WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.972
Date uploaded in London – —5 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Kalkionline NOVEMBER 27 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நவம்பர் 27 பிரபல மின்னல் வேக மன்னன் ப்ருஸ் லீயின் பிறந்த தினம்!
பயிற்சி செய் அல்லது செத்து மடி : ப்ரூஸ் லீயின் அறிவுரை!
ச.நாகராஜன்
மின்னல் வேக மன்னன் என்று உலகெங்கும் பிரசித்தி பெற்ற ப்ரூஸ் லீ (பிறப்பு 27-11-1940 மரணம்: 20-7-1973) தனது விசேஷ தற்காப்புக் கலை உத்திகளால் உலகைக் கவர்ந்தவர். அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ‘ஒன் இன்ச் பஞ்ச்’ என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து எதிரிலிருப்பவரை வீழ்த்தும்.
தன் வாழ்நாளில் ப்ரூஸ் லீ யாரிடமும் தோற்றதில்லை.
அவரது வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன.
அவற்றில் முக்கியமான ஒன்று இது.
ப்ரூஸ் லீக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் ப்ரூஸ் லீ அவரை வேகமாக ஓடுமாறு வற்புறுத்தினார்.
நடந்தது என்ன என்பதை அந்த நண்பரே தெரிவிக்கிறார் இப்படி:
“தினமும் வேகமாக மூன்று மைல் ஓடுமாறு என்னை ப்ரூஸ் கூறினார்.
இருபத்தியோரு அல்லது இருபத்தியிரண்டு நிமிடங்களில் நாங்கள் மூன்று மைல்களை ஓடிக் கடந்தோம்.
அதாவது ஒரு மைலை ஓடிக் கடக்க சுமார் எட்டு நிமிடங்களே ஆனது. ஆனால் ப்ரூஸ் லீ ஒரு மைல் ஓட எடுத்துக் கொண்ட நேரம் ஆறரை நிமிடங்களே!
ஒரு நாள் காலை அவர் என்னிடம் கூறினார் : ஐந்து நிமிடங்களில் ஓடி ஒரு மைலைக் கடக்கப் போகிறோம்.
உடனே நான் கூறினேன்: ப்ரூஸ். என்னால் ஐந்து நிமிடங்களில் முடியாது. நான் உன்னை விட வயதானவன். என்னால் முடியவே முடியாது.”
உடனே ப்ரூஸ் கூறினார்: மூன்று நிமிடங்கள் ஆனவுடன் நடையை மாற்றுவோம். மீதி இரண்டே நிமிடங்களில் நீ அதை முடித்து விடலாம்.”
உடனே நான் கூறினேன்: “ஓகே. நான் அதை செய்து பார்க்கிறேன்,
மூன்று நிமிடங்கள் ஆனவுடன் நான்காம் மைலில் முயற்சி செய்த போது என்னால் முடியவில்லை.
“ப்ரூஸ்! இன்னும் நான் ஓடினால் எனக்கு மாரடைப்பு தான் வரும். செத்து விடுவேன்.”
உடனே ப்ரூஸ் கூறினார்: செத்துப் போ!”
இதைக் கேட்டு கோபமடைந்த ப்ரூஸின் நண்பர் ஐந்து மைலையும் ஒருவாறாக ஓடிக் கடந்தார்.
பின்னால் குளித்து விட்டு ப்ரூஸ் லீயிடம் இது பற்றிப் பேசினார் அவர்.
“ப்ரூஸ்! நீ ஏன் அப்படிச் சொன்னாய்?”
ப்ரூஸ் லீயிடமிருந்து உடனே பதில் வந்தது :”ஏனென்றால் நீ சாவதே நல்லது. நிஜமாகச் சொல்லப் போனால் நீ உனக்கே ஒரு குறுகிய எல்லையை வைத்துக் கொண்டால் அது உடல் பயிற்சியாகட்டும், வேறு எதுவாகத்தான் இருக்கட்டும், அது உன் வாழ்க்கை முழுவதும் பரவி விடும். அது உன் வேலையில் பரவும், உனது ஒழுக்கப் பண்பில் அது ஊடுருவும். எல்லாவற்றிலும் முழுதுமாக அது பரவி விடும். எதற்கும் எல்லை என்று ஒன்று கிடையவே கிடையாது. மேடுகள் வந்து உன்னைப் பாதிக்கலாம். ஆனால் அங்கேயே நீ நின்று விடக் கூடாது. அதைக் கடந்து நீ செல்ல வேண்டும். அது உன்னைச் சாகடிக்கிறது என்றால் அது நிச்சயமாகச் சாகடிக்கும்.
ஒரு மனிதன் எப்போதுமே தனது எல்லையைக் கடந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒன்று எல்லையைக் கடந்து முன்னேறு அல்லது செத்து மடி!”
இதைச் சொல்லி விட்டு ப்ரூஸ் லீ நண்பரை ஆழ்ந்து பார்த்தார்!
அவருக்கு ப்ரூஸ் லீ கூறியது இப்போது புரிந்தது!
நீ வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வளரவில்லை என்றால் நீ செத்துக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.
இது தான் ப்ரூஸ் லீ போதித்த தத்துவம்.
ப்ரூஸ் லீ பற்றி அதிகாரபூர்வமாக எழுதியவர் ஜான் லிட்டில் என்பவர்.
ப்ரூஸ் லீயின் தனிப்பட்ட குறிப்பேடுகளையும், இதர தகவல்களையும் பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே ஒருவர் இவரே.
இவர் எழுதியுள்ள பல சம்பவங்கள் ப்ரூஸ் லீ எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டும். அவர் குறிப்பிடும் இந்தச் சம்பவம் உலகளாவிய விதத்தில் பிரபலமாகி விட்டது!
“பத்தாயிரம் உதைகளைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபோதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் ப்ரூஸ் லீ.
ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும் என்றார் அவர்.
பயிற்சி, பயிற்சி, பயிற்சி – முன்னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம் – இதுவே ப்ரூஸ் லீயின் வாழ்க்கைத் தத்துவமாக அமைந்தது. தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது.
—-subham—-
tags-ப்ரூஸ் லீ