WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.983
Date uploaded in London – —8 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
4-12-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
வாழ்க்கை வழிகாட்டிகள்!
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 1
ச.நாகராஜன்
விக்ரம் சாராபாய்
உலகம் ஓடுகின்ற ஓட்டத்தில் குறைந்தபட்சம் அனைவருக்கும் சமமாகவாவது ஒருவன் ஓட வேண்டும். பின் தங்கினான் என்றால் அதோ கதி தான்!
தனி மனிதன் நிலையே இப்படி இருக்கும் போது ஒரு நாட்டின் நிலை என்னவாகும்? விண்வெளியுகத்தில் வேகமாகப் பறக்க வேண்டும். சந்திரனை அடைய வேண்டும், செவ்வாயில் கண் பதிக்க வேண்டும், சந்திர குடியிருப்புக்கு இப்போதிருந்தே திட்டம் தீட்ட வேண்டும். அதற்கான கோடிக்கணக்கான ரூபாய்களைத் திரட்ட வேண்டும், அதற்கும் மேலாக அடுத்த நாடுகளின் தயவை நம்பி இராமல் சொந்த மூளையைக் கொண்டு, நமது நுண்ணறிவை மேம்படுத்தி ஜெயிக்க வேண்டும்; ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த வகையில் விண்வெளியுகத்தில் ஆக்கபூர்வமான எதிர்காலம் பற்றிய நுட்பமான தீர்க்கதரிசனப் பார்வையைக் கொண்டு நமது நாட்டை விண்வெளித் திட்டத்தில் வழி நடத்திச் சென்று வெற்றி பெற வைத்த மாபெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் ஆவார்.
பிறப்பும் இளமையும்
விக்ரம் அம்பாலால் சாராபாய் 1919ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி குஜராத்தில் ஆமதாபாத்தில் ஒரு ஜெய்ன் குடும்பத்தில் பிறந்தார். இயல்பாகவே குடும்பம் வணிகத்தில் சிறந்து ஓங்கி செல்வச்செழிப்புடன் விளங்கியது.
அந்தக் கால வழக்கப்படி அவர் ஒரு மாண்டிஸோரி தனியார் பள்ளியில் படித்தார். படிப்பை முடித்தவுடன் இங்கிருந்து நேராக அவர் கேம்பிரிட்ஜ் சென்றார். 1940ல் செயிண்ட் ஜான் கல்லூரியில் மூன்று டிகிரிகளைப் பெற்றார். சிறந்த இயற்பியல் வல்லுநர் ஆனார். இயற்பியலுடன் கணிதத்திலும் அவர் பேரார்வம் கொண்டிருந்தார்.
காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி
இரண்டாம் உலகப் போர் தொடங்கவே அவர் இந்தியா திரும்பினார். பங்களூரில் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸில் சேர்ந்தார். காஸ்மிக் கதிர்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.
பங்களூர், புனே, இமயமலைப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வுக்கான குறிப்புகளைச் சேகரித்தார்.
1945இல் அவர் கேம்பிரிட்ஜ் திரும்பினார். 1947-ல் அவர் பிஹெச்டி பட்டத்தைப் பெற்றார்.
அவ்வளவு தான், அவரது ஆராய்ச்சி புதிய வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. ஆமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Reseravh Laboratory) சிறிய அறைகளில் 1947 நவம்பர் 11ம் தேதி தொடங்கினார். 1955ல்அதன் கிளையை காஷ்மீர் குலுமார்க்கில் திறந்தார். அத்தோடு திருவனந்தபுரம் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டன.
விண்வெளியுகம் ஆரம்பம்
1957ல் ஸ்புட்னிக்-1 விண்வெளியில் பறந்தது. விண்வெளி யுகம் வேகம் பிடித்தது. அதே வருடத்தில் பன்னாட்டு பூகோள இயற்பியல் ஆண்டு கொண்டாடப்பட்டது. அங்கு விக்ரம் சாராபாய் யார் என்பதை உலகம் நன்கு அறிந்தது.
புதிய விண்வெளியுகத்திற்கு இந்தியாவை இட்டுச் செல்ல அவர் தயார் என்பதை இந்தியா அறிந்து மகிழ்ந்தது.
இந்திய விண்வெளிக் குழு நிறுவப்பட, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார் விக்ரம் சாராபாய்.
ஹோமி பாபா (1906-1966) அவருக்குத் தனது முழு ஆதரவை வழங்கினார்.
எதற்காக விண்வெளி ஆராய்ச்சி
எதற்காக பல கோடியை விண்ணில் இறைக்க வேண்டும். அதனால் என்ன பயன்? – இப்படி கடும் விமரிசனங்கள் எழுந்தன. இந்த கடுமையான விமரிசனங்களை அவர் எளிதில் எதிர்கொண்டார்.
