிக்கை ஒன்பது மாதங்கள் தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தை, தாய்ப்பால் மறுக்கப்பட்ட குழந்தைகளை விட அறிவில் சிறந்து விளங்குவதாகக் கூறுகிறது. இந்த ஆய்வை நடத்திய ஆய்வு டைரக்டர் திருமதி ஜூன் மெக்கோவர் ரெய்னீஷ், ஸ்மார்ட் அடல்டாக, உங்கள் குழந்தை பின்னால் உருவாக தாய்ப்பால் கொடுங்கள் என்று வற்புறுத்திக் கூறுகிறார்.

 ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ முடிகின்ற இந்த நவீன யுகத்தில், “இளமையை வீணாக்காமல் காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து நல்ல மேன்மையுள்ள குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதே நல்ல மாதர் அறம்” என்பதை, இன்றைய மேலை நாட்டு ஆய்வுகள் ஆமோதிப்பதைப் பாரதப் பெண்மை போற்றி ஏற்க வேண்டும்! 

**

சினேகிதி மாத இதழில் 2003, ஆகஸ்ட் மாத இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை

Leave a comment

Leave a comment