யோகா வரம்! (Post No.13,777)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.777

Date uploaded in London – 14 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செப்டம்பர் 2024 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை 

யோகா  வரம்! 

ச.நாகராஜன் 

அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் ஒருவர் குடும்ப உறுப்பினராகவே இருந்தாலும், குழந்தை சொந்தக் குழந்தையாகவே இருந்தாலும் கை நீட்டி அடிக்கக் கூடாது.

விவரம் அறிந்த சிறுவனாக இருந்தால் தானாகவே போலீஸை போனில் அழைத்து தன்னை தாயாரோ தந்தையோ அல்லது உறவினரோ அடித்ததைக் கூறினால் போலீஸ் சில நிமிடங்களில் விரைந்து அங்கு வந்து விடும். பிறகென்ன? விசாரணை தான்! யாராயிருந்தாலும் தப்பிப்பது பிரம்மப் பிரயத்தனம் ஆகி விடும்.

இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கம் இது.

இதே போல ஒரு கேஸ் தான் 2004-ல் நடந்தது.

சுவையான கேஸின் விவரம் இது தான்.

ஜேம்ஸ் லீ க்ராஸ் (James Lee Cross) என்ற ஒரு கார் சேல்ஸ்மேன் டெக்ஸாஸில் ஹாரிஸ் கவுண்டியில் டாம்பால் என்ற இடத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வயது 53.

ஒரு புத்தாண்டு தினத்தன்று கணவனுக்கும் மனைவிக்கும் வாய்த் தகராறு ஆரம்பித்தது. விவாதம் சிறிது நேரத்தில் பெரிதாக ஆகி விட்டது.

விஷயம் இது தான். தனது மனைவி அதிகமாகக் குடிப்பதை விரும்பாத க்ராஸ், அது போதைப் பழக்கமாக ஆகி விடக்கூடும் என்று பயந்தார். மனைவி கேட்பதாயில்லை. கோபம் தலைக்கு மேல் ஏறி விட்டது க்ராஸுக்கு.

விட்டார் ஒரு அறை பளாரென்று மனைவி மீது.

தன் மனைவி நல்ல விதமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையினால் வந்த கோபத்தால் ஏற்பட்டது இந்த அடி!

தன் மேல் கை பட்டு விட்டால் மனைவியால் சும்மா இருக்க முடியாது.

போலீஸ் வந்தது. வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு லாரி ஸ்டாண்ட்லி (Larry Standley, Judge, Country Criminacal court ) என்ற கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.

விநோதமான இந்த வழக்கில் கணவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்று அமெரிக்காவே ஆவலுடன் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது.

கணவன் மனைவி மீது கொண்ட அளவு கடந்த அன்பினால் அவளைக் கண்டித்துத் திருத்தப் பார்த்தான். ஆனால் கோபத்தில் அடித்து விட்டான்.

இதற்கு தண்டனை உண்டா? உண்டு என்றால் என்ன? அனைவர் மனதிலும் இந்தக் கேள்வி எழுந்தது.

நீதிபதி ஸ்டாண்ட்லி ஒரு முன்னாள் பிராஸிக்யூடர். வழக்கை விசாரித்த அவர் க்ராஸ்- ஐ கைது செய்ய வேண்டாம் என்று கூறி விட்டார்.

இது ஒரு விசேஷமான வழக்கு என்று கூறிய அவர் தனது தீர்ப்பை வாசித்தார். அமெரிக்காவே அதைப் பாராட்டியது.

தீர்ப்பு என்ன? இது கோபத்தை நிர்வகிக்கும் நிர்வாகத்திறமை சம்பந்தப்பட்ட விஷயம். ஆகவே க்ராஸுக்கு ஒரு வருட காலம் யோகா பயிற்சி பெற வேண்டும் என்று தீர்ப்பை வழங்குகிறேன் என்றார்.

அமெரிக்கா முழுவதும் யோகா நன்கு பரவி இருக்கிறது. நீதிபதி “ஹிந்துக்களின் யோகா பயிற்சி ஹிந்து தத்துவம் மட்டுமல்ல, அது ஆரோக்கியத்தைத் தரும் ஒன்று “என்றார். இங்கு கணவன் தன் மனைவியை நல்ல விதமாக தன்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்றே விருப்பப்பட்டார். அவருக்குத் தேவையானது கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு நிர்வாகத் திறமை தான். யோகா இதைக் கற்றுத் தரும். யோகா பயிற்சி செய்பவர்கள் தானாகவே அமைதியாக ஆகி விடுவார்கள்” என்றார் அவர்.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டு ஆச்சரியப்பட்ட க்ராஸ், “எனக்கு யோகா பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் எல்லோரும் கூறுவதைப் பார்த்தால் என்னை மனதளவில் அமைதியாக ஆக்குவதோடு எனது எடையையும் கூடக் குறைத்து விடும் என்பதை அறிந்து கொண்டேன்” என்றார்.

ஒக்ஸ் நதி அருகே ஹூஸ்டனில் உள்ள யோகா பயிற்சி மையத்தைச் சேர்ந்த டார்லா மேகி, க்ராஸை அடிப்படை யோகா பயிற்சியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

“இதில் மூச்சைக் கட்டுப்படுத்துவது,  ஆசனங்கள், உடலை முன்னாலும் பின்னாலும் வளைப்பது உள்ளிட்ட உடல் பயிற்சிகள் கற்றுத் தரப்படும். இந்தப் பயிற்சி மூலம் (மோசமான) உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படும். அது மட்டுமல்ல, அது ஆன்மீக சுத்தத்தையும் ஏற்படுத்தும். “ என்றார் அவர்.

க்ராஸ் அவ்வப்பொழுது தனது முன்னேற்றம் பற்றித் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் முத்தாய்ப்பாகக் கூறினார்.

வழக்கின் தீர்ப்பைக் கவனித்த லிங்கன் குட்வின் என்ற பிராஸிகியூடர்,

“இது நல்ல தீர்ப்பு தான். இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஜெயில் தண்டனை இல்லை. க்ராஸுக்கு ஒரு குற்றப் பின்னணியுமே இல்லை” என்றார்.

அவர் மட்டுமல்ல, அமெரிக்காவே இந்த அதிசயமான நல்ல தீர்ப்பை ஏற்று நீதிபதியைப் பாராட்டியது! க்ராஸுக்குக் கிடைத்தது தண்டனை அல்ல, யோகக்காரரான அவருக்குக் கிடைத்த வரம் அது என்றனர் அனைவரும்!

இதே போல மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு வழக்கில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள காந்தி மியூஸியத்தில் குறிப்பிட்ட காலம் சேவை செய்யுமாறு நீதிபதி, தனது தீர்ப்பைக் கூறினார்.

அனைவரும் இதை வரவேற்றனர்.

யோகாவினால் ஏராளமான பயன்கள் உண்டு.

ஆனால் அதைச் சுருக்கமாக ஒரே வரியில் கூறுங்கள் என்றால் இப்படிக் கூறலாம்:

யோகாவினால் மன நலம், உடல் நலம், இன நலம் ஏற்படும்.

***

Leave a comment

Leave a comment