சிலப்பதிகாரத்தில், ஆண்டாள் பாடலில் கனவுகள் (Post.13,888)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,888

Date uploaded in London – 15 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிலப்பதிகாரத்தில் மூன்று முக்கியக் கனவுகள் இடம்பெறுகின்றன. கண்ணகி, கோவலன், பாண்டிய ராணி ஆகிய மூவர் கண்ட கனவுகளில் தீய சகுனங்கள் அனைத்தையும் புலவர் இளங்கோ பட்டியலிடுகிறார்.

இதே போல கம்ப ராமாயணத்திலும் பரதன், திரிசடை ஆகியோர் கண்ட தீய கனவுகளைக் காணலாம்.

இதற்கு  நேர் மாறாக ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் வாரணம் ஆயிரம் பகுதியில் ஆண்டாள் கண்ட கனவு வருகிறது; அதில் அத்தனை நல்ல சகுனங்களும் வருவதால்  வைஷ்ணவ திருமணங்களில் அதைப்  பாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்; மேலும்  அதில் இந்துக்களின் கல்யாணத்தில் உள்ள முக்கியச் சடங்குகள் அனைத்தும் வரிசைக் கிரமத்தில் இருப்பதால் , அது கலாசார வரலாற்றுப் பொக்கிஷமாகவும் திகழ்கிறது.

ஆண்டாளின்  கனவும்  மூன்று சிலப்பதிகார கதா பாத்திரக் கனவுகளும் மேற்கத்திய சிக்மண்ட் பிராய்டு கும்பல்களின் கருத்துக்களைத் தகர்த்து எறிகின்றன. கனவு என்பது அவியல் காட்சிகள், குழம்பிப்போன குட்டை என்று எல்லாம் அவர்கள் இன்று வரை எழுதி வருகின்றனர். ஆனால் வேதம் உபநிஷத், ராமாயணம் முதல் பெரிய புராணம் வரை வரும் கனவுகள் இந்துக்கள் சொல்வதே உண்மை என்பதைக் காட்டுகின்றன. அதனால்தான் இன்று வரை பிராமணர்கள் மூன்று வேளையும் கெட்ட கனவுகள் ஒழிக என்று மந்திரம் சொல்லி சந்தியா வந்தனம் செய்கின்றனர். இது வேத காலம் முதல் இன்றுவரை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளைகளாக நீடிக்கும் வழக்கம்.

****

கனவுகள் என்றால் என்ன ?

கனவுகள் பற்றிய கலைக்களஞ்சிய விளக்கம்

ஒருவர் தூங்கும்போது மனிதனின் மனது உருவாக்கும் காட்சிகள் கனவுகள் எனப்படும். . இதனுடைய பயன்கள் என்ன  என்று தெரியவில்லை; ஆயினும் சிக்மண்ட் பிராய்ட் என்பவர்  நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வேலையை இவை செய்வதாகச் சொல்கிறார். கெட்ட கனவுகள் என்பது  மனத்தின் ஆழத்தில் முக்கிவைக்கப்பட்ட அச்சங்களின் எழுச்சி என்பது அவரது கருத்து ; விஞ்ஞான விளக்கப்படி கண்களின் வேகமான நகர்வுகள் (RAPID EYE MOVEMENT)  கனவுகள் அ ப்போது மூளையானது  (Cortex area)  விழித்திருக்கும் ஒருவரின் அளவுக்கு — கிட்டத்தட்ட அந்த அளவுக்கு- செயல்படுகிறது . ஒரு மனிதன் தூங்கும் நேரத்தில் ஐந்தில் ஒரு பகுதி நேரத்தை கனவுகள் ஆக்ரமிக்கின்றன.

DREAM IN THE HUTCHINSON ENCYCLOPEDIA

Series of events or images perceived through the mind during sleep. The function is unknown, but Sigmund Freud saw them as wish fulfilment (nightmares being failed dreams prompted by fears of repressed impulses). Dreams occur in periods of rapid eye movement (REM) by the sleeper when the cortex of the brain is approximately as active as in waking hours. Dreams occupy about a fifth of sleeping time.

****

கோவலன் கண்ட கனவு , சிலப்பதிகாரம்

அடைக்கலக்கத்தை  காதை

கோவலன் கனவில் கண்ட கெட்ட அறிகுறிகள்

கோவலன் தான் கண்ட கனவை மாடலனிடம் கூறுகிறான்.

அற்பக் குணமுடைய ஒரு குறுமகன் தீங்கு செய்தான்.

