Post No. 13,722
Date uploaded in London – 29 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பண்டிகை நாட்கள் : அக்டோபர் 2- மஹாளய அமாவாசை, காந்தி ஜெயந்தி; 3-நவராத்திரி ஆரம்பம்,11- சரஸ்வதி பூஜை, 12- விஜயதசமி; 31- தீபாவளி.
அமாவாசை– 2; பெளர்ணமி-17; ஏகாதசி விரத நாட்கள்–13, 28 சுபமுகூர்த்த நாட்கள்–21,31
****
பாரதியார் பாடல்களிலிருந்து நிறைய பொன் மொழிகளைக் கண்டோம். அவர் எழுதிய கதை கட்டுரை உரை நடை நூல்களிலிருந்து 31 பொன் மொழிகளைக் காண்போம்.
THANKS TO Project Madurai website .
அக்டோபர் 1 செவாய்க் கிழமை
கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?
****
அக்டோபர் 2 புதன் கிழமை
பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி.
****
அக்டோபர் 3 வியாழக் கிழமை
வட ஹிந்துஸ்தானத்தில் சில இடங்களில் ராமன் கக்ஷி, கிருஷ்ணன் கக்ஷி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்து சிலர் பரஸ்பரம் பகையைச் செலுத்துகிறார்கள். இஃதெல்லாம் மடமையின் லக்ஷணம்.
****
அக்டோபர் 4 வெள்ளிக் கிழமை
அக்னியை இரண்டு ரூபமாக்கி, ஒரு ரூபம் குமாரனாகவும் தேவசேனாதிபதியாகவும், மற்றொரு ரூபம் தேவகுரு வாகவும் சொல்லப்படுகிறது. அக்னியை ருத்ரனுடைய பிள்ளை என்று வேதம் சொல்லுகிறது. அக்னியே ருத்ரனென்றும் சொல்லப்படுகிறது.
***
அக்டோபர் 5 சனிக் கிழமை
“கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள் தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிடவேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.
****
அக்டோபர் 6 ஞாயிற்றுக் கிழமை
இது தான் வேதத்தின் கடைசியான கருத்து. ”தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்? என்பது முன்னோர் கொள்கை.
****
அக்டோபர் 7 திங்கட் கிழமை
உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை – எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.
****
அக்டோபர் 8 செவாய்க் கிழமை
கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய “பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
****
அக்டோபர் 9 புதன் கிழமை
ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.
****
அக்டோபர் 10 வியாழக் கிழமை
சிவன் நீ; சக்தி உன் மனைவி.
விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.
பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி.
****
அக்டோபர் 11 வெள்ளிக் கிழமை
இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.
****
அக்டோபர் 12 சனிக் கிழமை
கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
****
அக்டோபர் 13 ஞாயிற்றுக் கிழமை
இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை.
****
அக்டோபர் 14 திங்கட் கிழமை
பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது.ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். “அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.
****
அக்டோபர் 15 செவாய்க் கிழமை
“காலம் பணவிலை உடையது” ( TIME IS MONEY )என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது.
****
அக்டோபர் 16 புதன் கிழமை
இன்று செய்யக்கூடிய கார்யத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி வைப்பதனால், அந்தக்கார்யம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.
****
அக்டோபர் 17 வியாழக் கிழமை
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு”
என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.
இதன் பொருள்-வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது-என்பதேயாகும்.
****
அக்டோபர் 18 வெள்ளிக் கிழமை
”ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர்” என்று வேதமே சொல்லுகிறது கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பலமூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன.
****
அக்டோபர் 19 சனிக் கிழமை
(தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரஹஸ்யமாகப் பூஜை செய்து வருகிறார்கள். எனவே, சில இடங்களில்,”சாக்தன்” என்றால் “ரஹஸ்யமாகக் குடிப்பவன்” என்ற அர்த்தம் உண்டாய்விட்டது. காலத்தின் விந்தை! )
****
அக்டோபர் 20 ஞாயிற்றுக் கிழமை
வேதத்தில் பிரம்ம தேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே ப்ரஹ்மணஸ்பதி; அவரே ப்ருஹஸ்பதி
****.
அக்டோபர் 21 திங்கட் கிழமை
விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரணவமந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி ‘கணா நாம் த்வா கணபதியும் ஹவாமஹே’ என்று ஸாமான்ய வழக்கத்திலுள்ள வேத மந்திரத்தில் பிள்ளையாரைப் பிரம்ம தேவனென்று காட்டியிருப்பது தெரிந்து “கொள்ளுக.
****
அக்டோபர் 22 செவாய்க் கிழமை
தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
****
அக்டோபர் 23 புதன் கிழமை
நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.
****
அக்டோபர் 24 வியாழக் கிழமை
இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது
****
அக்டோபர் 25 வெள்ளிக் கிழமை
“க்ஷவரத்துக்குக் கூட இப்படியென்றால், இனிக்கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது.
****
அக்டோபர் 26 சனிக் கிழமை
சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது.
****
அக்டோபர் 27 ஞாயிற்றுக் கிழமை
இந்து மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இகலோகத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது.
****
அக்டோபர் 28 திங்கட் கிழமை
கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி: தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன்.
****
அக்டோபர் 29 செவாய்க் கிழமை
குருவி, காக்கை, புழு, எறும்பு – ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், “ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி” என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும்.
****
அக்டோபர் 30 புதன் கிழமை
பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினாற் கலி இல்லை;
****
அக்டோபர் 31 வியாழக் கிழமை
ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப் பேர் உடனே நொறுக்கி விடுவார்கள். இங்ஙனம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக, மனித ஜாதியில் ஸத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்தேஹம் இல்லை.
—SUBHAM—
Tags- அக்டோபர் 2024, காலண்டர், பாரதியார், கட்டுரைகள், பொன்மொழிகள்