Post No. 13,984
Date uploaded in London – 8 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வேதம் ஓதிய எருமை மாட்டுக்கு சமாதி என்ற கட்டுரை, நேற்று வெளியானது. அது தொடர்பான கட்டுரை இது.
மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள் (Post.13,984)
தமிழ் நாட்டில் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் சரிதத்தை அறியாதோர் மக்கள் அல்ல; மாக்கள். அதே போல ஞானேஸ்வர் சரிதத்தை அறியாதோர் அறியாமையின் சின்னங்கள்தான். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஏற்றிய தீபம் இன்றும் அழியாமல் சுடர் ஒளி வீசிப் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு தினங்களில் பண்டரீபுரத்துக்கு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சாரி சாரியாக பக்தர்கள் கூட்டம் வருவதையும் அவர்களின் பஜனை கோஷங்களையும் இன்றும் கேட்கலாம்; காணலாம். அதுமட்டுமல்ல; ஞானேஸ்வரி என்ற பெயரில் வழங்கும் பகவத் கீதை பேரூரைச் செய்யுட்களை பட்டி தொட்டிகளில் கேட்கலாம். அவரது சீடர்கள் பாடிய அபங்கங்கள் என்னும் கீர்த்தனைகளை மகாராஷ்டிரம் மட்டுமின்றி நாடு முழுதும் நடக்கும் கச்சேரிகளிலும் கேட்கலாம்.
யார் இந்த ஞானேஸ்வர் ?
ஞானேஸ்வரின் தந்தையின் பெயர் — விடோபா அல்லது விட்டல் பந்த்;
தாயின் பெயர்— ருக்மாபாய்;
ஞானேஸ்வரின் சகோதர, சகோதரிகள்- நிவ்ருத்தி நாத் , சோபான தேவ், முக்தா பாய்
அவருடைய காலம் –
நிவ்ருத்தி – 1273 CE
ஞானேஸ்வர் –1275 CE
சோபான — 1277 CE
முக்தாபாய் – 1279 CE
நான்கு அவதாரங்கள்
நிவ்ருத்தி – சிவனின் அம்சம்
ஞானேஸ்வர் — திருமாலின் அம்சம்
சோபான – பிரம்மாவின் அம்சம்
முக்தாபாய் – சரஸ்வதியின் அம்சம்
*****
ஞானேஸ்வரின் தந்தை விட்டோபாவுக்கு சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம் அதிகம்;பெற்றோர்கள் திருமணம் பற்றிப் பேசியதையும் தட்டிக்கழித்து, தல யாத்திரை செய்வதாகப் புறப்பட்டார். அலங்காவதி என்ற நகரினை அடைந்த பொழுது சீதோபந்த் என்பவர் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். அவருடைய மகள் ருக்மாபாய் விட்டோபா மீது காதல் கொண்டாள். விட்டோபா புறப்பட்ட தருணத்தில், பின்னால் ஓடிவந்து என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று மன்றாடினாள்; அவர் மறுக்கவே கூச்சலும் குழப்பமும் உண்டானது ஆயினும் சம்சார சாகரத்திலிருந்துத் தப்பித்து காசிக்குச் சென்று ஸ்ரீபாத சுவாமிகள் என்பவரைக் குருவாக ஏற்று தவம் புரிந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீபாதர் தல யாத்திரைக்குப் புறப்பட்டு அலங்காவதிக்கும் வந்து சேர்ந்தார்; அப்பொழுது தந்தையுடன் சென்ற ருக்மாபாய் அவரை நமஸ்கரித்து கண்ணீருடன் நின்றாள்; கல்யாணம் நடக்க வேண்டும் என்று கெளரி விரதம் இருந்ததன் நற்பயன் கிட்டியது; அவளை பார்த்த ஸ்ரீபாத சுவாமிகள் உனக்குத் திருமணமும் நடக்கும்; நான்கு குழந்தைகளும் பிறக்கும் என்று ஆரூடம் கூறினார். அப்போது அவளது தந்தை சீதோபந்த் முன்னர் நடந்த கதைகளைச் சொன்னார்.
