Post No. 13,794
Date uploaded in London – 19 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உண்டவல்லி குகைக் கோவில்கள்- 40 (Post.13,794)
ஆந்திர பிரதேசத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்– பகுதி 40
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் உண்டவல்லி. இங்கு கி.பி.4 முதல் 5- ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன. இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறவில்லை .
இந்த குகைக்கோவில்கள் ஒரு அற்புத செதுக்கல் ஆகும்; முழுதும் செதுக்கி முடித்திருந்தால் எல்லோரா, அஜந்தா, பாதாமி போல உலகப் புகழ் பெற்றிருக்கும். விஜயவாடா நகருக்கு மிக அருகில் இருப்பதால் சென்று வருவதும் எளிது.
முதலாம் தளம்
அடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் யாவும் திருமாலைப் பற்றியன. இங்கு நான்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மேல் கூரையைத் தாங்கி நிற்கின்றன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு வாயில்களைக் கொண்டுள்ளது.
இரண்டாம் தளம்
இரண்டாம் தளம் 9 மீ. அகலமும், ஏறக்குறைய 17 மீ. நீளமும் உள்ள மண்டபத்தையும், தென்முனையில் 4 மீ. சதுரமான சிறிய அறையையும், வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு அனந்தசயனரின் பெரிய சிலை ஒன்று உள்ளது. நடுமண்டபத்தில் நான்கு வரிசையில் தூண்கள் உள்ளன. இத்தூண்கள் பல்லவர் காலத் தூண்களின் அமைப்பை ஒத்துள்ளன. இங்கு சைவ சிற்பங்கள் சிலவும் காணப்படுகின்றன. எனவே, சைவர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கியிருக்க வேண்டும்.
மூன்றாம் தளம்
மூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப்பெறவில்லை.
விஜயவாடா நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் இந்த உன்டவலி குகைகள் அமைந்துள்ளன. மணற்பாறாங்கற்களில் இந்த குடைவறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மஹா விஷ்ணுவின் சிலை காணப்படுகிறது. இந்த சிலை ஒற்றை பளிங்கு கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இரண்டாம் தளத்தில் அனந்த சயனப் பெருமாளின பிரமாண்டமான சிலை 7 தலை நாகம் குடைப்பிடிக்க சயனக் கோலத்தில் உள்ளது. விஷ்ணுவின் சிலை இருபது அடிக்கும் மேலான நீளம் கொண்டது.சுவற்றில் தாமரை மலரில் அமர்ந்த பிரம்மாவைக் காணலாம். ஆங்காங்கே இந்துக் கடவுள்களின் சிலைகளையும் வடித்துள்ளனர். முதல் அடுக்கில் கணேசர் சிலை இருக்கிறது.
மூன்றாவது அடுக்கில் சிற்பங்கள் இல்லாவிடினும் அங்கிருந்து பாரத்தால் அந்த வட்டாரத்தின் மனோரம்மியமான காட்சி கிடைக்கும்
உண்டவல்லிக் குகைகளின் நுழைவாயில்களில் சிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன; உள்ளே சுவர்களின் மாட ங்களில் யானைகளை செதுக்கியுள்ளனர்.
சூரிய அஸ்தமனமும் மனதில் நீங்காத நினைவுகளை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் அனுமதியும் நிறுத்தப்படும்.
குடைவரைகளில் இதர கடவுள்களின் சிலைகளும் காணப்படுகின்றன. புத்த மடாலயங்கள் போன்றும் இவை உள்ளன. மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த குடைவரைகளை பௌத்த மதகுருக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
ஒரு மணி நேரத்துக்குள் அனைத்தையும் பார்த்து முடித்துவிடலாம்.
****
ஏனைய குகைக்கோவில்கள்
விஜயவாடா நகரம் ஒரு காலத்தில் விஷ்ணுகுண்டின அரச வம்சத்தின் தலைநகராக இருந்தது. கனக துர்கா கோவிலுக்குப் போகும் பாதையில் இரண்டு அடுக்கு குடைவரை உள்ளது நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குதுப் சாஹி முஸ்லீம் மன்னர்களின் அமைச்சர்களாக இருந்த அக்கண்ணா, மாடண்ணா பெயர்களில் இந்தக் குகைகள் உள்ளன.
சிறிது தூரத்தில் பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகியோர் பேரில் ஒரு குகையும் இருக்கிறது.
குகைகளை வெட்டும் பணிகளை அஜந்தாவில் வாகடக வம்சம் துவக்கியது. அவர்களிடமிருந்து விஷ்ணுகுண்டின வம்சம் அதைக் கற்றது. அந்த வம்சத்தின் முதல் மன்னன் மாதவ சர்மா 1600 ஆண்டுகளுக்கு முன்னர் குடைவரைப் பணிகளைத் துவக்கினர். சிலர் மஹேந்திர வர்மன் காலத்தில் இது துவங்கியதாகவும் சொல்லுவர். இதன் அமைப்பு ஒரிஸ்ஸாவின் உதயகிரியிலுள்ள ராணி கம்பா குகை அமைப்பில் இருப்பதையும் சுட்டிக்காட்டுவார்கள்..
—-SUBHAM—-
TAGS– ஆந்திர பிரதேச, 108 புகழ்பெற்ற, கோவில், பகுதி 40,