ஜகதீஷ் சந்திர போஸ்! – 2 (Post No.13,790)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.790

Date uploaded in London – –18 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 25-9-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

ஜகதீஷ் சந்திர போஸ்! – 2

ச. நாகராஜன்

தாகூருக்கு கடிதம்

ரவீந்திர நாத் தாகூர் ஜகதீஷ் சந்திர போஸை மிகவும் போற்றினார்.

லண்டனிலிருந்து 1900ஆம் ஆண்டு லண்டனிலிருந்து போஸ் தனது மன வேதனையை ரவீந்திர நாத் தாகூருக்கு ஒரு கடிதம் மூலமாகத் தெரிவித்தார்,இப்படி : “நீங்கள் நான் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களை அறிய மாட்டீர்கள். உங்களால் கற்பனையே செய்ய  முடியாது. ‘தாவர உணர்வு’ பற்றிய எனது கட்டுரையை சென்ற மே மாதம் ராயல் சொஸைடியில் வெளியிடப்படுவதை வாலர் மற்றும் சாண்டர்ஸன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் வாலர் அதைத் தனது பெயரில் நவம்பர் மாதம் வெளியிட்டுக் கொண்டார். எனக்கு இத்தன நாள் வரை அது தெரியாமலேயே இருந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். பாரதபூமியின் தூசியைத் தொட்டு வாழ்க்கையின் உற்சாகத்தை மீண்டும் பெற இப்போது இந்தியா வர விரும்புகிறேன்.”

க்ரஸ்கோகிராப் கருவி

தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதைக் காட்ட க்ரஸ்கோகிராப் (Crescograph) என்ற கருவியை அவர் வடிவமைத்தார். தாவரத்தின் வளர்ச்சியை மிக நுட்பமாக, நுணுக்கமாக இது காட்டும். அதாவது ஒரு லட்சத்தில் ஒரு பங்கு என்ற அளவிற்கு மிக நுண்ணிய அளவில் தாவரத்தின் வளர்ச்சியை இது காட்டியதால் உலகமே வியந்து அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. அவரது கருவி  தாவரம் அசையும் போது அதுவும் அசைந்து துல்லியமாக தாவர இயக்கத்தைக் காட்டியது.

இந்திய துணைக்கண்டத்திலிருந்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக முதன் முதலாக ஒரு பேடண்டைப் பெற்றவர் அவரே. பிரபல விஞ்ஞானிகளான டெஸ்லா, மார்கோனி, போபாவ் ஆகியோர்களுக்குச் சமமாக இந்த சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார். எவ்வளவோ பேர் தடுத்தும் கூட அவர் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920இல் ராயல் சொஸைடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் அறிவியலில் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

சதியை முறித்த போஸ்

ஒரு முறை ‘லெக்சர் டூர்’ ஒன்றுக்காக அவர் இங்கிலாந்து சென்றிருந்தார். அவரது கண்டுபிடிப்புகளை நேரடியாகக் காண்பித்து விளக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாவரங்களைப் பிடுங்கும் போது வலியால் அவை துடிக்கின்றன என்பதையும் விஷம் கொடுக்கப்பட்டால் அவை துடிதுடித்து இறக்கின்றன என்பதையும் அவர் நேரில் காட்ட விழைந்தார்.

ஏராளமான விஞ்ஞானிகளும் பெண்கள் பலர் உள்ளிட்ட பிரபலமானவர்களும் குழுமி விட்டனர். போஸ் விஷம் அடங்கிய ஊசியை எடுத்து தாவரத்தின் மீது இஞ்ஜெக்ட் செய்தார். தாவரம் துடிதுடிக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. இதைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். போஸோ தன் நிதானத்தை இழக்கவில்லை. யோசிக்க ஆரம்பித்தார். இந்த விஷம் தாவரத்தை ஒன்றும் செய்யவில்லை எனில் என்னையும் ஒன்றும் செய்யாது என்ற முடிவுக்கு வந்த அவர் அதே விஷத்தைத் தன் மீது ஏற்றுமாறு கூறினார்.

இஞ்செக் ஷன் ஊசி எடுக்கப்பட்ட போது அங்கு வந்திருந்தோரில் ஒருவன் தான் விஷத்திற்குப் பதில் அதே நிறத்தில் உள்ள சாயத் தண்ணிரை வைத்து விட்டதாக ஒப்புக் கொண்டான். போஸ் நிஜமான விஷத்தை எடுத்து தாவரத்தின் மீது செலுத்த அது துடி துடித்து இறந்தது. அனைவரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

     தன்னையே சோதனைக்குட்படுத்திக் கொள்ளவும் தயங்காத மேதை ஜகதீஷ் சந்திர போஸ்!

பெர்னார்ட்ஷாவின் ஆச்சரியம்!

எதையும் நேரில் பார்க்க ஆசைப்படும் பெர்னார்ட் ஷா ஒரு முறை அவரது சோதனையைப் பார்க்க வந்தார். ப்ரோமைட் கரைசலில் முட்டைகோஸ் இலையைப் போடும் போது அந்த விஷக் கரைசலில் அது துடிதுடிக்க ஆரம்பித்ததைப் பார்த்த பெர்னார்ட் ஷா அந்த பயங்கரத்தைப் பார்க்க முடியாமல் வேதனைப் பட்டார்; சோதனையை எண்ணி ஆச்சரியப்பட்டார்.

அறிவியல் புனைகதைகளில் ஆர்வம்

மிகப் பெரிய விஞ்ஞானியாக இருந்த போதிலும் கூட ஸயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் அறிவியல் புனைகதைகளை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. வங்காள மொழியில் அவர் எழுதிய ‘போலடாக் தூஃபான்’ என்ற  அவரது பிரபலமான கதை எப்படி ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலைக்குத் தடவிக் கொள்ளும் எண்ணெய் ஒரு சூறாவளியைத் தடுத்து நிறுத்தியது என்பதை சுவைபடச் சொல்கிறது. எண்ணெயானது புறப்பரப்பு விசையை   (Surface tension) மாற்றி நீரைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பது தான் கதையின் அடிப்படையான கரு. ‘நிருத்தேஷர் கஹானி’ என்ற அவரது நாவல் தான் முதன் முதலாக வங்க மொழியில் எழுதப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவல்!

குடும்பம்

1887-ல் அவர் அபலா (பிறப்பு 8-8-1865 மறைவு 25-4-1951) என்பவரை மணந்தார். அபலா போஸ் சிறந்த சமூக சேவகி. பெண் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.

மறைவு

1937-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி போஸ் மறைந்தார்.

அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்

தன் வாழ்நாள் முழுவதும் பல அரிய கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே வந்தார் போஸ்.

அவற்றில் சில:

மனமே ஒரு சோதனைச்சாலை. அதில் மறைத்திருக்கும் மாயையை விலக்கிவிட்டால் சத்தியத்தின் விதிகளைக் காணலாம்.

எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே. எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்திய விஞ்ஞானி!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு; அனைத்து உயிர்களையும் நேசியுங்கள் என்ற பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்தியவர் என்ற அள்வில் அபூர்வமான உன்னத அறிவியல் அறிஞராகிறார் போஸ்!

**

tags- J C BOSE

Leave a comment

Leave a comment