Siddesvara temple, Hemavati, AP
Post No. 13,836
Date uploaded in London – 31 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆந்திரப் பிரதேசத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்- Part 42
ஹேமாவதியில் 4 கோவில்கள் Hemavati Temples
ஆந்திர பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் சத்யசாய் மாவட்டத்தில் ஹேமாவதி உள்ளது .இங்கு சிறங்கள் மிகுதியாவுள்ள நான்கு கோவில்கள் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய இந்தக் கோவில்கள் நுளம்பர்களின் கலைகளின் இருப்பிடமாகத் திகழ்கின்றன..
புட்டபர்த்தியிலிருந்து110 கி.மீ ;
அனந்தபூரிலிருந்து 150 கி.மீ
****
நுளம்பர்கள் யார் ?
நுளம்ப வம்சத்தினர் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கும் 11-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தென்னிந்தியாவில் நுளம்பபாடி என்னும் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். நுளம்பபாடி இன்றைய ஆந்திரா, கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது. தமிழ் நாட்டில் தருமபுரி வரைக்கும் இவர்களுடைய கலைத்திறன் கொண்ட கோவில்களைக் காணலாம் .
நுளம்ப வம்சத்தினர் , பாணர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் கங்கர்களுக்கும், ராட்டிரகூடர்களுக்கும் அடங்கி ஆட்சிசெய்தனர். இவர்கள் தங்களைப் பல்லவர்களின் வழியைச் சேர்ந்தவர்களாகக் கூறுகின்றனர். ஏமாவதித்தூண் கல்வெட்டு மூலம் இவர்களுடைய மன்னர்களின் பட்டியலை அறிகிறோம்.
நுளம்பர்களின் தலைநகராக இருந்த ஹேமாவதியின் வடமேற்கில் சித்தேஸ்வரா, தொட்டேஸ்வரா, விரூபாக்ஷர், மல்லேஸ்வரா சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. சுமார் 1000 அல்லது 1200 ஆண்டுகள் பழமையுடைய இந்தக் கோவில்களை பிற்காலத்தில் வந்தவர்கள் திருப்பணி செய்ததால் தூண்கள் மற்றும் கருவறையில் உள்ள தெய்வம் போன்றவை பழமை மாறாமல் உள்ளன.. சோழர் கைகள் ஓங்கியதும் நுளம்ப வம்சம் மறைந்து விட்டது.
ஒவ்வொரு கோவிலாகக் காண்போம்.
சித்தேஸ்வரா கோவில் கர்ப்பக்கிரகத்தில் சித்தேஸ்வரர் மூன்று கண்களுடன் சுகாசனத்தில் அமர்ந்து அருள்புரிகிறார். சிலையானது ஒரு பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது . நான்கு கைகளில் மூன்றில் திரிசூலம், டமருகம், கபாலம் ஆகியன உள்ளன. நாலாவது கை அபய முத்திரையில் ஆசி வழங்குகிறது; நெற்றியில் பிறைச் சந்திரனைக் காணலாம்..
தொட்டேஸ்வரா கோவில் மேற்கு நோக்கி இருக்கிறது கர்ப்பக்கிரகத்தில் சிவ லிங்கத்தைத் தரிசிக்கலாம். இங்கு குறிப்பிடத்தக்க விஷயங்கள் –சிற்பங்கள் நிறைந்த சபா மண்டபமும் அவற்றின் தூண்களும் ஆகும் . ஜன்னல்கள் விதவிதமான பூ அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. வேறு எங்கும் இவ்வளவு வகைகளைக் காண முடியாது; ஒரு சிறிய மண்டபத்தில் இருக்கும் நந்தியும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .ஒரு வேலைப்பாடுமிக்க ஆழ் கிணறும் மண்டபங்களுக்கு முன்னால் வெட்டப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டு கோவில்களில் இது போன்ற சிற்பங்கள் இருந்தாலும் அவைகளை , அடுத்த தரத்தில்தான் வைக்க வேண்டும்.
ஹேமாவதி மியூசியத்தில் பல சிற்பங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.
நான்கு கோவில்களில் சித்தேஸ்வரா கோவில்தான் மிகப்பழையது. இந்த வம்சத்தினரின் முழுச் சிறப்புகளையும் அறியவேண்டுமானால் அரலகுப்பே, நந்தி, அவனி, தருமபுரி கோவில்களுக்கும் செல்ல வேண்டும்.
தொட்டேஸ்வரா கோவிலில் கார்த்திகேயன் , பிரம்மா ஆகியோரை ஜன்னல்களில் உருவமாகச் சமைத்து இருப்பது நுளம்பர்களின் தனித்துவத்தைக் காட்டுகிறது . மேலும் கங்கா, யமுனா, விஷ்ணு ஆகியோர் உருவங்களையும் செதுக்கியுள்ளனர்.; அவைகளில் நந்தி சிலை குறிப்பிட்டது தக்கது.
சித்தேஸ்வரா, தொட்டேஸ்வரா ஆகிய இரண்டு கோவில்களிலும் பதினாறு கால் மண்டபங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தூணிலும் அற்புத வேலைப்பாடுகளைக் காணலாம்; இதிலும் நுளம்பர் காலச் சிற்பிகளின் தனித்துவம் மிளிர்கிறது . ஒரு காலத்தில் இந்தக் கோவில்கள் மீதிருந்த கோபுரங்கள் இப்போது இல்லை.
வீர சைவர்கள் வணங்கிய இந்தக் கோவில்களில் ஆடுகளை பலிகொடுத்ததும் தெரிகிறது.
கோவில்களின் காளி சிற்பம் உள்பட சில சிற்பங்கள் சென்னை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நுளம்பர் கலைச் செல்வங்கள் குறித்து ஆங்கிலத்தில் நான்கு புஸ்தகங்ககளும் பல கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.
ஹேமாவதியில் கல்வெட்டுகள்
சென்ற ஆண்டு (2023) மல்லேஸ்வரசுவாமி கோவிலில் ஹொய்சாளர் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது . அது நுளம்பேஸ்வர சுவாமிக்கு இரண்டாவது வீர வல்லாளன் (Hoysala King Veera Ballala II (1173-1220) கொடுத்த தானத்தைக் கூறுகிறது; கடந்த காலத்தில் இரண்டு சோழர் கல்வெட்டுகளும் இரண்டு நுளம்ப- பல்லவர் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது ஹொய்சாளர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
–subham—
Tags- நுளம்ப வம்சம், ஆந்திரம், 108 புகழ்பெற்ற, கோவில்கள், Part 42
Hemavati Temples, ஹேமாவதி, சித்தேஸ்வரா, தொட்டேஸ்வரா, விரூபாக்ஷர், மல்லேஸ்வரா, சிவன்