Post No. 13.835
Date uploaded in London – —31 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரத்தன் டாட்டாவைப் பற்றிய கட்டுரையின் முதல் பகுதியைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பகுதி வெளியாகிறது.
உத்வேகம் ஊட்டிய உத்தமர் : ரத்தன் டாட்டா! -2 (2)
ச .நாகராஜன்
இசை ரசனை
பிரபலமான பாகிஸ்தானிய பாடகர்களான ஜோஹப் ஹாஸனுக்கும் அவரது சகோதரிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்தவர் டாட்டா.
ஒரு நாள் அவர்கள் இல்லத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்களைச் சந்திக்க ரத்தன் என்பவர் வரலாமா என்று. இன்று வேண்டாம் வெள்ளிக்கிழமை வரட்டும் என்றார் அவர்களது அம்மா.
வெள்ளிக்கிழமை கம்பீரமான ஒருவர் அவர்கள் இல்லத்திற்கு வந்து எனக்கு ஒரு இசை ஆல்பத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும். நான் அதற்கான ஒப்பந்த ஆவணத்தை ஒருவரிடம் அனுப்புகிறேன். நன்றாகப் படித்துப் பாருங்கள். அம்மாவிடமும் கேட்டு சம்மதம் தெரிவியுங்கள்” என்றார் எளிமையாக அந்த மனிதர்.
அவர் யார் என்று தெரியாத இளம் பாடகர்கள் மற்றவர்களிடம் ரத்தன் யார் என்று விசாரித்தனர். கிடைத்த பதில் அவர்களைத் தூக்கிவாரிப் போடச் செய்தது. வந்தவர் மாமனிதர் ரத்தன் டாட்டா! தாஜ்ஹோட்டலில் ஒரு விழாவில் சிபிஎஸ் இந்தியா என்றா டாடா குழும கம்பெனிக்காக இசை ஆல்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விட்டனர் பாகிஸ்தானிய பாடகர்கள்.
அவர்களை ஒரு நாள் விருந்துக்கு அழைத்தார் டாட்டா. பெரிய மாளிகைக்குச் செல்லப் போகிறோம் என்று நினைத்து வந்த அவர்கள் இரண்டு பெட் ரூம் வீட்டில் எளிமையாக அவர் வசிப்பதைக் கண்டு வியந்தனர்.
உலகிற்கு நட்சத்திர ஹோட்டலைத் தந்தவர் தனக்கெனத் தேர்ந்தெடுத்தது ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியையே.
இளமையில் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டார் டாட்டா. ஆனால் அதை வாசித்து மகிழ அவருக்கு நேரமே கிடைக்கவில்லை. ஓய்வு பெற்ற பின்னர் தனது சிறிய வீட்டில் பியானோ வாசித்து மகிழ்ந்தார் அவர்.
அவரது நகைச்சுவை
வாழ்வில் நகைச்சுவைக்குத் தனி இடம் கொடுத்தவர் அவர்.
அவரது புகழ் பெற்ற மொழிகளாகச் சொல்லப்பட்டதில் ஒன்று இது: “நான் சரியான முடிவுகளை எடுப்பதில் நம்பிக்கை கொண்டவன் அல்ல; நான் முடிவுகளை எடுப்பேன்; அவற்றைச் சரியானதாக ஆக்குவேன்.”
இதைப் பற்றி ஒரு பெண்மணி அவரிடம் பெரிய கூட்டத்தில் கேட்க அவர், “ இது எனது வார்த்தைகளே அல்ல; இது நான் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் படித்தவை தான்” என்றார். அரங்கமே குலுங்கி நகைத்தது. ஒளிவுமறைவின்று உள்ளதை உள்ளவாறு சொல்வார் அவர்.
புத்தகங்கள்
ரத்தன் டாட்டாவைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. அதில் அவர் பற்றிய சுவையான சம்பவங்களும் அவரது மேதைத் தன்மையை வெளிப்படுத்தும் விஷயங்களும் அவரது வாழ்க்கை வரலாறும் உள்ளன.
பொன்மொழிகள்
அவரது பொன்மொழிகளில் சில:
நீங்கள் வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடந்து செல்லுங்கள். நெடுந்தூரம் செல்ல வேண்டுமென்று விரும்பினால் மற்றவர்களுடன் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
மக்கள் தாங்கள் படிப்பதெல்லாம் உண்மையானதாகவே இருக்கும் என்று இன்னும் நினைக்கிறார்கள்.
இரும்பை எதாலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் துருவால் அதை அழிக்க முடியும். அதே போல ஒருவரை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அவரது அணுகுமுறையும் மனக் கருத்துக்களும் அவரை அழிக்க முடியும்.
ரத்தன் டாட்டா பற்றிய அனுபவ மொழிகள்
டாட்டாவைப் பற்றி அவருடன் பழகியவர்கள் பல்வேறு விதமான அவரது பண்புகளை தங்களது பார்வையில் தெரிவித்துள்ளனர்; தெரிவித்து வருகின்றனர்.
அவர் ஒரு மிகப்பெரும் தொழிலதிபர். பேச்சாளர்; நிர்வாகத்திறமை கொண்டவர்; அடித்தளத் தொழிலாளர்களுடன் பழகுபவர். விமானி. தேசபக்தர். இசைப்பிரியர். சமூக சேவை செய்பவர்; கொடையாளி; விளம்பரம் விரும்பாதவர். ஏராளமான விருதுகளைப் பெற்றவர். விலங்குகளின் நண்பர். சிறந்த மனிதாபிமானி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்திற்குச் சமம்!
சரி, ரத்தன் டாட்டா யார்?
தோன்றிற் புகழொடு தோன்றுக (குறள் எண் 236 )என்றார் திருவள்ளுவர்.
புகழொடு தோன்றி புகழுக்கு ஒரு இலக்கணம் வகுத்தார் ரத்தன் டாட்டா. வாழ்வாங்கு வாழ்ந்தார் அவர்.
அவரை எந்த இடத்தில் வைப்பது?
இதற்கும் வள்ளுவரே பதில் சொல்கிறார்:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் எண் 50)
**