Post No. 13.802
Date uploaded in London – —22 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாலைமலர் 16-10-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
உப்பு முதல் உயரப் பறக்கும் விமானம் வரை ரத்தன் டாட்டா செய்த சாதனை! – 2 (Post.13,802)
ச .நாகராஜன்
நாய்களின் மீது பேரன்பு
நாய்களின் மீது பரிவும் பேரன்பும் கொண்டிருந்தார் ரத்தன் டாட்டா. பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலான தாஜ்மஹாலுக்கு வருகை தந்த ஒருவர் அங்கு பிரதான வாயில் அருகே நின்று கொண்டிருந்த தெருநாய் ஒன்றைப் பார்த்து ஆச்சரியம் கொண்டார். “இது ஏன் இங்கு இருக்கிறது?” என்று ஆவல் கொண்டு கேட்ட போது அவருக்குக் கிடைத்த பதில் : “இந்த ஹோட்டல் கட்டும் ஆரம்ப காலத்திலிருந்தே இது இங்கு இருக்கிறது. இதை ஒருவரும் தொந்தரவு செய்யக் கூடாது என்பது டாட்டாவின் உத்தரவு”
2018-ல் டாட்டாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற விருதான வாழ்நாள் விருது ஒன்றை இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் சார்லஸ் அளிக்க முன் வந்து அவரை அழைத்தார். ஆனால் அந்த விருதை வாங்க டாட்டா செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். காரணம் அவரது வளர்ப்பு நாய் ஒன்றிற்கு உடல்நிலை சரியில்லை.
அதைப் பாதுகாப்பதற்காக அவர் விருது பெறும் பயணத்தையே ரத்து செய்தார்.
டாட்டா குழுமத்தின் மும்பை தலைமையகத்தை அழகுற புனருத்தாரணம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அந்தத் திட்டத்தை ரத்தன் டாட்டாவிடம் காட்டிய போது அவர் கேட்ட கேள்வி: “அது சரி, அங்குள்ள நாய்கள் எல்லாம் எங்கே போகும்?” என்பது தான்!
உடனே திட்டமிட்டவர்கள் அதற்கென வசதியான கூண்டுக்ள் அமைக்கப்படும் என்றனர். உடனே டாட்டா, “முதலில் அதன் வடிவமைப்பை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அதைப் பார்த்து மகிழ்ந்த பின்னரே கட்டிடத்தைப் பெரிதாகக் கட்ட அவர் இசைந்தார்.
பெரும் நன்கொடையாளர்
மிகப் பெரிய அளவில் நன்கொடைகளைத் தந்த பெரும் நன்கொடையாளராக அவர் திகழ்ந்தார்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் நிறுவனத்திற்கு அல்ஜெமீர் வியாதியைக் குணமாக்குவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள அவர் 75 கோடி ரூபாய் வழங்கினார். கார்னெல் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவ 235 கோடி ரூபாய் அளித்தார். அத்தோடு 2020-ல் கோவிட்- 19 தொற்று நோய் பரவிய காலத்தில் 500 கோடி ரூபாயை நிவாரண நிதிக்கென அளித்தார். தாஜ் பப்ளிக் சேவை நல அறக்கட்டளை ஒன்றை நிறுவி தாஜ்மஹால் ஹோட்டல் மீது மேற்கொண்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்கானோருக்கு உதவி செய்ய 419 கோடி அளித்தார். இப்படி அவர் அளித்த நன்கொடைகளுக்கு ஒரு கணக்கே இல்லை.
இந்தியாவின் மீது அவர் அபாரமான பற்று கொண்டிருந்தார். இந்தியாவில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் உலகில் வாழும் ஏனைய மக்களுடன் அதே சௌகரியத்துடன் வாழவில்லையே என்று அவர் கவலை கொண்டார். அதனால் அவர்கள் சொந்தமாக கார் ஒன்றை வாங்கிப் பயணிப்பதற்காக ஒரு லட்ச ரூபாயில் டாட்டா நேனோ என்ற கார் திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக அமுல்படுத்தினார்.
திருமணம்
வாழ்நாளில் திருமணம் என்ற எண்ணத்திற்கே அவர் இடம் வைக்கவில்லை. பிற்காலத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நான்கு முறை திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தன என்றும் ஏதொ ஒரு காரணத்திற்காக அது தனக்கு ஒத்துவரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விருதுகள்
வாழ்நாள் முழுவதும் அவரைத் தேடி விருதுகள் வந்து குவிந்தன. 2000-ம் ஆண்டில் இந்தியாவின் ஐம்பதாவது குடியரசு தினத்தில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
2008-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
2007-ம் ஆண்டில் ஃபார்சூன் இதழ் வெளியிட்ட உலகின் ஆற்றல் மிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் டாட்டா இடம் பெற்றார். 2008-ம் ஆண்டில் உலகின் புகழ் பெற்ற இதழான டைம் இதழ் வெளியிட்ட உலகில் செல்வாக்கான நூறு பேர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றார். 2008-ல் சிங்கப்பூர் அரசு. தனது கௌரவ குடிமகன் சிறப்பை அவருக்கு வழங்கியது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.
மறைவு
வயதானதன் விளைவாக வரும் மருத்துவ நிலையின் காரணமாக மருத்துவ சோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் மும்பை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 2024 அக்டோபர் 9-ம் நாள் பிரீச் கேண்டி மருத்துவமனையில் தனது 86-ம் வயதில் அவர் காலமானார்.
அரசு மரியாதையுடன் அவரது உடல் அக்டோபர் பத்தாம் நாளன்று வொர்லியில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் தேசீய கலை மையத்தில் வைக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பொன்மொழிகள்
Other Tatas
வாழ்நாள் முழுவதும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தி வந்தார். அவரது குறிப்பிடத்தகுந்த பொன்மொழிகளில் சில இதோ:
ஏற்ற இறக்கங்கள் ஒரு வாழ்வில் இன்றியமையாதது. இவை நம்மை மேலே கொண்டு செல்ல அமைந்தவை. ஈசிஜியில் கூட அது நேர்கோட்டைக் காட்டினால் உயிர் இல்லை என்று அர்த்தமாகும்.
நீங்கள் மற்றவருடன் பழகும் போது அன்பு, இரக்கம், தயை ஆகியவற்றின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
உலோகாயதப் பொருள்கள் ஒரு மதிப்பும் கொண்டவை அல்ல என்பதை ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள். எது அர்த்தம் பொருந்தியது எனில் நீங்கள் அன்பு பாராட்டுபவரின் நலமான வாழ்க்கையே பொருள் பொதிந்தியதாகும்.
மற்றவர்கள் உங்கள் மீது விட்டெறியும் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வைத்து பிரம்மாண்டமான கட்டிடத்தை அமையுங்கள்.
சவால்களை விடா,முயற்சியுடன் வளைந்து நெகிழ்ந்து எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அவையே வெற்றிக்கான படிக்கட்டுகள்.
டாட்டா சால்ட் முதல் ஏர் இந்தியா முடிய!
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி. உப்பிட்டதோடு விமானத்தில் ஏற்றி உயரப் பறக்கவும் வைத்த உத்தமரான ரத்தன் டாட்டாவை நினைத்துப் போற்றுவது நமது கடமை அல்லவா!
**