ஸ்ரீபாதருக்குத் தூக்கிவாரிப்போட்டது இவளை மறுத்துவிட்டுச் சென்ற விட்டோபாதான் தன்னிடம் சந்நியாசம் பெற்றவன் என்று அறிந்து காசிக்குச் சென்றவுடன் விட்டோபா, உடனே ஊருக்குப் போய் ருக்மாபாயை மணந்து கொள் என்றார் ;
சுவாமி, துறவறம் ஏற்ற நான் எப்படி மீண்டும் இல்லறத்தில் புக முடியும்? வேண்டாமே! என்று கெஞ்சினார்.
இது குருவின் கட்டளை; ஆகவே இதை நிறைவேற்றுவதே உன் கடமை என்று வலியுறுத்தவே அவரும் ருக்மாபாயை மணந்தார; நான்கு பிள்ளைகளைப் பெற்றார். அவர்களில் ஒருவர் ஞானேஸ்வர் ; ஊருரே அவர்களை வெறுத்தது. சன்யாசி எப்படி மணக்கலாம் என்று சொல்லி ஜாதிப் பிரஷ்டம் செய்து விலக்கி வைத்தனர். பிரமணர்களுக்குரிய சடங்குகளை செய்துவைக்க மறுத்தனர்; எல்லா வகையிலும் அவமானம் செய்தனர் ;அந்தக்குடும்பமே காட்டுக்குள் குடிசைபோட்டு வசிக்கும் அவல நிலை ஏற்பட்டது.
*******
முதல் அற்புதம்
ஞானேஸ்வர் இறைவனின் அவதாரம்; சிறு வயதிலேயே ஞானி ஆனவர். முதலில் சீதோபந்த்துடன் வாழ்ந்தார் அவருடன் ஒரு விருந்துக்குச் சென்றபொழுது திடீரென பிராமணர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இல்லறம் ஏற்ற சந்நியாசி வந்திருக்கிறான்; அவனுடன் நாம் சாப்பிடக்கூடாது எல்லோரும் எழுந்து போவோம் என்றார்; உடனே உண்மைப் பிராமணன் யார்? என்ற வாக்குவாதம் துவங்கியது . கைகலப்பு ஏற்படவே ஞானேஸ்வர் தடியை எழுத்துச் சுழற்றினார். எல்லோரும் பயந்து ஓடி ஒளிந்தனர் . பலருக்கு அடியும் விழுந்தது; இதற்குள் மாமனார் சீதோபந்த் மயக்கம் போட்டு விழுந்தார் பிராமணர்கள் அரசனிடம் முறையிடவே விசாரணை துவங்கியது. அரசன் முன்னால் ஞானேஸ்வர் விநிறுத்தப்பட்டார். அவருக்கு வயது எட்டுதான் . அவருடைய ஆன்மீக வாதங்களைக் கேட்ட அரசன் அசந்தே போனான். இவன் சிறுவன் அல்ல; ஞானி என்று அவனை அழைத்து தழுவிக்கொண்டார். பொன்னும் பொருளும் கொடுத்து காட்டில் வாழும் அவரது தந்தை விட்டோபாவை அழைத்து வாருங்கள் என்று பல்லக்கினை அனுப்பினார். மந்திரியுடன் குடும்பத்தையே, பிராமண குருவைச் சந்த்தித்து இவர்கள் பிராமணர்களே என்று சர்ட்டிபிகேட் வாங்க அனுப்பினார். பைதான் என்னும் பிரதிஷ்டான நகருக்குச் சென்ற பொழுது வாக்குவாதம் ஏற்ப்பட்டது. எருமை மாட்டின் தலையில் கை வைத்து வேதம் ஓத வைத்தார் ( இதை முந்தைய கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன் )
*****
இரண்டாவது அற்புதம்