அதனால் என் கண்ணகி மணக்கும் தன் ஐம்பால் கூந்தலை விரித்துக்கொண்டு நாட்டைக் காக்கும் வேந்தனிடம் வழக்குரைத்தாள்.

நான் என் புத்தாடையை இழந்து கொம்புள்ள எருமைக் கடா மீது ஊர்ந்து சென்றேன்.

பின்னர் அவளோடு பிறவிப் பிணிப்பு அறுத்தவர்  அடையும் பேற்றினைப் பெற்றேன்.

காமக் கடவுள் மன்மதன்  தன் மலர் அம்புகளை எய்ய முடியாமல் நிலத்தில் போட்டுவிடும்படி மணிமேகலையை மாதவி அரச மரத்தடி அறவோன் புத்த துறவியிடம் ஒப்படைத்தாள்.

இப்படி ஒரு கனவினை நள்ளிரவு இருளில் கண்டேன்.

இது விரைந்து பலிதமாகும் – என்று கூறினான்.

கோவலன் கூறும்: ‘ஓர் குறுமகன்-தன்னால்,

காவல் வேந்தன் கடி நகர்-தன்னில்,

நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த,

கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும்;

அணித்தகு புரி குழல் ஆய்-இழை-தன்னொடும்

பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்;

மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து,

காமக்கடவுள் கையற்று ஏங்க,

அணி திகழ் போதி அறவோன்-தன் முன்,

மணிமேகலையை மாதவி அளிப்பவும்;

நனவு போலநள் இருள் யாமத்து,

கனவு கண்டேன்: கடிது ஈங்கு உறும்’ என

****

கண்ணகி கண்ட கனவு

கண்ணகி தன் கணவனைப் பிரிந்து கவல்கின்றாள் என்பது அறிந்து அவளுக்கு ஆறுதல் கூற அவள் இல்லம் அடைந்தாள். பூவும் நெல்லும் தூவிக் கடவுளை வழிபட்டுக் கண்ணகி தன் கணவனை அடைவாளாக என்று வேண்டினாள். அதனை அவளுக்கு அறிவுறுத்தினாள். எப்படியும் கணவனை அடைவேன் என்று கண்ணகி தன் மன உறுதியைத் தெரிவித்தாள். அதனோடு தான் கண்ட கனவினை அவளுக்கு எடுத்து உரைத்தாள்.

“அந்தக் கனவினை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகின்றது. என் கணவன் என் கையைப் பிடித்துப் புதிய ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே பழிச் சொல் ஒன்று கூறினர். தேளைத் தூக்கி எங்கள் மேல் போட்டது போல் அது இருந்தது. அதனைத் தொடர்ந்து கோவலனுக்கு ஒரு தீங்கு நிகழ்ந்ததால் அது கேட்டுக் காவலன் முன் சென்று வழக்காட அதனைத் தொடர்ந்து அந்நகரும் அரசனும் அழிவு பெற்றனர். அதன் பின் உயிர் துறந்த என் தலைவன் உயிர் பெற்று என்னைச் சந்தித்துப் பேசினார். இதனை நீ நம்பமாட்டாய்; சிரித்துப் பொய் என்று கூறுவாய்; இது யான் கண்ட கனவு ஆகும்” என்று உரைத்தாள்

“கண்ணகி தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு உரைத்தல்”

பெறுகேன்கடுக்கும் என் நெஞ்சம்கனாவினால்என் கை

பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம்;

பட்ட பதியில்படாதது ஒரு வார்த்தை

இட்டனர் ஊரார்இடுதேள் இட்டுஎன்-தன்மேல்;

கோவலற்கு உற்றது ஓர் தீங்கு” என்று அது கேட்டு,

காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்காவலனொடு

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்உரையாடேன்;

தீக் குற்றம் போலும்செறி-தொடீஇ! தீக் குற்றம்

உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற

நல் திறம் கேட்கின் நகை ஆகும்’-

****

பாண்டிய அரசி கண்ட கனவு

2.3 வழக்குரை காதை

2.3.1 கோப்பெருந்தேவியின் கனவு

அரண்மனையில் பாண்டிய அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட தீய கனவினால் உள்ளங் கலங்கித் தன் தோழியிடம் கூறியது :

“தோழீ! கேள். நம் மன்னரது வெண்கொற்றக் குடை செங்கோலுடன் கீழே விழுந்தது. அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியின் ஓசை இடைவிடாது ஒலித்தது. எல்லாத் திசைகளும் அப்போது அதிர்ந்தன. அப்பொழுது சூரியனை இருள் சூழக் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றக் கண்டேன். பகல் பொழுதில் விண்மீன்கள் மிக்க ஒளியோடு பூமியில் விழக் கண்டேன். இதெல்லாம் என்ன? அதனால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றுண்டு. அதனை நம்மன்னவர்க்குச் சென்று கூறுவேன்.”

