உத்வேகம் ஊட்டிய உத்தமர் : ரத்தன் டாட்டா! -2 (1) (Post No.13,831)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.831

Date uploaded in London – 30  October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

26-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது. 

ரத்தன் டாட்டாவைப் பற்றிய கட்டுரையின் முதல் பகுதியைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பகுதி வெளியாகிறது.

உத்வேகம் ஊட்டிய உத்தமர் : ரத்தன் டாட்டா! -2 (1)

ச .நாகராஜன்

தலைமை

டாட்டா குழுமத்தின் தலைவரானவுடன் ரத்தன் டாட்டா தனது இயல்பை முதலில் காட்டினார்.

ஜே.ஆர்.டி. டாட்டா அமர்ந்த இடத்தில் அவருக்கு இணையாகத் தம்மால் அமர்வது இயலாது என்று பணிவுடன் கூடிய அவர் “அவரது பெரிய காலணிகள் எங்கே எனது சிறிய கால்கள் எங்கே” என்று கூறினார்.

நிர்வாக போர்டு கூட்டத்தில் அனைவரும் அமரும் போது தலைவரான இவர் சிறிது நேரம் தான் ஜே ஆர் டி டாட்டா அமர்ந்த அதே இருக்கையில் அமர்வார். பின்னர் அங்கிருந்து எழுந்து அடுத்த நாற்காலிக்குச் சென்று விடுவார். இதை ‘மியூஸிகல் சேர் அமர்தல்’ என்பார்கள் அனைவரும்!

மிகப் பெரிய டாட்டா குழுமத்தின் தலைவராக இருந்தாலும் கூட தனக்கென விசேஷ சலுகை எதையும் விரும்பாதவர் டாட்டா.

டாட்டா ஸ்டீலின் அலுவலகம் சிறியதாக இருந்த காரணத்தினால் மூத்த அதிகாரிகளுக்கான அறைகளும் சிறிதாகவே இருந்தன. அவருடன் பணியாற்றிய இரு அதிகாரிகளுக்கும் அவருக்கும் ஒரே பணியும் பொறுப்பும் தரப்பட்டது. அதிகாரிகள் அவரிடம் சற்று பெரிய காபின் ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய போது அவர் தனக்கென விசேஷ சலுகை எதுவும் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி அதே காபினில் பணியைத் தொடர்ந்தார்.

தொழிலாளர்களின் நண்பர்

தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் போதோ, ஒரு கஷ்ட சூழ்நிலையில் இருக்கும் போதோ, அந்தத் தொழிலாளியின் வீட்டிற்கு தானே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி உதவிகளைச் செய்வது அவர் வழக்கம்.

1984-ல் நடந்த பெரும் குழப்பத்தில் தங்கள் வாகனங்களை இழந்த சீக்கிய ஓட்டுநர்களுக்கு அவர் இலவசமாக வாகனங்களைத் தந்தார். இது யாருக்குமே தெரியாது. விளம்பரத்தை அவர் வெகுவாக விரும்பவில்லை.

எளிமை

தனது வாழ்நாள் முழுவதும் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார் அவர். “வெற்றியாளர்களைக் கண்டு நான் பிரமிக்கிறேன். ஆனால் இரக்கமற்ற அநியாயமான வழியில் அவர்களின் வெற்றி அடையப்பட்டது என்றால் அவர்களைக் கண்டு என்னால் பிரமிக்கத்தான் முடியும். என்னால் அவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது.” என்றார் அவர்.

இந்தக் கொள்கையைக் கொண்ட ரத்தன் டாட்டா தனது வாழ்நாள் முழுவதும் நேர்மையான வழியைக் கடைப்பிடித்து வெற்றியை அடைந்தார் என்பதோடு பெற்ற வெற்றியால் தலைக்கனம் கொள்ளாது மிக எளிமையானவராக இருந்தார்.

இதை நிரூபிக்கும் நூற்றுக் கணக்கான சம்பவங்களை அவருடன் கூட இருந்து பழகியோர் அனுபவித்திருக்கின்றனர். அவரது மறைவையொட்டி அவர்கள் ரத்தன் டாட்டா என்ற மாமனிதருடன் பழகிய சம்பவங்களை இது பற்றி நினைவு கூர்கின்றனர்.

பெரிய குழுமத்தின் தலைவராக இருந்த அவர் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். அவரது நண்பர் ஒருவர் டாக்ஸியில் ஏறிக் கிளம்பிக் கொண்டிருந்தார். “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் டாட்டா. தான் போகும் இடத்தை அவர் சொன்னவுடன், “நானும் அங்கே தான் போக வேண்டும், வரலாமா?” என்று கேட்டு விட்டு டாக்ஸியில் அவர் பக்கத்தில் அமர்ந்தார் டாட்டா.

இதைப் பார்த்த நண்பர் விக்கித்து பிரமித்தார்.

பிரம்மாண்டமான நிறுவனங்களின் தலைவர் சாதாரண டாக்ஸியில் தன் கூட பயணிப்பதா? அவரால் நம்பவே முடியவில்லை. ஆனால் டாட்டாவோ சகஜமாக சிரித்தவாறே அவருடன் பேசிக் கொண்டு வண்டியில் சென்றார்.

