WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.786
Date uploaded in London – —17 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாலைமலர் 25-9-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
ச. நாகராஜன்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்த ஒருவர் யார்? மார்கோனி வானொலியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அதைக் கண்டுபிடித்தவர் யார்?
அவர் தான் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்
பிறப்பும் இளமையும்
இன்றைய பங்களாதேஷில் இருக்கும் டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் ஜகதீஷ் சந்திர போஸ் 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி பிறந்தார்.
தந்தையார் பகவான் சந்திர போஸ் பிரிட்டிஷ் இந்தியாவில் அரசாங்க உயர் அதிகாரியாகப் பணி புரிந்தார். ஆனால் தேசப்பற்று மிகுந்தவர். தனது மகனை சாதாரண ஏழை எளிய மக்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்தார். தந்தையின் வழிகாட்டுதலுக்கு இணங்க அனைவருடனும் எளிமையாகப் பழகிய ஜகதீஷ், படிப்பில் சூரனாக விளங்கினார். மிகுந்த தேசப்பற்றுடன் வளர்ந்தார். போஸின் தாயாரோ இந்தியப் பெண்மணிக்குரிய இலக்கணத்துடன் வாழ்ந்தவர். தன் மகனுக்கு நல்ல நற்பண்புகளைக் கற்பித்தார்.
இராமாயண மஹாபாரதத்தை நன்கு அறிந்து கொண்ட ஜகதீஷுக்கு இராமாயணத்தில் ராமர் மற்றும் லட்சுமணன் பாத்திரமும் மஹாபாரதத்தில் கர்ணன் பாத்திரமும் மிகவும் பிடித்த பாத்திரமானது.
பள்ளிப்படிப்பு
ஆரம்பக் கல்வியை தூய சேவியர் உயர் நிலைப்பள்ளியில் முடித்துக் கொண்ட ஜகதீஷ் கல்கத்தா சென்று கல்வியைத் தொடர்ந்தார்.
கல்கத்தாவில் ஒரு மிஷனரி பள்ளியில் அவர் சேர்ந்து படித்த போது அங்கிருந்த ஆங்கில மற்றும் ஆங்கிலோ இந்திய மாணவர்கள் அவரது எளிமையையும் நாட்டுப்புற பின்னணியையும் கண்டு கேலி செய்ய ஆரம்பித்தனர். அந்த மாணவர்களுள் குத்துச் சண்டை தெரிந்த ஒருவன் அடிக்கடி அவரைக் குத்தி வம்புக்கு இழுப்பது வழக்கம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய போஸ் ஒரு நாள் அவன் சண்டைக்கு வந்த போது அவனை அடித்து நொறுக்கி விட்டார். அன்றிலிருந்து அவர் மதிப்பு பள்ளியில் உயர்ந்தது.
கல்கத்தாவில் 19-ம் வயதிலேயே பட்டத்தைப் பெற்ற பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.
கல்லூரியில் ஆசிரியர்
லண்டனில் தன் மேல் படிப்பை முடித்து விட்டு கல்கத்தாவிற்குத் திரும்பி வந்த போஸ் 1885-ம் ஆண்டு பிரஸிடென்ஸி காலேஜில் பேராசிரியராகப் பணி புரியச் சேர்ந்தார். ஆனால் அவரது சம்பளமோ மற்ற ஐரோப்பிய பேராசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்காக நிர்ணயிக்கப்பட்டது. அத்தோடு புதியவர் என்பதால் அந்த சம்பளத்திலிருந்தும் இன்னும் கொஞ்சம் குறைக்கப்பட்டது. இதனால் வெகுண்ட போஸ் அந்த சம்பளத்தை ஏற்கவில்லை.ஆனாலும் பணியை விடாது தொடர்ந்து செய்து வந்தார். மாதாமாதம் சம்பளம் வாங்காமல் அவர் பணி புரிந்தது மூன்று வருடம் வரை தொடர்ந்தது. இறுதியில் தங்கள் தவறை உணர்ந்த நிர்வாகத்தினர் ஒரு விசேஷ ஆர்டரை மாண்புமிகு ஹிஸ் மெஜஸ்டிக் அரசின் வாயிலாகப் பிறப்பித்தனர். இதன் மூலம் மூன்று ஆண்டுக்கான முழு சம்பளத்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.
