விநாயகர் மீது 1 முதல் 8 வரை உள்ள எண்கள் அமையப் பாடிய பாடல்! (Post.13,780)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.780

Date uploaded in London – 15 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 தனிப்பாடல் தமிழின்பம் 

திருப்பரங்கிரி கற்பக விநாயகர் மீது ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்கள் அமையப் பாடிய பாடல்!

                                    ச. நாகராஜன் 

இராமச்சந்திர கவிராயர் தலை சிறந்த தமிழ் கவிஞர்களுள் ஒருவர்.

அவர் திருப்பரங்கிரிக்குச் சென்று கற்பக விநாயகரை தரிசித்தார்.

உடனே ஒரு பாடலை இயற்றிப் பாடினார்.

அது அபூர்வமான ஒரு பாடலாக அமைந்தது.

பாடல் இது தான்:-

வஞ்சகத்தி லொன்றானை துதிக்கைமிகத்

             திரண்டானை வணங்காருள்ளே

அஞ்சரண மூன்றானை மறைமொழிநால்

              வாயானை யத்தனாகித்

துஞ்சவுணர்ந்த தஞ்சானைச் சென்னியணி

               யாறானைத் துகளேழானைச்

செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ்

               கற்பகத்தைச் சிந்தை செய்வாம்

இந்தப் பாடலில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் எண்கள் என்ற அர்த்தம் அமையாது வேறு அர்த்தங்கள் பொருத்தமாக அமைந்துள்ளன.

பாடலின் பொருளைக் காண்போம்:

வஞ்சகத்தில் ஒன்றானை – கபட மனத்தில் பொருந்தாதவனை (இங்கு ஒன்று என்ற எண் வருகிறது)

துதிக்கை மிகத் திரண்டானை – துதிக்கை மிகவும் திரண்டிருப்பவனை

(இங்கு இரண்டு என்ற எண் வருகிறது)

வணங்கார் உள்ளே – தொழாதவர்களுடைய மனதில்

அஞ்சரண மூன்றானை – அம் சரணம் ஊன்றானை – அழகிய திருவடியைப் பதியாதவனை (இங்கு மூன்று என்ற எண் வருகிறது)

மறைபொழி நால்வாயானை – வேதங்களைச் சொரியா நின்ற தொங்குகின்ற வாயை உடையவனை – (இங்கு நான்கு என்ற எண் வருகிறது)

அத்தன் ஆகி – கடவுளாகி

துஞ்சு அவுணர்க்கு அஞ்சானை – நிலை பெற்ற அவுணர்களுக்கு அஞ்சாதவனை (இங்கு அஞ்சு (ஐந்து) என்ற எண் வருகிறது)

சென்னி அணி ஆறானை – சிரசில் அணிந்த நதியை உடையவனை (இங்கு ஆறு என்ற எண் வருகிறது)

துகள் ஏழானை – குற்றம் உண்டாகாதவனை (இங்கு ஏழு என்ற எண் வருகிறது)

செம்சொல்மறைக்கு எட்டானை – செவ்விய சொற்களை உடைய வேதங்களுக்கும் எட்டாதவனை (இங்கு எட்டு என்ற எண் வருகிறது)

பரங்கிரிவாழ் கற்பகத்தை – திருப்பரங்கிரியில் வாழ்கின்ற கற்பக விநாயகரை

சிந்தை செய்வாம் – சிந்திப்போமாக!

அழகுற ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்கள் வந்தாலும் அர்த்தங்கள் பொருத்தமான விதத்தில் இந்தப் பாடலில் அமைந்திருப்பதைக் காணலாம்.

தமிழுக்குரிய தனிச் சிறப்பைக் கையாண்ட புலவர்களின் திறமையே திறமை!

**

Leave a comment

Leave a comment