வானமெங்கும் வைரச்சுரங்கம்
பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்து 750 பில்லியன் அதாவது 75000 கோடி நட்சத்திரத் தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் நான்கு நட்சத்திரங்களும் சில தொகுதிகளில் லக்ஷக்கணக்கிலும் நட்சத்திரங்கள் உள்ளன.
மொத்தமாக எவ்வளவு என்று கணக்கிட்டவர் இதுவரை யாரும் இல்லை.
இந்த ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான அபூர்வ வஸ்துவைக் கொண்டுள்ளது. இதன் விலை மதிப்பைக் கணிப்பார் யாருமில்லை.
எரிபொருள் அனைத்தும் பூமியில் தீர்ந்து விடும் கால கட்டத்தில் வானத்தை நோக்க வேண்டிவர்களாக நாம் இருக்கிறோ,ம்.
ஏனெனில் வானமெங்கும் வைரச் சுரங்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. லூசி என்ற நட்சத்திரம் முழுவதுமே வைரம் தான்.
நம்மைச் சுற்றிச் சுழலும் குறுங்கோள்களில் ஏராளமான விலை உயர்ந்த தாதுப் பொருள்கள் உள்ளன. வோலடைல் எனப்படும் எளிதில் ஆவியாகும் ஆக்ஸிஜன், நீர் போன்றவையும் உள்ளன.
இந்தக் குறுங்கோள்களில் நூற்றுக் கணக்கானவை காலம் காலமாக சந்திரனில் மோதி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
ஆகவே தான் அனைத்து நாடுகளும் சந்திரன் மீது பார்வையைப் பதிக்கின்றன.
சீனா எப்படியாவது இநத ரேஸில் முன்னணியில் இருக்கவேண்டும் என விரும்புகிறது. சீனா சந்திரனுக்கு உரிமை கொண்டாடினால் உலகமே அல்லோலகல்லோலப்படும். இந்தியாவின் நிலை பரிதாபகரமாக ஆகி விடும்.
ஒரு கிலோமீட்டர் அகலம் ஒரு கிலோமீட்டர் நீளம் ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு கனகிலோமீட்டரில் குறுங்கோளில் கிடைக்கும் இரும்பு உலகம் முழுவதற்கும் 15 ஆண்டுகள் போதுமானதாகும்.
சந்திரனில் விண்கற்கள் மோதிய இடங்களில் எல்லாம் பிளாட்டினம் அபரிமிதமாக இருக்கிறது.
ஒரு அவுன்ஸ் பிளாட்டினத்தின் விலை ஆயிரம் டாலர். தங்கத்தை விட விலை அதிகமுள்ள இது துருப்பிடிக்காது. பளபளப்பை இழக்காது.
சந்திர பிளாட்டினம் உலகிற்கு வந்தால் உலகெங்கும் ஒளி வெள்ளம் தான்! கைக்கு அடக்கமான செல்களில் சிறிதளவேயுள்ள பிளாட்டினம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும்.
மொத்தத்தில் உலகப் பொருளாதாரத்தையே சந்திரன் மாற்றி விடும்.
யார் இதை முந்தி எடுக்கப்போகிறார்களோ அவர்களே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிப்பர்.
ஹீலியம் 3
பிரபல ரஷிய விஞ்ஞானி குக்கின்ஸ்கி என்பவரை நாஸா அழைத்து தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டது.
ஏன்?
இவர் சந்திரனில் மட்டுமே அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கும் ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் கூறினார்.
குக்கின்ஸ்கி கூறிய பொருள் ஹீலியம் – 3
இது பூமியில் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. பூமி முழுவதும் தேடிப் பார்த்தால் கூட கிடைப்பது சில கிலோகிராம் தான்.
சந்திரனில் ஒரு மீட்டர் ஆழத்தில் இது ஏராளமாகக் கிடைக்கிறது என்பது இன்னும் ஒரு சுவையான செய்தி.
இது ஒருபுறமிருக்க, ஓடுபாதையைத் தேர்ந்தெடுத்து ராக்கட்டை செலுத்துவது, சோதனைகளை செய்து முடிவுகளைப் பெறுவது, விண்வெளி நிலையத்தில் எடையற்ற நிலையில் பறந்தவாறே இருப்பது, உணவு உட்கொள்வது – இவையெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள்.
இதையெல்லாம் தாண்டினால் பெண்கள் விண்வெளி நிலையத்தில் இருப்பது, விண்வெளியில் செக்ஸ், சந்ததிப் பெருக்கம் ஆகியவை பற்றி சிந்திக்கலாம்.
இவ்வளையும் மனதில் அசை போட்டு காயை நகர்த்தினார் விக்ரம் சாராபாய்.
to be continued………………………….
tags-விக்ரம் சாராபாய்