கல்லூரியில் வேலை பார்க்கும் போதே பல்வேறு துறைகளிலும் தன் ஆராய்ச்சியை அவர் தொடங்கலானார்.
தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி
தாவரங்கள் மிருகங்களைப் போலவே வலியை உணரும் தன்மை படைத்தவை என்பது போஸின் முடிவு. பல்வேறு சோதனைகள் மூலமாக இதைக் கண்டறிந்த போஸ் உலகிற்கு இதைக் காண்பிக்கத் துடித்தார்.
தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிரூபிக்கத் துடித்த பிரிட்டிஷார் அவரை அங்கீகரிக்கவே இல்லை என்பது ஒரு புறமிருக்க அவரை அவமானப்படுத்தினர்; தொல்லை கொடுத்தனர்.
சகோதரி நிவேதிதா தேவியின் உதவி
இதிலிருந்தெல்லாம் அவர் மீண்டு வர உத்வேகமூட்டியவர் சகோதரி நிவேதிதை என்பது பலருக்கும் தெரியாது.
மார்கரெட் எலிஜபத் நோபிள் 1867ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று வட அயர்லாந்தில் ஒரு ஸ்காட் குடும்பத்தில் பிறந்தார். 1895ஆம் ஆண்டில் அவரது 28ஆம் வயதில் ஸ்வாமி விவேகானந்தரை அவர் சந்தித்தார்; அதிலிருந்து அவர் வாழ்க்கைப் போக்கே மாறிப் போனது. 1898ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் இந்தியா வந்தார். அவருக்கு நிவேதிதை என்ற புதிய பெயரை ஸ்வாமி விவேகானந்தர் சூட்டினார்.
ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை நிவேதிதா தேவி ஆரம்பத்திலேயே நன்கு உணர்ந்து கொண்டார்.
ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளிலேயே ஜகதீஷ் சந்திர போஸ் ரேடியோ டிரான்ஸ்மிஷன் பற்றிய அரிய கண்டுபிடிப்பைக் கண்டார். அத்துடன் தாவரங்கள் வலியை உணரும் சக்தி கொண்டவை என்று அவர் கூறிய போது யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை.
ஆனால் நிவேதிதை அவரிடமிருந்த அபாரமான அறிவியல் அறிவை நன்கு கண்டு கொண்டு அவரை ஊக்குவித்ததோடு, அவருக்கு பண உதவியும் தங்க இடமும் கூடத் தந்தார்.
1899ஆம் ஆண்டில் பாரிஸில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்த போது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார்.
போஸும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900ஆம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயிலிருந்து குணமடையும் வரை செய்தார்.
இங்கிலாந்தில் இந்தியர்களை மதிக்காத ஒரு பெரும் ராட்சஸ பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் மோத வேண்டி இருப்பதை உணர்ந்த போஸ் மிகவும் மனம் நொந்து போனார்
இப்படி மனம் நொந்திருந்த போஸின் மன நிலையை நன்கு அறிந்து கொண்டு நிவேதிதை, ஆய்வு லாபரட்டரியை அமைக்க அவருக்கு உதவி செய்தார். பிரபல வயலின் மேதை ஓல் புல் -இன் மனைவியும் விவேகானந்தரின் சிஷ்யையுமான சாரா சாப்மன் புல் தந்த நன்கொடை மூலம் இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டது. நிவேதிதா போஸை விட ஒன்பது வயது சிறியவர். என்றாலும் கூட 1911இல் அவர் இறக்கும் வரை போஸுக்கு உதவத் தவறவில்லை.
**