
Post No. 14,004
Date uploaded in Sydney, Australia – 19 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழில் கிடைத்துள்ள பழைய நூல் தொல்காப்பியம் என்பதே பெரும்பாலோரின் கருத்து . அதில் அந்தணர், பார்ப்பனர் பற்றியும் வேதங்களில் உள்ள உச்சரிப்பு பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அந்தணர் கைகளில் ஏந்தும் மூன்று கிளையுள்ள முக்கோல் அந்தணர் பற்றி நாம் தொல்காப்பியம் முதல் கம்பராமாயணம் வில்லி பாரதம் வரை காண்கிறோம்.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
என்று ஒரு சூத்திரம் கூறும்.
எல்லா பிராமணர்களும் முக்கோல் ஏந்துவதை நாம் எந்தக் காலத்திலும் கண்டதில்லை. ஆயினும் சந்யாசிகள், ஜீயர், சங்கரா ச்சார்யார்கள் எப்போதும் முக்கோலைப் பிடித்த வண்ணமே வலம் வருகிறார்கள்; இன்றும் இதைக் காண்கிறோம் .ஆக இந்த இடத்தில் அந்தணர் என்பது பிராமணர்அல்ல, சந்யாசிகள் என்பது தெளிவு.
ஆயினும் அந்தணர் என்ற சொல் முக்கோல் ஏந்தாத பிராமணர்களையும் குறிக்கும் என்பதைத் தொல்காப்பிய பாயிரமும் புறநானூறும் ஏனைய சங்க நூல்களும் நமக்கு காட்டும்.
நூல் என்பது முப்புரிநூல், கரகம் என்பது கமண்டலம், முக்கோல் என்பது த்ரிதண்டம் , மணை என்பது ஆமை மணை என்று விளக்குகிறார்கள்
பூணூல் இல்லாத சன்யாசிகளாக இருந்தால் வேதத்தின் முடிவை அறிந்தோர் என்றும் கொள்ளலாம்
தொல்காப்பிய பாயிரம் பாடிய பனம்பாரனார் நான் மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சாரியார்தான் தொல்காப்பியருக்கு சர்டிபிகேட் கொடுத்தார் என்று சொல்கிறார். அந்த நான்மறை , அந்தணர் என்பதுடன் சேர்ந்து வருவதை சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண்கிறோம் ..
சன்யாசிகளைக் குறிக்கையில் நான்மறை/ நால்வேதம் பற்றிப் பேசுவதில்லை; ஏனெனில் அவர்கள் வேதத்தின் அந்தத்தைக் கண்டவர்கள்; அந்தம் என்றால் முடிவு. அதனால் அவர்களை வேதாந்திகள் என்கிறோம்.
அத்வைத சந்யாசிகள் ஏக தண்டம் / ஒரே தண்டம் கொண்டு செல்வார்கள். முப்பகையை வென்ற கருத்துடன் இறைவன் ஒருவனே/ சர்வம் பிரம்ம மயம் என்பதையும் இது உணர்த்தும்.
தண்டத்தை எடுத்துச் செல்வதன் பின்னுள்ள கருத்து ஒன்றே.

முக்கோல் ஏந்துவது எதற்காக?
காமம், க்ரோதம் லோபமென்ற மூன்று தீய குணங்களை வென்றதைக் காட்டும் அடையாளம் முக்கோல்.
மண், பெண், பொன் ஆசைகளைத் துறந்தவர்கள் என்றும் சொல்லலாம்.
திருமழிசை ஆழ்வாரும் மூங்கில் மூன்று தண்டு என்று த்ரிதண்டத்தை பாடுகிறார்.
வைஷ்ணவர்கள் ஜீவன் , பிரம்ம, ஐக்கியத்தை முக்கோல் குறிப்பதாகச் சொல்லுவார்கள்
சங்க நூலான கலித்தொகையில் இரண்டு இடங்களில் முக்கோல் வருகிறது.
ஒரு பெண் காதலனுடன் ஓடிவிட்டாள் ; செவிலித் தாய் அவளைத் தேடிவரும்போது
எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
உடைய சந்நியாசியை செவிலித்தாய் கண்டு வினவுகிறாள்.அங்கும் அந்தணர் என்ற சொல் வருகிறது.
கையில் கரகமும் குடையும் முக்கோலும் ஏந்திக்கொண்டு , இறைவன் திருவடிகளையே நினைக்கும் நெஞ்சத்தை உடையவர்ககளாய், ஐம்பொறிகளை அடக்கியவர்களாய் உள்ள அந்தணர் என்பது முழுப் பாட்டின் பொருள்
கலித்தொகையில் இன்னும் ஒரு இடத்தில்
முக்கோல் கொள் அந்தணர் முதுமொழி நினைவார் போல்
என்றும் காண்கிறோம்.
இங்கு ஓம் என்னும் பிராணவத்துக்கு முதுமொழி என்ற சொல் பயிலப்பட்டுள்ளது
முல்லைப்பாட்டு என்னும் சங்க நூலில் போர் வீரர்கள் பற்றிய காட்சியைப் புலவர் வருணிக்கிறார். அவர்கள் அம்பினை நட்டு அதன் மீது அம்பராத் துணியைப் போட்டிருந்தது படிவப் பார்ப்பான் முக்கோல் மீது காவி வஸ்திரத்தைப் போட்டு வைத்தது போல இருந்ததாம்..
இவைகளைப் பார்க்கும்போது தொல்காப்பிய காலம் முதல் வில்லி பாரதம் காலம் வரை குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்கோல் என்னும் த்ரி தண்டம் இருந்தது வெள்ளிடை மலை.
ராவரணன் சந்நியாசி வேடம் தரித்து வந்ததைக் ஆரண்ய காண்டத்தில் பாடுகையில் கம்பனும்,
தண்டோரு மூன்று முப்பகைத் தளையரி தவத்தவர் என்று வருணிக்கிறார்.

வால்மீகியும் ராவணன் குடையுடன் வந்ததைக் குறிக்கிறார் (சைத்ரீ= குடை)
காமம் க்ரோதாம் லோபம் (காமம் , வெகுளி, மயக்கம்) அல்லது மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகியன முப்பகை என்று திருவள்ளுவரும் பாடியுள்ளார்.
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்– குறள் 360
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
ஆக தொல்காப்பியர் காலம் முதல் இமயம் முதல் குமரி வரை ஒரே இந்து நாகரீகம் நிலவியதை நாம் சங்க நூல்கள் மூலம் அறிகிறோம்.
–SUBHAM—
TAGS-முக்கோல் அந்தணர் , படிவப் பார்ப்பான், த்ரிதண்டம், சந்யாசிகள் , மூன்று பகை,