இவ்வாறு கூறிய தேவி மன்னன் இருக்கும் அரசவை நோக்கிச் சென்றாள்.

(பின்னால் நிகழப் போகும் நிகழ்ச்சியைக் குறிப்பாக முன்னரே உணர்த்துவது நாடக உத்தியாகும். இங்குத் தேவி கண்ட கனவின் மூலம் பாண்டிய மன்னன் வீழ்ச்சி அடையப் போவது குறிப்பாக உணர்த்தப்பட்டது.)

ஆங்குக்

குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்

கடைமணி யின்குரல் காண்பென்காண் எல்லா

திசைஇரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்

கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா

விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்

கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா

கருப்பம்                                  (வழக்குரை காதை : 1-8)

—  (Tamil Virtual University version) —

*****

ஆண்டாள் கண்ட கனவு

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் (கோதையின் கதை)

அன்புத் தோழி. நீ சொன்னது போல் நேற்று மாலை நாம் கூடல் இழைத்துப் பார்த்தோம். கோவிந்தன் வரும் நாள் கூடி வரும் என்று நாம் இழைத்தக் கூடல்கள் எல்லாம் சொல்லின. நேற்று இரவு அந்த கோவிந்தனே வந்தானடி. கனவில் வந்து என்னைக் கைப்பிடித்தான்.

ஆயிரம் யானைகள் (வாரணம் ஆயிரம்) சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு

பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

தேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்னாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்

வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து

மந்திரக்கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

எல்லாத் திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பல பேர் அதனை எடுத்து மந்திரங்களால் புகழ்ந்து, தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் புனிதனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி

பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை

காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி

சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள

மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

மத்தளம் கொட்ட வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பந்தலின் கீழ் என் தலைவன் அழகன் மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

நல்ல சொற்களையே பேசுபவர்கள் மேன்மையான மறைச் சொற்களைச் சொல்லி பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கதிரவன் முன் வைத்த பின், எரியும் நெருப்பைப் போல் கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி தீயை வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்

காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்

தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.

இந்தப் பிறவிக்கும் இனி வரும் ஏழேழ் பிறவிக்கும் நமக்குக் கதியானவன், நம்மைத் தன் செல்வமாக உடையவன், நாராயணனாகிய நம் தலைவன், தன் செம்மையுடையத் திருக்கையால் என் கால்களைப் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மையுடையவன் நாராயணன் நம்பி

செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.

வில்லை கையில் ஏந்தியிருக்கும் ஒளிமிகுந்த முகம் கொண்ட என் உடன்பிறந்தோர் வந்து தீயினை வளர்த்து என்னை அதன் முன்னே நிறுத்தி சிங்கமுகம் கொண்ட (நரசிம்மன்) அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரியை அந்த தீயினில் இடக் கனாக் கண்டேன் தோழி நான்

வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி

அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து

பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

குங்குமம் அப்பிக் குளிர்ந்த சந்தனக்குழம்பை உடலெங்கும் பூசி எங்கள் இருவரையும் நீராட்டிய பின், அங்கு அவனோடு யானை மேல் ஏறி மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலம்செய்து மணநீர்

அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்

மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

****

நல்ல வேளையாக சுமார்  1500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவைகளை இந்துக்கள் எழுதி வைத்தனர். சங்க காலக் கனவுகளில் நாம் இந்த அளவுக்கு,  நல்ல அல்லது தீய சகுனங்களைக் காண முடிவதில்லை.

(நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் பத்து ஆண்டுகளில்   எழுதிய  கனவுகள் பற்றிய 15 கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்).

–subham —

Tags- கனவுகள் என்றால் என்ன ? வாரணம் ஆயிரம், ஆண்டாள் கனவு, சிலப்பதிகாரம், கண்ணகி, கோவலன், பாண்டிய அரசி, கனவுகள், தீய, சுப, சகுனங்கள் , அறிகுறிகள்  

Leave a comment

Leave a comment