
Post No. 13,726
Date uploaded in London – 30 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -35 யாகந்தி உமாமஹேஸ்வரர் கோவில் -35
கர்னூல் மாவட்டக் கோவில்கள்
யாகந்தி சிவன் கோவில் எங்கே இருக்கிறது ?
ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் , கர்னூல் நகரிலிரிருந்து நூறு கி.மீ தொலைவில் யாகந்தி உமா மஹேஸ்வரர் ஆலயம் உள்ளது கிழக்குத் தொடர்ச்சி மலையின் குன்றுகள் சூழ ஒரு கிராமத்தில் இது இருக்கிறது. பங்கனப்பள்ளியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த ஆலயம் அகஸ்திய மஹரிஷியுடன் தொடர்புடையது. . ஐந்தாம் நூற்றாண்டு முதல் இதன் வரலாறு துவங்குகிறது ஆயினும் இப்போதுள்ள கட்டிடங்கள் 15-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின், சங்கம வம்சத்தின் மன்னரான ஹரிஹர புக்க ராயாரால் கட்டப்பட்டது.
கோவில் வரலாறு
முதலில் அகஸ்திய மகரிஷி இந்த இடத்தில் விஷ்ணுவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப திட்டமிட்டார்.
ஆனால் சிலையில் ஒரு குறை ஏற்பட்டது . எத்தனையோ தடவை முயன்றும் சிலை முழுமை பெறவில்லை. அகத்தியர் சிவனை வேண்டி தவம் செய்ததில் அவரும் தோன்றி இது கையிலை போல உள்ளதால் விஷ்ணுவுக்கு உகந்த இடம் இல்லை என்று கூறவே, முனிவரும் மகேஸ்வரரைத் தன் தேவியுடன் அங்கேயே தங்குமாறு வேண்டினார் . சிவனும் , உமாமகேஸ்வரராக ஒரே கல்லில் ஓருருவாக எழுந்தருளினார். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இக்கோயில் வைஷ்ணவ மரபின் கீழ் கட்டப்பட்டது.
ஒரு பக்தர் கதையும் இங்கே பிரசித்தமாகியிருக்கிறது.
சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர், இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனே என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். ‘நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அதுதான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது.
ஆந்திரத்தில் புகழ்பெற்ற வீரபிரம்மேந்திர ஸ்வாமி, இங்குள்ள குகையில் சில காலம் தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றினார்.
சிறப்புகள் என்ன ?
ஒரே கல்லில் உமா மஹேஸ்வரர் காட்சி தருகின்றனர். இது அர்த்த நாரீஸ்வர வடிவம் ஆகும்
‘புஷ்கரணி’ என்னும் சிறிய குளம் உள்ளது. நந்தியின் வாய் வழியாக விழும் நீர், வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது.
ஆகாச தீபம்
கோவிலுக்குப் பின்புறமுள்ள பாறை உச்சியில் தினமும் ஆகாச தீபம் ஏற்றப்படுவது இன்னும் ஒரு சிறப்பு அம்சமாகும். இரண்டு மீட்டர் நீளமுள்ள திரியும் நாலு நான்கு லிட்டர் எண்ணெயும் நாள்தோறும் தேவைப்படுகிறது!
தூண்களிலிலும் குளத்தின் சுவர்களிலும் புராண இதிஹாஸக் காட்சிகள் இருக்கின்றன.
விழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் இங்கு மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது,

மூன்று குகைகள்
கோவிலைச் சுற்றியுள்ள குன்றுகளில் அகஸ்தியர் குகை , வீர பிரம்மேந்திர சுவாமி குகை, வெங்கடேஸ்வரர் குகை என்று மூன்று குகைகள் இருக்கின்றன. செங்குத்தான படிகளில் எறிச் செல்ல முடிந்தவர்கள் மேலே செல்லலாம் .
வளரும் நந்தி !
இங்குள்ள நந்தியும் வளர்ந்து வருவதால் இந்த இடம் மேலும் பிரபலமடைந்துவிட்டது. சில வகைப் பாறைகள் காலப்போக்கில் பெரிதாகும் தன்மை படைத்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால் நந்தி வளருவது உண்மைதான்

—subham—
Tags- ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற, கோவில்கள் -35, யாகந்தி உமா மஹேஸ்வரர் கோவில், வீர பிரம்மேந்திர சுவாமி, Yaganti temple