ஒரு அந்தணர் சிரார்த்தச் சடங்கினைச் செய்வதற்கு காத்திருந்தார்; அந்தணர்கள் உரிய நேரத்தில் வரவில்லை; ஞானேஸ்வர் அங்கே இருந்தார் . விண்ணுலகிலிருந்த பித்ருக்களையே நேராகத் திவசத்திற்கு வந்து சேருமாறு அழைத்தார். சச்சித்தானந்த பாலா என்ற இறந்த மனிதரை உயிர் பெறச் செய்தார் ; இப்படி எண்ணற்ற அற்புதங்கள்; அவர் பிறவிச் சித்தர்
ஞானேஸ்வர் புகழ் எங்கும் பரவியது இருபத்திரண்டு வயதே ஆன அவர் ஏராளமானோரை பக்தர்களாக மாற்றினார்; நிறைய சீடர்களும் சேர்ந்தனர். அவர்களில் குறிப்பிட்டத் தக்கவர் நாமதேவர். ஒரு நாள் சீடர்களை அழைத்து, தான் சமாதியில் அமரப் போவதாகவும் செங்கற்களை வைத்துச் சுவர் எழுப்பி மூட வேண்டும் என்றும் சொன்னார்; பக்கதர்களும் சீடர்களும் தயங்கினர்; பின்னர் அவர் வலியுறுத்தவே அப்படியே செய்தனர். புனே நகரில் ஞானேஸ்வர் சமாதி இருக்கிறது .
சகோதர சகோதரிகள் நாலவரும், மதுரை ராமேஸ்வரம் வரை புனித யாத்திரையை மேற்கொண்டனர். நாமதேவரும் உடன் சென்றார். வர்கரி சம்பிரதாயத்தை இவர்கள் உருவாக்கினார்.
சமாதிகள் உள்ள இடங்கள்
சோபனா சமாதி- கர்ஹா நதிக்கரையில் சாஸ்வத் ;
நிவ்ருத்தி சமாதி- – த்ரயம்பகம்;
முக்தாபாய் சமாதி- – புயற்காற்றில் ஐம்பூதங்களில் கரைந்தார் ;
ஞானேஸ்வர் சமாதி- – புனே நகரம் .
ஞானேஸ்வரின் சகோதரி முக்தாபாயும் , அண்ணன் நிவ்ருத்தியும் தம்பி சோபனா தேவும் பெரிய ஞானிகள்; அவர்கள். அனைவரும் அடுத்தடுத்து சமாதி ஆனார்கள். மகாராஷ்டிர பக்தர்கள் இன்றும் நால்வரையும் வணங்கித் துதி பாடுகின்றனர் ; அவரது கீதங்களும் எங்கும் முழங்குகின்றன.
ஆலந்தீ புனே நகரிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் இருக்கிறது .ஆலந்தி(ஆநந்தி என்பதன் மருவு) என்னும் இடத்தில் இருக்கிறது ஆண்டுதோறும் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் யாத்திரை புறப்பட்டு பண்டரீபுரத்துக்குச் செல்கின்றனர்; அது கண்கொள்ளாக் காட்சி. எல்லோரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி விடும்
****
ஞானேஸ்வரி நூலின் சிறப்பு – ஞானேஸ்வரின் நூலுக்கு அவர் இட்ட பெயர் பாவார்த்த தீபிகா ; மக்கள் அதை ஞானேஸ்வரி என்று அழைக்கின்றனர் ; அதில் பத்தாயிரம் சுலோகங்கள் உள்ளன. அது பகவத் கீதையின் விளக்க உரை ஆகும்.
அவர் செய்த வேறு நூல்கள்
ஹரிபாட் – இதில் 28 அபங்கங்கள் / கீர்த்தனைகள் உள.
அம்ருதானுபவ — இது சைவ வேதாந்த காவியம்.
பதிமூன்றாம் வயதிலேயே கீதா ஞானேஸ்வரி விளக்க உரையை எழுதினார்.; ப்ரவாரா நதிக்கரையில் நிவாஸ என்னும் ஊரில் அது நிறைவு பெற்றது
—SUBHAM—
TAGS- ஞானேஸ்வரி, நிவ்ருத்தி ,ஞானேஸ்வர் ,சோபான ,முக்தாபாய், அற்புதங்கள்