WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.820
Date uploaded in London – —27 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 2
ச. நாகராஜன்
நரகம் என்பதை இருள் சேர்ந்த இன்னா உலகம் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் (குறள் 243)
அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு, இருள் சேர்ந்த நரக லோகம் புகுதல் என்பது இல்லைவே இல்லை.
ஆரிருள் என்ற சொல்லால் நரகத்தைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள் 121)
இங்கு தேவர்கள் அமரர் என்று குறிப்பிடப்படுகின்றனர். நரகமானது ஆரிருள் என்று சொல்லப்படுகிறது.
ஒருவன் மனம் மெய் மொழி ஆகியவற்றை அடக்கி ஒழுக்கமுடன் வாழ்ந்தான் எனில் அவன் தேவர் உலகைச் சேர்ந்து விடுவான். அப்படி இல்லாமல் அடங்காது வாழ்ந்தான் எனில் அந்த அடங்காமை அவனை நரகத்திற்குக் கொண்டு சென்று தள்ளி விடும்.
நரகம் என்பதைத் தீயுழி என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (குறள் 168)
அழுக்காறு என்னும் ஒரு கொடிய பாவி பொறாமை கொண்டவனின் செல்வத்தை அழிப்பதோடு அவனை நரகத்திலும் கொண்டு சேர்த்து விடும்.
அளறு என்றால் நரகம். நரகத்தை இப்படி மூன்று குறள்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு (குறள் 255)
உடம்பினுள் உயிரானது மாமிசத்தை உண்ணக் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதை மீறி ஊனை உண்டால் நரகமானது அவனை வெளியே விட வாயைத் திறக்காது.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு (குறள் 835)
பேதை என்பவன் யார்? வள்ளுவர் விளக்கமாக இங்கு கூறுகிறார்.
பேதை என்பவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவியிலும் தான் நரகத்தில் புகுந்து அனுபவிக்க வேண்டிய அனைத்து (தீய) செயல்களையும் செய்து முடிக்க வல்லவன் ஆவான்.
வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (குறள் 919)
ஒழுக்கமற்ற விலைமாதரின் மெல்லிய தோள்களானது,, குற்றம் என்பது பற்றி அறியாத கீழ்மக்கள் புகுந்து சென்று அழுந்தும் நரகமாகும்.
இவ்வுலகம் என்றும் அவ்வுலகம் என்றும் இரு உலகங்களை ஆங்காங்கே வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.
ஒன்று பூவுலகம். இன்னொன்று சொர்க்கம் (அவ்வுலகம்) ; அடுத்தது இதையும் தாண்டிய வீட்டுப் பேறு.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (குறள் 352)
மயக்கத்திலிருந்து நீங்கியவர்க்கு நரகம் என்பது நீங்கி பேரின்ப வீடு பேறு கிடைக்கும்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் 247)
பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இன்பம் பயக்காது. அருள் இல்லாதவர்களுக்கு மேலே உள்ள சொர்க்கம் என்னும் உலகம் கிடைக்காது.
சங்க நூல்கள் பலவற்றிலும் நிரையம் என்னும் சொல் நரகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் திருவள்ளுவர் நிரையம் என்ற சொல்லைத் திருக்குறளில் பயன்படுத்தவில்லை.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து (குறள் 353)
ஐயத்தை அகற்றி மெய்யை உணர்ந்தார்க்க்கு வையத்தை விட வானுலகம் மிக சமீபத்தில் உள்ளது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)
சொர்க்கத்தை விட மேலே இன்னும் உலகம் உள்ளது என்பது வள்ளுவர் கொள்கை.
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)
நான் என்றும் எனது என்றும் நினைக்கின்ற கர்வத்தை அறுத்து எறிந்தவர்கள் தேவருக்கும் மேலான உலகத்தை அடைவர்.
இதற்கான பரிமேலழகர் உரை இது:
உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.
இப்படி ஏராளமான இந்து மதக் கொள்கைகளையும் இதிஹாஸ, புராண, சாஸ்திர ரீதியான அறம் சார்ந்த கொள்கைகளை வள்ளுவர் ஏராளமான குறள்களில் நம் முன்னே வைக்கிறார்.
ஆக திருக்குறளை அனுதினமும் படிப்பதோடு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சேர்ந்து கவனிக்க வேண்டும்.
அப்போது முழு விளக்கமும் கிடைக்கும்.
**
குறிப்பு :- எனது ‘வெற்றிக்குத் திருக்குறள்’ என்ற புத்தகத்தில் 21-ம் அத்தியாயமான, ‘திருக்குறளில் தேவர் உலகம் : வள்ளுவரும் வானவரும்’ என்ற அத்தியாயத்தில் வேறொரு கோணத்தில் 17 குறள்கள் தரப்பட்டுள்ளன.
இவற்றில் சில இந்த “திருக்குறளில் சொர்க்கமும் நரகமும்’ என்ற அத்தியாயத்தில் தரப்படாதவையாகும்.