விருதுக்குப் பெருமை தந்தவர்

வருடத்திற்கு ஒரு பெரிய விருதாவது டாட்டாவிற்கு வழங்கப்படும்.  விருதை வழங்கியவர்கள் அதைப் பெற்றவரை விட அப்படி வழங்கியதால் பெருமைப்பட்டார்கள். ஒரு முறை இன்ஃபோஸிஸ் நிறுவனர் திரு நாராயணமூர்த்தி அவருக்கு வாழ்நாள் சாதனை விருதை அளித்தார். விருதை அளிப்பதற்கு முன்னர் அவர் காலில் விழுந்து அவரைக் கும்பிட்டு விட்டு வழங்கினார். இப்படிப்பட்ட அபாரமான மனிதரைத் தான் கண்டதே இல்லை என்றார் அவர். கல்லூரியில் படிக்கும் தன் மகளை டாட்டா வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அந்த இளம்பெண்ணுடன் மூன்று மணி நேரம் உரையாடி அவருக்கு உத்வேகம் ஊட்டியதை அவர் நெகிழ்ச்சியுடன் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறார்.

பங்குதாரர்களுக்கு லாபம்

நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், நிறுவியவரின் வாரிசு என்றாலும் கூட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஷேர் ஹோல்டர்கள் எனப்படும் பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தைத் தர வேண்டும் என்பதில் அதிக முனைப்புள்ளவர் டாட்டா.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சுவையான சம்பவத்தைக் கூறலாம்.

2005-ம் ஆண்டு. ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர்களின் அழைப்பிற்கிணங்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டார். பிரதம மந்திரியின் இந்தப் பயணத்தையொட்டி அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனங்களில் பத்து நிறுவனங்களின் தலைவர்களும் இந்தியத் தொழில்துறையில் மிகப் பெரும் பத்து நிறுவனங்களின் தலைவர்களும் கூடிப் பேசி உலகத் தொழிலபதிர்களின் மன்றம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களான பெப்ஸி, ஜெராக்ஸ், ஹனிவெல்,ஜேபி.மார்கன், சேஸ் உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு புறமும், இந்திய அணியில் ரத்தன் டாட்டாவைத் தலைவராகக் கொண்டு முகேஷ் அம்பானி. கிரண் மஜும்தார், நந்தன் நீல்கேணி, அஷோக் கங்குலி உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தலைவர்கள் மறுபுறமும் ஒருங்கே திரண்டனர்.

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் சுறுசுறுப்பானது. இந்திய தொழிலதிபர்கள் தங்குவதற்காக நல்ல ஹோட்டல் அறைகளை அது தேர்ந்தெடுத்தது. ரத்தன் டாட்டா தங்குவதற்காக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மிகப் பெரும் நட்சத்திர ஹோட்டலான வில்லார்ட் இண்டர் காண்டினெண்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆப்ரஹாம் லிங்கன் உள்ளிட்டோர் தங்கியதால் சரித்திர பிரசித்தி பெற்ற இடம் இது.

இங்கு ரத்தன் டாட்டா தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது சூட்கேஸை தானே எடுத்துக் கொண்டு வர, அறையில் நுழைந்து இந்திய தூதரகத்தினரைப் பார்த்து புன்சிரிப்புடன் ஜெய்ஹிந்த் என்றார். அனைவரின் நலனையும் விசாரித்தார்.

மறுநாள் காலை அவரை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்ல பணியாளர்கள் சென்ற போது அவரை அவரது அறையில் காணோம். அவரது உடைமைகள், பெட்டிகள் எதையும் காணோம். கலவரம் அடைந்த அனைவரும் நேரடியாக நட்சத்திர விடுதியின் வரவேற்பாளரிடம் ஓடினர். திடுக்கிட்ட அவர்களது கவலையை வில்லார்டின் பொது மேலாளர் போக்கினார். முதல் நாள் இரவு டாட்டா தங்களை அணுகி அந்த பிரமாண்டமான சூட் தனக்கு வேண்டாம் என்றும் ஒரு சிறிய சிங்கிள் அறை போதும் என்றும் கூறவே அவரது வேண்டுகோளுக்கிணங்கி ஒரு சிறிய அறை ஒதுக்கித் தரப்பட்டது என்று கூறினார்.

அனைவரும் அந்த அறைக்கு விரைந்தனர். அங்கே புன்சிரிப்புடன் தயாராக இருந்தார் டாட்டா. ஏன் அப்படி அவர் அந்த சிறிய அறைக்கு மாறினார் என்று கேட்கப்பட்ட போது, அவர் கூறிய பதில் இது: “என்னால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்த பிரம்மாண்டமான சூட்டிற்கு ஆகும் செலவை என்னால் நியாயப்படுத்த முடியாது. எனது கம்பெனியின் பங்குதாரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான். எனக்கு இந்த ஆடம்பரச் செலவு ஆகாதே!”.

இந்த பதிலால் அனைவரும் பிரமித்தனர். அவரது உயரிய நேர்மை, சிக்கனம், எளிமை, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தொகையைத் தர வேண்டும் என்னும் அவரது உறுதி ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டிய இந்த சம்பவம் அனைவர் மனதிலும் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. “இவர் தான் டாட்டா” என்பதை அறிந்து அனைவரும் பூரித்தனர்.

26-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

**

Leave a comment

Leave a comment