அர்ஜுனன்! – 1 (Post No.13,783)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.783

Date uploaded in London – 16 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹாபாரத மர்மம்

அர்ஜுனன்! – 1 

ச. நாகராஜன்

அர்ஜுனனின் சகல குணாதிசயங்களையும் பற்றிய விவரங்களை ஒரே இடத்தில் மஹாபாரதத்தில் பார்க்க முடியாது.

ஒரே பாத்திரத்தின் வாயிலாகவும் பார்க்க முடியாது.

பல்வேறு உவமைகள் அர்ஜுனனைப் பற்றி உண்டு. அவனது குணாதிசயங்களை ஆங்காங்கே நாம் காணலாம்.

அர்ஜுனனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து பிரமிக்க வைக்கும் பெரும் வாழ்வியல் நீதிகளை வியாஸர் நமக்கு உணர்த்துகிறார்.

ஆக, ஒரு வாழ்நாள் முழுதும் கற்க வேண்டிய பாத்திரமாக அர்ஜுனன் அமைகிறான்.

அர்ஜுனனைப் பற்றிச் சில பர்வங்களீல் வரும் ஸ்லோகங்களையும் அவற்றின் அர்த்தத்தையும் கீழே பார்க்கலாம்.

அர்ஜுனனைப் பற்றி சபையோர் பேசிக் கொள்வது

ஆதி பர்வம்

ஸ்வயம்வர பர்வம் (203வது அத்தியாயம்)

ஸ்வயம்வர மண்டபத்தில் வில்லை நாணேற்ற எழுந்த அர்ஜுனனைப் பார்த்து அங்குள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அர்ஜுனனைப் பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

யௌவன வயதில் இருப்பவன்.

அழகுள்ளவன்.

மகா கஜத்தின் துதிக்கை போன்ற கைகளை உடையவன்.

பருத்த தோள்களும் தொடைகளும் புஜங்களும் உடையவன்.

தைரியத்தில் இமயமலை போன்றவன்.

சிம்மம் போலக் கம்பீரமான நடை உள்ளவன்.

மதயானையைப் போல நடக்கின்றவன்.

ஒளி உள்ளவன்.

இவனிடத்தில் இந்தக் காரியத்தில் திறமை எதிர்பார்க்கக்கூடியதே!

இவனுடைய உற்சாகத்தினாலும் ஊகிக்கத் தகுதி இருக்கிறது.

இவனுடைய சக்தி தான் பெரிய உற்சாகத்தைத் தருவது.

அசக்தன் தானே செல்லான்; மேலும் பிராமணர்களுக்கு அசாத்தியமான செயல் ஒன்றும் எந்த லோகங்களிலும் சரீரத்தோடு சஞ்சரிக்கும் எந்தப் புருஷர்களிடத்திலும் இருப்பதில்லை.

வில்லில் வீரன் அர்ஜுனன்!

முதலில் அர்ஜுனன் தனுஸை வலம் வந்தான். பின்னர் வரத்தைக் கொடுக்கும் தேவதையாகிய ஈஸ்வரனுக்குத் தலை வணங்கி கிருஷ்ணனை மனதில் நினைத்துக் கொண்டு வில்லை எடுத்தான்.

அதை ஒரு நொடியில் நாணேற்றினான்.

தனுர்வேதத்தில் சிறந்தவர்களான ருக்மன், ஸுநீதன், வக்ரன், கர்ணன், துரியோதனன், சல்லியன், ஸால்வன் ஆகியவர்களால் முதலில் மிகுந்த முயற்சி செய்தும் எந்த வில் நாணேற்றிட முடியாமல் போனதோ அந்த வில்லை அர்ஜுனன் ஒரு நொடியில் நாணேற்றினான்.

ஐந்து பாணங்களை எடுத்து லக்ஷியத்தையும் அடித்தான்.

இந்திரனுக்கு ஒப்பான அர்ஜுனனைப் பார்த்து திரௌபதி வெண்மையான உயர்ந்த புஷ்பமாலையை எடுத்துக் கொண்டு புன்னகையுடன் அர்ஜுனனிடம் சென்றாள். அவனது மார்பில் மாலையை அணிவித்தாள்.

அர்ஜுனனின் ஆத்மாவே ஶ்ரீ க்ருஷ்ணர்! ஶ்ரீ கிருஷ்ணரின் ஆத்மாவே அர்ஜுனன்!

அர்ஜுனனுக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் இடையே உள்ள தொடர்பானது பல்வேறு இடங்களில் பல்வேறு பாத்திரங்களின் வாயிலாகவும் வியாஸரின் வாய்மொழியாகவும் மஹாபாரதத்தில் வரிசையாக சொல்லப்படுவதைக் காணலாம்.

சபா பர்வத்தில் வரும் வாக்கியம் இது:

ஆத்மா ஹி க்ருஷ்ண: பார்தஸ்ய க்ருஷ்ண்ஸ்யாத்மா தனஞ்ஜய: |

                                              சபா பர்வம் 52 – 31 

ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் ஆத்மா; ஶ்ரீ கிருஷ்ணரின் ஆத்மாவே அர்ஜுனன்.

யத் ப்ரூயாதர்ஜுன: க்ருஷ்ண சர்வம் குர்யாதசம்சயம் |

க்ருஷ்ணோ தனஞ்ஜயஸ்யார்தே ஸ்வர்கலோகமபி த்யஜேத் ||

சபா பர்வம் 52 – 32 

அர்ஜுனன் ஶ்ரீ கிருஷ்ணரிடம் எதைச் சொல்கிறானோ அதை கிருஷ்ணர் நிச்சயம் பூர்த்தி செய்வார். ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்காக ஸ்வர்க்கத்தைக் கூட விட்டு விடுவார்.

ததைவ பார்த: க்ருஷ்ணார்தே ப்ராணாநபி பரித்யஜேத் |

சபா பர்வம் 52 – 33 

இதே போல ஶ்ரீ கிருஷ்ணருக்காக அர்ஜுனனும் தன் உயிரைக் கூட தியாகம் செய்வான்.

 ***

Leave a comment

Leave a comment