WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.793
Date uploaded in London – —19 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மேலாண்மை நீதிக் கதைகள்
சுலபமாக ஒருவரை எடை போட்டு விடாதே!
ச. நாகராஜன்
சுலபமாக ஒருவரை எடை போட்டு விடாதே!
ஒரு அழகிய சிறுமி தன் கையில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள்.
அந்தச் சிறுமியின் அம்மா அவளிடம் வந்து, “எனக்கு இதில் ஒரே ஒரு ஆப்பிளைத் தருகிறாயா?” என்று அன்போடும் ஆசையோடும் கேட்டாள்.
அந்தச் சிறுமி அம்மாவை ஒரு சில விநாடிகள் உற்றுப் பார்த்தாள்.
பின்னர் ஒரு ஆப்பிளை ஒரு கடி கடித்தாள். பின்னர் இன்னொரு ஆப்பிளைப் பார்த்தாள். அதையும் எடுத்து ஒரு கடி கடித்தாள்.
அம்மாவிற்கு மிகவும் ஏமாற்றமாகப் போனது. அவளது முகம் வெளிறிப் போனது. அவ்வளவு தான் குழந்தைக்குத் தன் மீது பாசமா?
அப்போது சிறுமி தன் கையில் இருந்த ஒரு ஆப்பிளை எடுத்து அம்மாவிடம் கொடுத்தது: “அம்மா! இது தான் இந்த இரண்டு ஆப்பிள்களில் மிகவும் இனிமையாக இருக்கிறது. இதை எடுத்துக்கோ” என்றது.
அம்மாவின் கண்களில் நீர் அரும்பியது.
ஒருவரை சடக்கென்று எடை போட்டு விடக் கூடாது! கண்களால் பார்ப்பது சரியான முடிவைத் தராமலும் போகலாம்.
சீக்கிரமாக ஒரு முடிவுக்கு எதிலும் வந்து விடாதீர்கள்.
குழந்தை உங்கள் குழந்தை இல்லையே!
உலகின் ஒரு கோடி அது. அங்கு ஒரு உயரமான மலைப் பகுதியில் மலை மீது உள்ள அடர்ந்த காட்டில் ஒரு இனமும், மலையின் அடிப்பகுதியில் இன்னொரு இனமும் வசித்து வந்தன.
மலை மீது இருக்கும் இனம் திடீர் திடீரென்று தாழ்வான பகுதியில் இருப்பவர் மீது படை எடுக்கும்.
ஒரு நாள் மலை மீதிருந்து படை எடுத்து வந்த அந்த இனத்தவர்கள் தாழ்வான பகுதியிலிருந்து ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.
தாழ்வான பகுதியில் இருப்பவர்களுக்கு மலை மீது ஏறத் தெரியாது.
மிகக் கடினமான சறுக்குப் பாறைகள் கொண்ட மலை என்பதால் அவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்கள்.
எப்படியும் குழந்தையை மீட்பது என்று கங்கணம் கட்டிக் கொண்ட அந்தக் கூட்டம் சிறந்த சில வீரர்களைத் தேர்ந்தெடுத்து மலை மீது ஏறப் பணித்தது.
அவர்களும் முயன்று ஏறினார்கள். ஆனால் சிலர் வழுக்கி விழுந்தனர். சிலரால் முன்னேறவே முடியவில்லை.
பாதியிலேயே முயற்சியைக் கைவிட்டுவிடலாமா என்ற யோசனைக்கு வந்து விட்டனர்.
சரி திரும்பி விடலாம் என்று அவர்கள் யத்தனிக்கையில் அந்தக் குழந்தையின் அம்மா எதிரில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து பிரமித்தனர்.
மலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த அவள் கையில் குழந்தை இருந்தது.
இது எப்படி முடியும்?
அவர்கள் அந்தத் தாயைப் பார்த்து, “ வலிமையான சிறந்த வீரர்கள் நாங்கள். எங்களால் மலை மீது ஏற முடியவில்லையே. எப்படி உன்னால் இது முடிந்தது? குழந்தையை எப்படி மீட்க முடிந்தது” என்று கேட்டனர்.
அதற்கு அந்தத் தாய் பதில் சொன்னாள் :” குழந்தை, உங்கள் குழந்தை இல்லையே!”
நீ நடந்து கொள்வது போலவே உனக்கு நடக்கும்!
ஒரு ப்ரெட் விற்கும் கடைக்காரர் வெண்ணெயை அருகிலிருந்த பண்ணை நிலத்தில் உள்ள விவசாயியிடமிருந்து வாங்குவது வழக்கம்.
ஆனால் வெண்ணெய் ஒரு கிலோ இல்லாமல் இருக்கிறதே என்று அவருக்குச் சந்தேகம் வந்தது. அதை எடை போட்டுப் பார்த்தால் அது குறைந்தே இருந்தது.
அவர் உடனே நியாயம் கேட்டு நீதிபதியிடம் சென்று வழக்கைத் தொடுத்தார்.
நீதிபதி விவசாயியை அழைத்தார். விசாரணை ஆரம்பித்தது.
நீதிபதி :“ நீ வெண்ணெயை நிறுத்துத் தான் தருகிறாயா?”
விவசாயி: ஆமாம், யுவர் ஹானர்!
நீதிபதி: உன்னிடம் தராசு இருக்கிறதா?
விவசாயி : இருக்கிறது.
நீதிபதி : சரியான எடைக்கற்கள் இருக்கிறதா?”
விவசாயி: இல்லை, யுவர் ஹானர்! இந்த ப்ரெட் கடைக்காரர் ஒரு கிலோ என்று தரும் ப்ரெட் தான் எனக்கு எடைக்கல். அதை வைத்தே எடை போட்டு அவருக்கு வெண்ணெயைத் தருகிறேன்.
நீதிபதி வழக்கு முடிந்தது – டிஸ்மிஸ்ட் – என்று வழக்கை முடித்து வைத்து விவசாயியை வீட்டுக்கு அனுப்பினார்.
நீ எதைச் செய்கிறாயோ அதுவே தான் உனக்கும் வரும் என்பது தான் நீதி!
***